இந்த ஐ.டி.வாலாக்கள் மீது தமிழ் சினிமாக்காரர்களுக்கு அப்படி என்னதான் கோபம் என்று தெரியவில்லை. அவர்களது மானத்தை வாராவாரம் ஒரு படம் மூலம் தவணை முறையில் சந்தி சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி கடந்த வாரம் நடந்த சம்பவம் ‘ராஜவம்சம்’படத்தில் நடிகர் சசிக்குமாரை ஐ.டி. எக்ஸ்பர்ட்டாகக் காட்டியது.
இதோ இந்த வாரம் ‘பேச்சிலர்’படம். ஐ.டி.காரர்களின் அந்தரங்கத்தைப் பேசுகிறேன் என்கிற பெயரில் அவர்கள் சதா குடிப்பது, குட்டிகளுடன் லூட்டி அடிப்பது, கண்ட இடத்தில் வாந்தி எடுப்பது, ஓவர் போதையில் லேப்டாப்பில் உச்சா போவது என்று பகுத் அச்சாவாகப் போகிறது இந்த பேச்சிலர்.
சரி மற்ற பஞ்சாயத்துகளுக்குப் போவதற்கு முன் இந்த பலான படத்தின் கதையைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்…
கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க வருகிறார் நாயகன் டார்லிங் (ஜி.வி.பிரகாஷ்). யார் எது சொன்னாலும் தான் செய்வதை மட்டுமே செய்யும் ஒரு இளைஞன். நண்பர்களின் ஐடி அலுவலகத்திலேயே வேலைக்குச் சேரும் அவருக்கு நண்பனின் தோழியான சுப்பு (திவ்யபாரதி) மீது ஒருவிதமான புவி ஈர்ப்பு ஏற்படுகிறது. சுப்புவின் தோழி வெளிநாடு செல்லவே தோழியின் காதலனான தனது நண்பரின் பரிந்துரையின் பேரில் சுப்புவின் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறார் நாயகன். தங்க அனுமதி கிடைத்தவுடன் அவர் செய்யும் முதல் காரியமே ஒரு மெடிக்கல் ஷாப்பில் போய் காண்டம் பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வது.
ஆரம்பத்தில் நாயகன் மீது ஈடுபாடின்றி இருக்கும் சுப்புவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் சுப்பு, தான் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இதனை நாயகனிடம் தெரிவிக்கும்போது அதிர்ச்சி அடையும் அவர், கர்ப்பத்தைக் கலைக்குமாறு சுப்புவை வற்புறுத்துகிறார். தன் வயிற்றில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என்பதால் அதனைக் கலைக்கத் தயங்கும் சுப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கிறார். இருவருக்குமிடையே பிரிவு ஏற்படுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே இந்த மூனு மணி நேர டார்ச்சர்..
மெடிக்கல் ஷாப்பில் வாங்கி வைத்திருந்த காண்டம்களை கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவதற்கு முன்பே ஜீ.வி.பயன்படுத்தியிருந்தால்? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் அதைப்பயன்படுத்தி இருந்தால் நம்மை இப்படிப் படுத்தி எடுத்திருக்கமாட்டார்கள். ஆனால் விதி யாரைவிட்டது?
ஜீ.வி.பிரகாஷ் வழக்கம்போல் தனது அழுது வடியும் மூஞ்சியால் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகி திவ்யபாரதி, ஜீ.வி.யால் மேட்டர் பண்ணப்படுவதற்கு முன்பு செம கியூட்டாகவும் அப்புறம் ரொம்ப சுமாராகவும் ஆகிவிடுகிறார். இவர்கள் தவிர்த்து ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், நக்கலைட்ஸ் அருண்குமார், தனம் என படத்தில் துணைக் கதாபாத்திரங்களாக வரும் அனைவருமே எந்தவித மிகையும் இன்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜீ.வி.க்கு மூன்றே மூன்று மாதங்களுக்கு ஆண்மை இழக்கச்செய்யும் ஒரு விநோத காயடிப்பான் பாத்திரத்தில் டைரக்டர் மிஷ்கின் வருகிறார். கூலிங் கிளாஸ் போடாமல் வந்த வகையில் அவரது கொடூர நடிப்பை மன்னிக்கலாம்.
படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். தனது ரசனையான ஒளிப்பதிவால் தனித்து நிற்கிறார்.
க்ளைமேக்ஸில் ஜீ.வி. திருந்திவிட்டார் என்று நன்றாகத் தெரிந்த பின்பும் ஒரு கவன ஈர்ப்புக்காக, சர்ச்சைகள் கிளம்பட்டும் என்பதற்காக கதாநாயகியின் நடுவிரலை உயர்த்திக்காட்டி படத்தை முடிக்கிறார் இயக்குநர். இந்தப் படத்துக்கும் காட்ட வேண்டியது அதே நடுவிரலைத்தான்.