2022ல் தனது 46 வது ஆண்டு சினிமா பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் இசைஞாநி என்றைக்கும் இசையில் ’இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ’வுக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிமாறன் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் ராஜாவின் பாசறைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் ‘விரும்புகிறேன்’,’திருட்டுப்பயலே’ போன்ற படங்களையும், இரண்டு இந்திப்படங்களையும் இயக்கியுள்ள சுசி கணேசனும் ராஜாவே சரணம் என்று வந்து சேர்ந்திருக்கிறார்.
4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’.
இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன்.
இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளியன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .
இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறியதாவது :’கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது ” வஞ்சம் தீர்த்தாயடா ” படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.
என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.
80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக ‘இருக்கும்.
ஒரு இசை மாமேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை ” என்றார்.
78வது வயதில், 46 ஆண்டு கால இசைப்பயணத்தில் ஒரு மனிதன் அள்ள அள்ளக் குறையாத அமுதம் போல் இசையை வாரி வழங்கிக்கொண்டிருப்பது தமிழர்களாகிய நாம் செய்த பாக்கியன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…