ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். அது இயல்புதான்.
ஆனால் அந்தப் பிரபலங்களுக்கு நேரடியாக தொடர்பே இல்லாதவர்களை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வு பற்றி அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்களையும், பிதற்றல்களையும் வெளியிடுவது எந்தவிதத்திலும் கண்ணியமானது அல்ல.
இந்த உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பானது குடும்பம்தான். மிகப் பெரிய அரசியாக இருந்தாலும், சேவகியாக இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அவர்களின் குடும்பம்தான். அங்குதான் அவர்கள் எல்லையற்ற சுதந்திரத்தை உணர்வார்கள். அது உடைபடும்போது ஏற்படும் வலிகளையும், காயங்களையும் விவரிக்க இயலாது. பெற்றோர்களை பிள்ளைகள் பிரிவதும், மனைவியை கணவன் பிரிவதும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் சரிவது போலத்தான். பாதுகாப்பான ஒரு கோட்டை உடைவது போலத்தான். அதிலிருந்து மீள்வதும், அதே பாதுகாப்பை கட்டி எழுப்புவதும் அல்லது முற்றிலும் வேறொரு பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அது அவர்களின் வாழ்க்கை.
அவர்கள் திரைப்பிரபலங்கள் என்பதால் அவர்களின் வாழ்க்கையை நாம் அதிகமாகவே வேடிக்கை பார்க்கிறோம். ஊடகங்கள் அவர்களைப் பற்றி நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடலாம் என நினைப்பது பொறுப்பற்றத்தனம்.
பயில்வான் ரங்கநாதன் என்பரை வைத்துக் கொண்டு ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு விவகாரம் பற்றி மாலைமுரசு தயாரித்து வெளியிட்டுள்ள நிகழ்ச்சி பொறுப்பற்றதனத்தின் உச்சம். மிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி. பயில்வான் ரங்கநாதனுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதிக்கே கூட இன்னொருவரின் அந்தரங்கத்தைப் பற்றி பொதுவெளியில் பேச உரிமையில்லை.
மாலைமுரசுவின் எடிட்டருக்கு வன்மையான கண்டனங்கள். தயவு செய்து பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
உங்கள் நிகழ்ச்சியின் வாயிலாக ஒரே ஒரு பூச் செடி காப்பாற்றப்பட்டாலோ, ஒரே ஒரு சொட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டாலோ, ஒரே ஒரு மனிதன் உயிர் பிழைத்தாலோ, ஒரே ஒரு குடும்பம் ஒன்று சேர்ந்தாலோ அதுதான் வெற்றி. நீங்கள் இந்த நிகழ்ச்சியின் வழியாக என்ன சாதித்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
’தமிழ்சினிமா’ முகநூல் குழுவில் சிவக்குமார் பதிவு