நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு
காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது
ஆம், காந்தியின் சீடனாய் இருக்கும் எல்லோருக்கும் அச்சலுகை உண்டு, ஏன் என்றால் அதுதான் வெள்ளையன் தந்திரம்,காந்தி இருக்கும்வரை யாரும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என நம்பினான் வெள்ளையன்
1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் தங்கி இருந்தபொழுது “இந்திய துயரம்” எனும் புத்தகம் எழுதி ஐரோப்பாவில் இந்திய ஆதரவு திரட்ட தீர்மானித்தார், அதற்கு தட்டச்சு செய்ய ஒரு பெண் தேவைபட்டார்
அந்த பணிக்கு வந்தவள்தான் எமிலி , 23 வயதுதான் ஆகியிருந்தது. மொழிவளம் அவளுக்கு அபரிமிதமாக இருந்தது
நேதாஜி 38 வயதை எட்டியிருந்தார், அதுவரை அவர் தேசம் என்பதை தவிர ஒன்றையும் சிந்தித்தவர் அல்ல
ஆனால் பெண் எனும் சக்தி சாதாரணம் அல்ல, இந்திரனை விடுங்கள், விசுவாமித்திரர் முதல் ஏன் சிவனிடமே உடலில் பாதியினை கேட்டு அமர வைத்த பெண்ணுக்கான சக்தி நேதாஜியினை விடுமா?
உலகில் ஏன் எதற்கு என தெரியாத ஒரு ஈர்ப்பே பெண் மேலான ஒருவகை ஈர்ப்பு, அதற்கு காதல், காமம், பெண் பொறுக்கிதனம் என எத்தனை பெயர்கள் வைத்தாலும் அதன் ஒரே பெயர் ஈர்ப்புதான்
38 வயதில் நேதாஜிக்கு அந்த சோதனை வந்தது, சட்டென காதலில் விழுந்தார் அவரே சொன்னபடி “மலை உச்சியின் பனி சூரிய வெளிச்சம் கண்டதும் உருகுவது போல, என் இரும்பு மனம் உன்னிடம் உருகிவிட்டது”
எந்த பராமக்கிரசாலியும் காதலில் விழுவான், ஆனால் மறுநிமிடமே உறுதியான கொள்கையாளன் அதிலிருந்து எழும்பிவிடுவான், அதிலிருந்து வெளிவரமுடியாதவனால் சாதிக்க முடியாது
நேதாஜி இனி அவ்வளவுதான் என்றார்கள், நேதாஜியின் காதலால் ஒன்றே அவரின் போராட்ட வாழ்வினை முடிக்கும் சக்தி கொண்டது என்றார்கள்
.
ஆனால் நேதாஜி நாட்டை மறக்கவில்லை
எமிலி போஸை முழுக்க புரிந்திருந்தார் அதனால் முழு அரணாக இருந்தார், பலமாக இருந்தார்
இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் அனிதா, இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.
