தமிழகத்தில் சைவ,வைணவக் கோவிகள் பல இருந்தாலும்,சைவ மதத்தை சேர்ந்தவர்கள் சிதம்பரம் கோவிலையும், வைணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோவிலையும் முக்கியக் கோவில்களாகக் கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மன்னனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரம்மாண்டமாய் கட்டப்பட்ட கோவில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோவில். தில்லை எனும் ஒருவகை அடர்ந்த மரங்கள் கொண்ட வனமாக ஆதிகாலத்தில் இப்பகுதி இருந்ததால் “தில்லைஸ்தலம்”எனப்பெயர் வந்தது.

கோவில் வந்த கதை இதுதான்.
புராணக்கதையின்படி சிம்மவர்மன் எனும் கவுட நாட்டு மன்னன் பெருவியாதியால் பீடிக்கப்பட்டதால், முடி சூட்டிக்கொள்ள மறுத்துவிட்டு,காடாக இருந்த சிதம்பரத்திற்கு வந்தானாம். அவனை வியாக்கியபாத முனிவர் அங்குள்ள சிவகங்கைக்குளத்தில் நீராடச் செய்து நோயைப் போக்கினாராம். குளத்தில் நீராடி எழுந்த பொழுது நடராஜர் அவன் கண்முன் தோன்றினாராம். சிம்மவர்மன் என்ற தன்பெயரை இரண்யவர்மன் என்று மாற்றிக்கொண்டு நடராஜருக்கு அங்கு கோவில் கட்டினாராம். கங்கைக் கரையிலிருந்து மூவாயிரம் தீட்சிதர்களை அழைத்து வந்து குடியமர்த்தினாராம்.

நடராஜர் வீற்றிருக்கும் சந்நிதி சிறியதாக இருந்ததால் “சிற்றம்பலம்” எனப் பெயர். இங்கு வைணவக் கடவுளான பெருமாளுக்கும் ஒரு கோவில் உண்டு. அதற்கு “சித்திரக்கூடம்”எனப் பெயர். இந்தக்கோவில் வளாகத்தில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவ மன்னனே பெருமாள் கோவிலைக் கட்டியவன்.

12 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு கோபம் வந்தது. நடராஜர் வளாகத்தில் பெருமாள் கோவிலா? பெருமாள் வீற்றிருந்த சித்திரக் கூடத்தை அழித்து, கோவிந்தராஜப்பெருமாள் சிலையைக் கடலில் வீசினான். (தசாவதாரம் படத்தின் முதல் காட்சி ஞாபகம் வருகிறதா?)

கதை இப்படி சொல்லப்பட்டாலும், வரலாற்றின்படி தமிழகத்தில் கி.பி.7ஆம் நூற்றாண்டில் பக்திஇயக்கம் பரவிய காலத்தில் சொக்கசீயன் எனும் மன்னனால் தென்புற வாசலைக்கொண்டு முதலில் சிறிதாகக் கட்டப் பட்டதே இந்தக்கோவில்.
கி.பி.12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கச்சோழனால் கிழக்குக் கோபுரம் கட்டப்பட்டது.
கி.பி.1251-1268ல் சடாவர்ம முதலாம் சுந்தரனால் மேற்குக்கோபுரம் கட்டப்பட்டது.
கி.பி.16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் வடக்குவாசல் கோபுரம் கட்டப் பட்டது. இந்தக்கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 160 அடி உயரம் கொண்டது. பல்வேறு அரசர்களால் பல்வேறு காலங்களில் பெரிதாக்கப்பட்டது. சைவ, வைணவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பாதிப்பை இக் கோவிலின் மீது ஏற்படுத்தினார்கள். இது உருவான நாள் முதல், இன்று வரை சர்ச்சைகளுக்குள் சிக்கியே வந்துள்ளது.

