‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. ‘பாகுபலி’க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஆர்ஆர்ஆர்’ கவனம் ஈர்த்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால், கரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு திடீரென தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டு வருவதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை வரும் மார்ச் 18ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும், அப்படி அந்த தேதியில் வெளியிடும் சூழல் ஏற்படாவிட்டால் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்துடன் தள்ளிவைக்கப்பட்டுள்ள ‘வலிமை’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.