’யோவ் அவரு வூட்டுக் கதவை இவரு ஏன்யா தட்டுறாரு அதுவும் காலங்கர்த்தால? எப்பய்யா நீ பயில்வான் ரங்கநாதனா மாறுன?’ என்று டென்சனாக வேண்டாம். இது ஜஸ்ட் குரு சிஷ்யன் செண்டிமெண்ட் சமாச்சாரம் தான்.
நேற்று வெள்ளியன்று இயக்குநரும், நடிகரும், வீணாப்போன ஒரு பிள்ளையான சாந்தனுவின் தந்தையுமான பாக்கியராஜுக்கு 69வது பிறந்தநாள் அல்லவா? அவருக்கு சஸ்பென்ஸ் கொடுப்பதற்காக பூர்ணிமா பாக்கிராஜின் அனுமதி பெற்று அதிகாலையே முதல் ஆளாகக் கதவைத் தட்டியவர் அவரது குரு இயக்குநர் இமயம் பாரதிராஜா. கலைந்த தலையும், லுங்கியுமாகக் கதவைத்திறந்த பாக்கியராஜூக்கு இன்ப அதிர்ச்சி. முகம் அலம்பாமல் பல்லு கூட விளக்காமல் குருநாதரிடம் பிறந்தநாள் பூங்கொத்தை வாங்கிக்கொண்ட பாக்கியராஜ் அவரது காலில் விழுந்து ஆசிபெற்று ‘நிச்சயம் இந்த வருஷம் எனக்கு ரொம்ப விஷேசமா இருக்கும்’என்று நெகிழ்ந்தாராம்.
இந்த அதிகாலை விசிட்டுக்குப் பின்னால் ஒரு சிறு சம்பவம்…பாக்கியராஜின் வீட்டுக்கு எதிரே உள்ள செட்ஃபையர் என்னும் ஸ்டுடியோவில், பாரதிராஜா அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கான போட்டோ ஷூட் இருந்தது. அந்த தற்செயலான நிகழ்வை தனது சிஷ்யனுக்கு வாழ்த்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டார் பாரதிராஜா.