12ஆம் நூற்றாண்டில் கடலில் தூக்கிப்போட்ட கோவிந்தராஜப் பெருமாளை 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுததேவ மகாராயர் எடுத்து மீண்டும் கோவிலில் “புனர் பிரதிஷ்டை” செய்துள்ளார். அப்போது, பெருமாளை மீண்டும் உள்ளே வைக்கக்கூடாது என்று சொல்லி, தீட்சிதர்கள் பலர் கோவில் கோபுரத்தின் மேலே ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்துள்ளனர். சைவ,வைணவ மன்னர்களின் மேலாதிக்கத்தால் இந்தக்கோவில் படாதபாடு பட்டுள்ளது.அதன் பிறகே அந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர “அரியும், சிவனும் ஒண்ணு-அறியாதவன் வாயில மண்ணு” என்று கூறத் தொடங்கினார்கள். தற்போது நடராஜருக்கும், பெருமாளுக்கும் பிரச்சனை இல்லை. பிரச்சனை நந்தனுக்கும், நந்தனின் வாரிசுகளுக்கும் தான்.

தில்லை நடராஜரின் திருக்கோலத்தைக்கண்ட திரு நாவுக்கரசர் “இந்த அற்புதக் கோலத்தை காண மீண்டும், மீண்டும் நான் பிறவி எடுக்கவேண்டும். பிறவி வேண்டாம் என்று மறுக்கும் பேர்க்கும் மீண்டும் பிறவி ஆசையை உருவாக்கும் திருக்கோலம் இது என்கிறார்.

இந்த திருக்கோலத்தைக் காண்பதற்கு தான் நந்தனும் புறப்பட்டார். சிதம்பரத்திற்கு அருகே கொள்ளிடம் நதிக்கரையில் உள்ள கிராமம் மேற்கானாட்டு ஆதனூர். நந்தன் பிறந்த ஊர் தான். இன்றும் அதே பெயரில் தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட புலையர் சாதிப் பிரிவைச் சேர்ந்த நந்தனுக்கு சிதம்பரம் சென்று தில்லை நடராசரை தரிசிக்க ஆசை. தில்லைக்கு நாளை போவேன், நாளை போவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் “திருநாளைப் போவார்” என பெயரும் வந்தது.

சிதம்பரம் கோவிலுக்கு போவதற்கு, தான் வேலை செய்துவந்த ஆண்டையிடம் அனுமதி கேட்கிறார் நந்தன்! ஆண்டை இப்படி பின்வருமாறு பாடுகிறார்!

ஏய் நந்தா०००
அறியாத்தனம் நீ சொன்னால்००००
உன்னை அடிப்பேன்!
கூலியை பிடிப்பேன்!

சிதம்பரம் என்பதை விடு!
கொல்லை சேரியிலே
போய் படு!
நாத்தை பதத்திற் பிடுங்கினதை நடு!

கருப்பண்ணசாமிக்கே००
பலியிடு!

என்கிறார்..

சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தால் முதலில் அடி விழும்!
பிறகு வயிற்றிலடி!

உன் சாமி சிதம்பரம் நடராசர் கிடையாது!
உன் சாமி கருப்பணசாமி!

என்கிறது அந்த பாடல் பதிவு!

நந்தன் மனது அடங்கவில்லை. நந்தன் தில்லை செல்லும் நாளும் வந்தது. ஆதனூரிலிருந்து சிதம்பரம் வந்த நந்தன் கோவிலுக்குள் செல்லாமல் நகரையே சுற்றி வருகிறார். ஏனெனில் தீண்டாமைத் தீ எரித்துவிடும் என தெரியும். நந்தன் கனவிலே நடராசர் வந்து “இப்பிறவி போய் நீங்க எரியிடை நீ மூழ்கி, முப்புரி நூல் மார்பருடன் முன் அணைவாய்” என்றாராம். அந்தணர்கள் கனவிலும் நடராசர் தோன்றி நந்தனுக்குச் சொன்னதை அமல் படுத்தச் சொன்னாராம். அவர்கள் நந்தனிடம் வந்து நடராசரின் கட்டளையைச் சொல்ல, அதன்படி, தெற்குவாசலுக்கு எதிரான குளத்தடியில் அந்தணர்கள் யாகத்தீ வளர்த்து வைக்க, அதில் புகுந்து தீக்குளித்த நந்தன் புனித வடிவம் கொண்ட முனிவராக தீயிலிருந்து வெளிவந்து, பூணூல் அணிந்து, கோவிலுக்குள் புகுந்து, இறைவனின் ஜோதியோடு ஐக்கியமாகி விட்டாராம்.

