‘திரவுபதி’ என்ற சாதிய காவியப் படத்தை இயக்கிய மோகன்.ஜி நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன் படி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது அடுத்த படத்தில் நாயகனாக செல்வராகவன் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
செல்வராகவனின் இந்த முடிவால் வலையுலகம் கவலையுலகமாக மாறியுள்ளது. தம்பி தனுஷ் ‘கர்ணன்’மாதிரி சாதி ஒழிப்புப் படங்களில் நடித்துக்கொண்டிருக்க அண்ணன் செல்வராகவன் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி நாராசமான முடிவை எடுத்துள்ளாரே’ என்று கமெண்ட்கள் குவிகின்றன.
இன்னொரு பக்கம் செல்வராகவன் இந்த முடிவை வேதனையின் உச்சத்தில்தான் எடுத்திருக்கிறார் என்று நம்பும்படி, இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது ட்விட் ஒன்றையும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
இதோ மோகன் ஜி சந்திப்பு குறித்து செல்வராகவன் வெளியிட்ட ட்விட்,… தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.