பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அந்த வழக்கில் மூளையாக செயல்பட்டது நடிகர் திலீப் என இயக்குநர் பாலசந்திரகுமார் கூறியதுடன் சில ஆவணங்களையும் போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளார். நடிகையை பாலியல் தொல்லை செய்த வீடியோவை திலீப் பார்த்தார் என்றும், தன்னை கைது செய்த விசாரணை அதிகாரிகளான சந்தியா, பைஜூ பவுலோஸ், சுதர்சன், ஏ.வி.ஜார்ஜ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார்.
இதையடுத்து அதிகாரிகளை பழிவாங்க சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது கிரைம் பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் தன்னை கைதுசெய்யக்கூடாது என நடிகர் திலீப் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் 27-ம் தேதி வரை திலீபை கைதுசெய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே சமயம் திலீப் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
கிரைம் பிரான்ச் போலீஸார் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் முதல் நாள் விசாரணைக்காக கொச்சி களமசேரியில் உள்ள கிரைம் பிரான்ச் அலுவலகத்தில் திலீப் உள்ளிட்டவர்கள் ஆஜரானர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திலீப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்திய வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் தனது முன்னாள் நண்பரும் இயக்குநருமான பாலசந்திரகுமார் குறித்து சில தகவல்களை திலீப் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபித்துள்ள நிலையில் திலீப் மீண்டும் கம்பி எண்ண வேண்டி வரும் என்கிறது போலீஸ் வட்டாரம்.