ஆம் வரலாற்றின் மிகபெரும் பெண் போராளியின் பெயரைத்தான் தன் மகளுக்கு சூட்டினார் போஸ், இந்தியாவிற்கு அவள் அப்படி போராட வெண்டும் என்ற கனவு இருந்தது
திருமணம் செய்து போஸும் எமிலியும் சேர்ந்திருந்தது வெறும் 3 ஆண்டுகளே, 1942ல் கடைசியாக தன் குடும்பத்தை சந்தித்தார் நேதாஜி
அதன் பின் யுத்தம் நேதாஜி மறைவு என காட்சிகள் வந்தன
ஆனால் எமிலி நேதாஜி நினைவோடே வாழ்ந்தாள், அவருக்காகவே வாழ்ந்தாள்
அவளின் பிற்கால பல தசாப்த வாழ்வு அந்த 3 ஆண்டு நினைவுகளிலேதான் கழிந்தது
நினைத்திருந்தால் இந்தியா வந்திருக்கலாம், நேதாஜிக்கு இருந்த பெரும் ஆதரவினை பெற்று பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கலாம்
சோனியா போன்றவர்களே அரசியல் செய்யும் இந்தியாவில் அவளுக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது,
ஆனால் அந்த புண்ணியவதி ஒதுங்கி இருந்தாள்
என் கணவனின் கனவுபடி இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது அது போதும் என ஐரோப்பாவிலே இருந்தாள்
தன் மகளை, ஆம் நேதாஜியின் ஒரே மகளை மிக சிரமபட்டு தனியாகவே வளர்த்தாள்
இந்தியாவில் இருந்தோ இல்லை போஸின் குடும்பத்திடமிருந்தோ ஒரு காசும் அவள் பெறவில்லை, இந்திய காங்கிரஸ் அரசும் அக்குடும்பத்தை ஏறேடுத்தும் பார்க்கவில்லை
பலமுறை எமிலியினை ஏராளமானோர் வற்புறுத்தியும் அவள் இந்திய அரசியலுக்கு வரவில்லை, தன் மகளை இந்தியா பக்கம் விடவுமில்லை
ஏன் என கேட்டால் கனத்த மவுனமே அவளிடமிருந்து வந்தன
“நான் இந்திய அரசியலில் பங்குக்கு வந்தால் நான் நேதாஜியினை காதலித்தது அரசியலுக்காக என்பது போல் ஆகிவிடுமல்லவா? அது அவருக்கு களங்கம் அல்லவா” என மிக நெருக்கமானவர்களிடம் சொன்னார் எமிலி என்பார்கள்
எப்படி ஒரு உயர்ந்த உள்ளம் அவருக்கு இருந்திருக்கின்றது?
நேதாஜி அவளை ஊர் அறிய திருமணம் செய்யவில்லை, காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்களை கூட கிழித்து போட சொல்லியிருக்கின்றார்
ஆனால் அவள் செய்யவில்லை, நேதாஜியின் கடிதங்களோடே வாழ்ந்த அவள் 1996ல் இறந்தாள்
நேதாஜி எந்த அளவு எமிலியினை நேசித்தார் என்பதற்கு அந்த கடிதத்தின் வரிகளில் சில
“நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்”
“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம்.
அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம்”
மிக மிக உருக்கமான வரிகள்..
அந்த அப்பழுக்கற்ற போராளி தேச கடமைக்கும் தன் காதலுக்கும் இடையே போராடி இருக்கின்றான், பரிதாபம்
எமிலி ஒரு மாவீரனால் காதலிக்கபட்டிருக்கின்றாள் அதுவும் உருகி உருகி காதலிக்கபட்டிருக்கின்றாள், அந்த பெருமையில் காலமெல்லாம் தனியாகவே வாழ்ந்திருக்கின்றாள்
நேதாஜி வாழ்க்கையில் மிக குறிப்பிடவேண்டிய பெண் எமிலி, ஒருவகையில் தியாக தலைவி
நேதாஜியின் மகள் இன்று ஜெர்மனில் பொருளியல் மேதை
இந்நாட்டில் ராகுல் காந்தி போல, உதயநிதி போல, அகிலேஷ் யாதவ் போல இருக்க வேண்டிய அனிதா மகா அமைதியாக ஒதுங்கி வாழ்கின்றார்
அட ராகுல் என்ன? சோனியாவின் இடத்தையே பிடித்திருக்கலாம். பெரும் சக்தியாய் உருவாகி இருக்கலாம்
காலம் எவ்வளவு விசித்திர விளையாட்டுக்களை எல்லாம் ஆடுகின்றது.
கணவனின் கட்சியினை காப்பேன் என வந்து நின்ற சோனியா ஒருவகை, என் கணவன் இல்லா இந்தியாவில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என நின்ற எமிலி இன்னொரு வகை
பெண்களில்தான் எத்தனை வகை?