மேற்கூறிய செய்திகள் யாவும் சேக்கிழாரின் பெரிய புராணம் தரும் செய்தி. பெரிய புராணம் பாடப் பெற்றது சிதம்பரம் நடராசர் கோவிலில் தான்.  நடந்த உண்மை என்னவென்றால் கோவிலுக்குள் நுழைந்துவிட்ட நந்தனை பார்ப்பனர்கள் எரித்துக் கொன்றுவிட்டு, பிரச்சனை எழாமலிருக்க தீயிலிருந்து புனித வடிவம் கொண்டு வெளிவந்து பூணூல் அணிந்து சென்று கடவுளை தரிசித்து கடவுளோடு ஐக்கியமாகிவிட்டான் நந்தன் என்று கதையை முடித்துவிட்டார்கள். 

இராமாயணத்தில் சம்புகன், மகாபாரதத்தில் ஏகலைவன் என்ற வரிசையில் பெரிய புராணத்தில் நந்தன் வருகிறார். சிதம்பரம் கோவிலில் நான்கு திசைகளிலும் நான்கு வாசல் உண்டு. இதில் நந்தன் உள்ளே புகுந்த தென்புற வாசல் இன்று வரை மூடியே இருக்கிறது.
கொள்ளிடம் நதிக்கரையின் பூர்வ குடி மக்கள் இன்றளவும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்விகள் ஏராளம். நந்தன் நுழைந்ததால் தீட்டுப் பட்டு விட்டதாகக் கூறி தென்புற வாசலை இன்று வரை மூடி வைத்திருக்கிறீர்களே? இது நியாயமா? அதை உடனே திறக்க வேண்டும். பெரிய புராணத்தில் சொல்லப்படும் நந்தன் கதையானது சைவத்தின் பெருமையை விட சாதியத்தின் கோர முகத்தை காட்டுகிறதே ஏன்?

ஒடுக்கப்பட்ட சமூகத்தார் கோவிலுக்குள் நுழைந்தால் தீ வைத்துக் கொளுத்தப்படுவார்கள் என்ற எச்சரிக்கை தான் பெரியபுராணம் விடுக்கும் செய்தியா? ஆண்டைகளுக்கு எதிராக ஸ்பார்டகஸ் திரண்டு எழுந்தான். ஆனால் காவிரிக்கரை ஆண்டைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் நந்தன் போராடினார் என்பதன் அடையாளமா? நந்தனுக்கு கோவில் கட்டி மகாத்மா காந்தி சிதம்பரம் வந்து திறந்து வைத்தது அதனால் தானா? கோவிலின் தென்புற வாசல் வெளியே ஓமக்குளம் என்று இருக்கிறதே? நந்தனை உயிரோடு கட்டிவைத்து ஹோமம் வளர்த்துக் கொன்றதன் அடையாளமா? இந்தக் கேள்விகள் இன்றுவரை கொள்ளிடத்தில் மோதி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

 நந்தன் புகுந்த பாதை ! - (வரலாறு தொடரலாமா?)
நந்தன் புகுந்த பாதை ! – (வரலாறு தொடரலாமா?)

