எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்கச் செல்லும் சில படங்கள் நம்மை சில சமயங்களில் வியப்பில் ஆழ்த்திவிடும். இந்த ‘மட்டி’ [ஒரிஜினல் மலையாளம்] நிச்சயம் அந்த வகையறாப் படம்தான்.
கதை என்று பார்த்தால் சினிமா டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதிவிடக்கூடிய அளவுக்கு சின்னதுதான். ஆனால் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நம்மை படம் நெடுக பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி. இவர்கள் இருவரும் ஒரு பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார்கள். கார்த்தி கல்லூரி படிக்கும் போது மட்டி ரேசில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர். மட்டி ரேசில் தோற்றவர் கார்த்தியை தோற்கடிக்க சபதம் எடுக்கிறார். இந்த சபதத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தம்பி கார்த்தியை காக்க அண்ணன் ரிதன் களமிறங்குகிறார். இறுதியில் அண்ணன், தம்பி இருவரும் ஒன்று சேர்ந்து வில்லனை எதிர்த்தார்களா? மட்டி ரேசில் ஜெயித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள். ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். தம்பியாக கார்த்தி அண்ணனை முறைப்பதும், கிளைமாக்சில் அண்ணனுடன் இணைந்து வில்லனை எதிர்க்கும் இடங்களில் ஈர்க்கிறார். ஆனால், இரண்டு பேர் நடிப்பில் கொஞ்சம் சுமார்தான் என்றாலும் நிஜ ஆக்ஷன் நாயகர்களாக கம்பீரம் காட்டுகிறார்கள். நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை இல்லை.
மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல். ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப் பார்த்திருக்கிறோம்..மலையாளத்துக்கு, தமிழுக்கு இந்த ஆக்ஷன் முற்ரிலும் புத்தம் புதுசு.
படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் சும்மா பேருக்கு ஒன்றிரண்டு காதல் காட்சிகளை மட்டுமே வைத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் ஒரு ராவான கதையில் பயணித்தது.
காடு மலை என தாறுமாறாக வேகமாக செல்லும் கார்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து இருக்கும், ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷுக்கு ஆளுயரத்துக்கு ஒரு பொக்கே அளிக்கலாம். கே. ஜி. எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசை படத்தின் பிரம்மாண்டத்தை பறைசாற்றுகிறது. ஆனால் சில இடங்களில் அது வெறும் இரைச்சலாக மட்டுமே இருப்பது சின்ன பலவீனம்.
ஆக்ஷன் பிரியர்கள் அதிலும் குறிப்பாக ரேஸ் பட விரும்பிகள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா இந்தப் படம்.