‘அரவான்’,’காவியத்தலைவன்’என்கிற இரு அருவாமனை படங்களுக்கு அப்புறம், அதாகப்பட்டது 7 ஆண்டுகால இடைவெளி வனவாசத்தை முடித்துக்கொண்டு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் இந்த ‘ஜெயில்’.
வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களது ஆதி நிலம் பிடுங்கப்பட்டு ஜெயில் போன்ற வாழ்க்கையை வாழ்கிற சேரிப்பகுதி மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறேன் என்று நூற்றுக்கணக்கான பேட்டிகளிலும், தனது முகநூல் பதிவுகளிலும், அவ்வளவு ஏன் பத்திரிகையாளர் காட்சி போடப்பட்ட பிறகு ‘இந்தப்படத்தை அந்தக் கோணத்தில் பாருங்கள்’என்று ஒரு அறிக்கையும் அனுப்பியிருக்கிறார் அவர்.
ஆனால் இரண்டே கால் மணி நேரப் படத்தில் வசந்த பாலனின் சமூக அக்கறை வெளிப்பட்டிருப்பதென்னவோ வெறும் மூன்றே நிமிடங்கள்தான். படம் துவங்கும் தனது வாய்ஸ் ஓவரில் கொஞ்சமும், படம் முடியும்போது நியூஸ் பேப்பர் கட்டிங்கள் கொஞ்சமும் தான் சமூக அக்கறைஸ்.
கதை துவங்கும்போதே ஓடும் ஆட்டோ ஒன்றில் ஓசிச் சவாரிக்கு ஓடி ஏறும் ஜீ.வி.பிரகாஷ் ஒரு ஐ.டி.பெண்ணிடம் விலை உயர்ந்த செல்போனை ஆட்டயப் போடுகிறார். அப்புறம் கஞ்சா விற்கும் தனது நண்பனை ஜெயிலி இருந்து பெயிலில் எடுக்க இவரும் கஞ்சா விற்கிறார். பத்துப்பைசா பெறாத காரணங்களுக்காக தனது எதிர் குரூப் ஆட்களிடம் வெட்டுக்குத்தில் இறங்குகிறார். நடுநடுவே கதாநாயகியிடம் காதல் லூட்டி அடித்து ‘நீ மிஸ்ஸா மிஷஸ்ஸா? என்று நண்பர்களுடன் சேர்ந்து ஈவ் டீஸிங் செய்கிறார். இப்படி படம் முழுக்க ஒரே க்ரைம் சம்பவங்கள். கெட்ட வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன.
இவர்கள் இப்படி இருக்கக்காரணமே இவர்களது ஆதி நிலம் பிடுங்கப்பட்ட விருப்பமில்லா இடங்களில் குடியமர்த்தப்பட்டதுதான் என்று தான் சொல்ல விரும்பியிருப்பதாக சொல்கிறார் இயக்குநர். ஆனால் படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி கூட இல்லை என்பதே நிதர்சனம்.
அதற்காகவே இதை ஒரு மொக்கைப் படம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஹைடெக் மேட்டுக்குடிவாலவான ஜீ.வி.பிரகாஷ் இப்படத்தில் அப்படியே அச்சு அசல் சேரிப்பையனாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி ப்ரணிதாவும் அட்டகாசம் செய்திருக்கிறார். காவல் துறை அதிகாரிக்கு உள் மூலம், வெளிமூலம் இருக்கிற சமாச்சாரத்தை அவ்வளவு ஆளமாக ஏன் சொன்னார்கள் என்பதை எவ்வளவு நீளமாக யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் காவல்துறையின் நரித்தனத்தை மிக யதார்த்தமாக பல காட்சிகளில் உரித்து வைத்திருக்கிறார் வசந்தபாலன். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜீ.வி.இசையும் கதையோட்டத்தின் இரு கரைகளாக பலம் சேர்க்கின்றன.