நந்தனின் வாரிசுகள் இன்றுவரை இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தமிழக சமூகநீதியின் தலை மகன் தந்தை பெரியார் 1929 செப்டம்பர் 29 அன்று திருச்சியில் பேசியதை இங்கு நினைவு படுத்தலாம். “நந்தனுக்கு மோட்சம் கொடுத்ததாகவும், பாணனை ஆழ்வாராக்கியதாகவும் கூறும் புராணங்களைக் குற்றம் கூறாதீர்கள் என்கிறார்கள். வாஸ்தவம் தான்…இதோ வாயைப் பொத்திக் கொண்டோம். நந்தனுக்கு மோட்சம் கொடுத்தது உண்மையானால், அந்த நந்தனின் பேரனை ஏன் உள்ளே விடவும் கூடாது என்கிறார்கள்? பாணனை ஆழ்வாராக்கியது வாஸ்தவமானால் பாணனின் பேரன் கோவிலுக்குள் போவதை ஏன் தடுக்கிறார்கள்? நந்தனுக்கு ஒரு கல்லும், பாணனுக்கு ஒரு கல்லும் நட்டு, அவற்றின் பெயரால் பொங்கல் படைத்து, அபிசேகம் செய்து, காசு சம்பாதிக்கப் பிரயத்த னப்படுகிறார்களே ஒழிய, அவர்கள் பெயரைச் சொல்லி வேறு என்ன செய்கிறார்கள்? நந்தன் போன போது, நாம் ஏன் போகக் கூடாது என்றால், நீங்கள் சொல்லும் நந்தன் வேறு நபர் என்று சொல்லி, அந்த நந்தன் உள்ளே வருவதற்கு முன் நெருப்பில் குளித்து வந்தான். நீங்களும் அப்படி வாருங்கள் என்கிறார்கள். நாம் உள்ளே போக வேண்டுமானால் நெருப்பில் குளித்து சாம்பலாக வேண்டும். அதற்கு மேல்தான் போக முடியும்” என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பினார்.

“நம் நாட்டில் சகோதர உணர்வு, தர்ம உணர்வு இன்னும் எஞ்சியிருக்கிறதா? இப்போது இருப்பது எல்லாம் தீண்டாமை தான். இந்த மானக்கேடான பழக்க வழக்கங்களையெல்லாம் உதைத்து விரட்டுங்கள். இந்த தீண்டாமைத் தடைகளை தகர்த்தெறிய நான் விரும்புகிறேன். அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டு வோம். அவர்கள் ஏற்றம் காண வேண்டும். இல்லாவிடில் இந்தியா முன்னேறவே முடியாது” என்று பேசியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் சுவாமி விவேகானந்தர் தான். தீண்டாமை, வறுமை, அறியாமை, ஆதிக்கவெறி, சுரண்டல் போன்ற பல நோய்களால் அல்லலுறும் ஆரோக்கியமற்ற சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுபெயர் தான் நந்தன்-ஆறுமுகச்சாமி ஓதுவார்-ஜெயசீலா லட்சுமி.

இங்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. படைப்புத்தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு. தென்னாட்டில் எல்லாத் தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார். அது மறைத்தல், அருளல். எனவே தென் னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவது தான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டும் தான். பொதிகை மலையை பார்த்தபடி சிதம்பரத்தில் நடராசன் ஆடுவதாக ஐதீகம். எனவே தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனுக்கு தமிழில் வழிபாடு நடத்துவதே இங்குள்ள மரபு. சமஸ்கிருதம் வடநாட்டு ருத்ரனுக்குத் தான்.

சிதம்பர ரகசியம் என்பார்கள். சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
சிதம்பரம் என்ற சொல்லுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கம் THE ATMOSPHERE OF WISDOM. தமிழில் பிரபஞ்ச உண்மை என்று கொள்ளலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் 39 ஏக்கர் பரப்பள வில் உள்ளது.பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அடையாளம் தான் சிதம்பரம் கோவில் லிங்கம். ஆனால் இங்கு உண்மையில் லிங்கம் இல்லை. சிற்றம்பலத்தின் வலதுபக்கம் ஒரு சிறுவாசல் உள்ளது.இதில் உள்ள திரையை அகற்றி ஆரத்தி காட்டுவார்கள். திரைஅகலும்போது லிங்கமோ அல்லது வேறு எந்த உருவமோ இருக்காது. தங்க வில்வ மாலை ஒன்று மட்டும் தொங்குவதைக் காணலாம். திரைமறைவில் இல்லாத லிங்கத்தை இருப்பதுபோல் நினைத்து வழிபடுவதுதான் சிதம்பர ரகசியம். பிரபஞ்சத்தில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டு வழிபடுவது தான் சிதம்பர ரகசியம்.

– சூர்யா சேவியர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.