தமிழின் முன்னோடியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் காவிய படைப்பான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் தலைப்பை புதிய படம் ஒன்றுக்கு சூட்டி அதன் முதல் பார்வையை கமல் வெளியிட்ட நாளிலிருந்தே அத்தலைப்பை இடுவது ஜெகேவின் நாவலுக்கு செய்யும் துரோகம். இந்த செயலின் மூஊஊஊஊலம் ஜெகேவின் நாவல் தலைப்பு மறைக்கடிப்படும் அபாயம் உள்ளது என்று அவரது குடும்பத்தினர் தொடங்கி பல்லாயிரக்கணக்கானோர் குரல் எழுப்பினர்.
அதைப் பரிசீலிப்பது போல் நடித்த படத்தின் இயக்குநரும் குழுவினரும், தங்கள் பிடிவாதத்திலிருந்து சற்றும் இறங்கிவராமல், இதோ அடுத்த வார ரிலீஸுக்கு அதே தலைப்பை அறிவித்துள்ளனர். இத்தகவலை முறைப்படி ஜெயகாந்தன் குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் சோகம்.
‘சி.நே.சி.ம’படக்குழுவின் இச்செயலைக் கண்டித்து படத்தின் தலைப்பை மாற்றக் கோர வேண்டியது தமிழ் இலக்கியம் படித்த அத்தனை உள்ளங்களுக்கும் உள்ள கடமையாகும். எனவே இக்கணம் முதலே ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை எவ்வழியிலாவது பதிவு செய்யுங்கள்..
இதோ இது ஒளிப்பதிவாளர் விஜய்.கே.சக்கரவர்த்தியின் முகநூல் பதிவு…
ஏற்கனவே வெளிவந்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படத்தின் பெயரை, ஒரு புதிய படத்திற்கு வைக்கும் போது, தற்போதைய டிஜிட்டல் உலகில், டிஜிட்டல் சுவடுகளால் அந்த சிறந்த படைப்பு அழிந்து போகும் அபாயம் இருக்கிறது.ஒரு படைப்பாளியின் உண்மையான மரணம், அவனது படைப்பு அழிக்கப்படும்போதே நிகழ்கிறது.அந்த படைப்பாளி என் அப்பானாக இருந்தால், என்னால் எப்படி என் அப்பனின் கொலையை அனுமதிக்க முடியும்.அப்படித்தான் ஜெயகாந்தனின் பிள்ளைகள் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தலைப்பை முழுமனதாக எதிர்த்தார்கள்; அந்த படைப்பை அழிப்பதன் வழி, தங்களது தந்தையை கொலை செய்ய வேண்டாமென மன்றாடினார்கள்.விதிகளின்படி நடக்கிறோம் என்கிற பதில் வரலாம்.இது அறம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய விசயம்.இந்த அறமீறல் பற்றி பேசவேண்டிய பொறுப்பு ஜெயகாந்தன் குடும்பத்திற்கானது மட்டுமல்ல.மாறாக, கலையை, படைப்பை நேசிக்கும், ரசிக்கும் அனைவருக்குமானது.
இது ‘சில நேரங்களில் சில மனிதர்க’ளோடு முடிந்துவிடாது.நாளை மூன்றாம் பிறைக்கு நடக்கலாம், பராசக்திக்கும் நடக்கலாம்.சக படைப்பாளியோ, மூத்த படைப்பாளியோ, புதியவரோ, ஒரு படைப்பாளியின் படைப்பை மதிப்பதே கலைஞர்களின் அறம்.