என் கணவன் கட்சி இது , என் மாமியார் கட்சி இது, எங்கள் குடும்ப கட்சி என கட்சியினை கட்டுபடுத்தும் பெண்களும் இந்தியாவில் இருக்கின்றார்கள்
என் காதல் கணவன், என் மாமனார் என் மாமியார் வரிசையில் என் மகனும் பேரனும் இக்கட்சியில் தலைசூடி பின் நாட்டில் முடிசூட வேண்டும் என தவமிருக்கும் பெண்களும் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள்
ஆனால் “நான் நேதாஜியினை காதலித்தேன், அந்த பரிசுத்தமான காதலை அரசியல் முதலீடாக என்னால் செய முடியாது, அவர் பெயரை கொண்டு நான் ஏதும் பெற்றால் அது என் காதலுக்கே களங்கம்” என சொன்ன எமிலியின் அருகில் கூட இந்த பெண்களெல்லாம் வரமுடியாது
உலகின் அதிசுத்தமான காதல் எமிலியுடையது, எந்த காதலையும் அதற்கு ஈடாக சொல்லவே முடியாது
நிபந்தனையே இல்லா அன்புதான் காதல், அதனை மிக அதிகமாக பெற்றிருக்கின்றார் நேதாஜி ஆனால் வெறும் 3 ஆண்டுகள்தான் அது நிலைத்திருக்கின்றது
நேதாஜி கடிதத்தின் அந்த வரியினை பாருங்கள், எவ்வளவு அழகாக எழுதபட்ட வரி
“நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்”
இந்த வரிக்காகத்தான் கடைசி வரை தனியாகவே இருந்து மகளை வளர்த்து அவருக்காகவே வாழ்ந்தாள் எமிலி
இந்நாட்டிற்காக வாழ்க்கையினை தொலைத்த தம்பதிகளில் நேதாஜிக்கும் எமிலிக்கும் நிச்சயம் இடம் உண்டு
நேதாஜியினை முழுக்க புரிந்த பெண் காதலியாய் மனைவியாய் அவருக்கு கிடைத்தது ஒருவரம், தன் வாழ்நாளில் அந்த மாவீரன் கண்ட நிம்மதியும் மகிழ்வும் இது ஒன்றுதான், தன் வாழ்வில் சில நிமிடங்கள் மட்டும் அவன் நிம்மதியாக இருக்கட்டும் என தெய்வம் அனுப்பிய பெண் அந்த எமிலி
நேதாஜியின் நாளில் “என் காதல் புனிதமானது, அவர் பெயரை கொண்டு அரசியல் செய்து அதற்கு களங்கம் கற்பித்து, நான் அரசியல்வாதியாகவே காதலித்தேன் எனும் அவப்பெயரை என் கணவனின் வரலாற்றில் பதிவு செய்ய நான் விரும்பவில்லை
ஐரோப்பிய அந்நியரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய அவரின் நாட்டில் ஒரு ஐரோப்பிய பெண்மணியான நான் அரசியலுக்கு வந்தால் அது சரியல்ல, நான் அவரின் மனைவி என்பதால் அவர் கனவுகளை சிதைக்கமுடியாது அது இந்திய மக்களுக்கும் அவருக்கும் செய்யும் துரோகம், என் மனசாட்சி என்னை மன்னிக்காது” என சொல்லி பெரும் அரசியல் எதிர்காலத்தை தவிர்த்த அந்த புண்ணியவதிக்கு டெல்லியில் சிலை வைக்க வேண்டும்
அதை எங்கே வைக்கவேண்டும், யார் வீட்டு முன்னால் வைக்க வேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
தமிழகத்தில் எமிலிக்கு ஒரு அடையாளம் வேண்டுமென்றால் அச்சிலை எங்கே நிறுவபடவேண்டும் என்பதை நீங்களே சொல்வீர்கள்
எமிலி போஸ் ஒரு தியாக தலைவி, உண்மை காதலின் சுடர், நேதாஜி உள்ளளவும் அவள் புகழும் அவள் காதலும் தியாகமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
–வாட்ஸப் பகிர்வு