நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது வாழ்நாளில் ஒரே ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குவோர் பலரும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாய் நம்பினார்கள்.
காரணம் ஒரு முதலிரவில் நடக்கக்கூடிய கசமுசாதான் மொத்தப்படமுமே என்கிற கிளுகிளுப்பான ஒன்லைன். ஆனால் போங்க பாஸ் நீங்களும் உங்க முதலிரவும்’என்று கொட்டாவி விட வைத்துவிட்டார்கள் ரசிகர்களை.
கதை இதுதான். சாந்தனுவும் அதுல்யா ரவியும் திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் செல்ல செம மூடுடன் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சற்றுமுன் சாந்தனுவை அழைக்கும் பாக்கிராஜ் தாத்தா ‘இன்று ஒரு நாள் ‘சம்பவம்’நடந்துவிடாமல் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். அப்படி மீறி நடந்தால் பரம்பரையின் 300 கோடி சொத்தை அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவேன். அதுபோக இந்த உள்குத்து சமாச்சாரத்தை மனைவியிடம் சொல்லாமல் சமாளிக்கவேண்டும் என்று ஒரு கண்டிஷனும் போடுகிறார்.
இன்னொரு பக்கம் அதுல்யாவின் அத்தை ஊர்வசி ‘இன்றே சம்பவம்’நடக்காமல் போகும் பட்சத்தில் நம் குடும்பத்தில் பலருக்கு நடந்தது மாதிரி உனக்கும் புத்திர பாக்கியம் இல்லாமல் போய்விடும். அதனால் இன்றே சாந்தி முகூர்த்தம் நடந்தே தீரவேண்டும்’என்கிறார். அட செம மூடு படமா இருக்கே என்று தோணுமே?
ஆனால் இந்த சுவாரசியான அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரத்தை எப்படியெல்லாம் அசுவாரசியப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு செய்து நம்மை சோதிக்கிறார்கள்.
படத்தின் ஒரே ஆறுதல் அம்சம் பூந்தியிலிருந்து இப்பதான் பிடித்த ஃப்ரெஷ் லட்டு போல இருக்கும் அதுல்யா ரவி. சாந்தனுவும் நடிப்பில் கொஞ்சூண்டு தேறியிருக்கிறார்.
முழுநீள காமடி மற்றும் காமநெடிப் படம் என்று சொல்லப்பட்ட இப்படத்தில், யோகிபாபு தொடங்கி மனோபாலா வரை ஒரு அரை டஜன் காமெடி தடியர்கள் இருந்தும் வாய்விட்டு சிரிக்கவைத்த ஒரே கேரக்டர் தயாரிப்பாளர் ரவீந்தருடைதுதான். ஒரு மிட் ஷாட் வைத்தாலே மொத்த ஸ்கிரீனையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் பரந்துபட்ட தேகம் கொண்ட அவர், ‘படம் எடுத்து நஷ்டப்பட்டு நஷ்டப்படு பழகிப்போச்சு’என்று வெள்ளந்தியாப் பேசும்போது பரிதாபத்தையும் மீறி சிரிக்கமுடிகிறது.
மொத்தத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் உப்பு, உறைப்பு,காரமில்லாத சப்ஸ்தான்..
மிக சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் ‘இப்போது ரிலீஸாகிற சில படங்களைப் பார்க்கும்போது மன உளைச்சலே வந்துவிடுகிறது. பேசாமல் அவர்கள் மீது பொதுநல வழக்கு போட்டுவிடலாமா என்கிற அளவுக்கு கோபமே வருகிறது என்று குமுறியிருந்தார். அவரது அந்த ஆக்ரோஷமான ஸ்டேட்மெண்ட் சொந்த புத்திரன் படத்துக்கே பொருந்தி வருவதுதான் ஹைலைட்.