பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர்.
ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்தப் படம் சனவரி 7,2022 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியாகவிருந்ததால் எல்லா மாநிலங்களிலும் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அவற்றில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 7 ஆம் தேதி வெளியீட்டையும் தள்ளிவைத்துள்ளனர்.
ஜனவரி 1,2022 அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்படுவதால் இம்முடிவை எடுத்திருக்கிறோம், சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர். திரையரங்குகளில் 50 விழுக்காடு என்கிற அறிவிப்பே படத்தைத் தள்ளி வைக்கக் காரணம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மை வேறு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஆந்திராவில் திரையரங்கு நுழைவுச்சீட்டு விற்பனையை அரசாங்கமே கையில் வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அதிகக் கட்டணத்துக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்ய முடியாத நிலை. இதனால் ஆர் ஆர் ஆர் போன்ற பெரிய செலவில் தயாராகும் படங்கள் ஐம்பது நாட்கள் தாண்டி ஓடினால்தான் போட்ட முதலீட்டை எடுக்கவியலும் என்கிற நிலையில் உள்ளதாம்.
இதை மாற்றி பெரிய படங்கள் வெளியாகும்போது நுழைவுச்சீட்டு விலையை உயர்த்தி விற்க அனுமதிகோரி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியை வலியுறுத்திவந்தது தெலுங்குத் திரையுலகம். 2020 ஜூன் 9 ஆம் தேதி, நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்குத் திரைப்பட நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்பட தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. சந்திப்புக்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது……ஏற்கெனவே தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ள சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம். பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டணச் சலுகை, வரி குறைப்பு, சினிமா கலைஞர்களை உற்சாகப்படுத்த நந்தி விருது வழங்குவது உள்ளிட் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறோம்’என்று கூறியிருந்தார்.
இவற்றில் பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது என்கிற கோரிக்கையை ஆந்திர முதல்வர் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டாராம்.
இதனாலேயே வெளிப்படையாகச் சொல்லாமல் ஆந்திர முதல்வருக்கு எதிராக ஓர் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் போல் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில்லை என்கிற முடிவை ஆந்திரத் திரையுலகம் எடுத்திருப்பதாகவும் அதன் காரணமாகவே ஆர் ஆர் ஆர் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.