இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு மதச் சிறுபான்மையினரால் ஆபத்து என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு வழிகோலுவது பாசகவின் வாடிக்கை. ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை வைத்து தமிழ்நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரானப் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது பாசக. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று அது கொக்கரிக்கிறது. அவர்கள் தீ மூட்டத் தொடங்கியதில் இருந்து கோவை, மதுரை, சேலம் என கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு மட்டும் 32 இடங்களில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை நடந்துள்ளது. பள்ளிக்கூடங்கள் வரை பாசகவின் வெறுப்பரசியல் வேர் பரப்பி, தொலைவில் இருந்து பார்க்கும் போதே நம்மை கலக்கமுறச் செய்கிறது.
கிறித்தவர்களுக்கு எதிராக கர்நாடகவில் செய்து காட்டியதை ’மங்களூர் மாதிரி’ என்கிறது ஆர்.எஸ்.எஸ்.. அதை தமிழ்நாட்டிலும் செய்து பார்க்க துடியாய் துடிக்கிறது அது. இன்னொருபுறம் , இந்த காவிப் பாசிஸ்டுகள் இஸ்லாமியர்களை இனவழிப்புச் செய்யுமாறு தலைநகரத்தில் இருந்து அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
மத மாற்றத் தடை சட்டம் வேண்டுமென அவர்கள் வெறி பிடித்து அலையும்போது, ஒவ்வொரு நாளும் ஆர்.எஸ்.எஸ். ஆல் வன்முறைக்கு ஆளாகி வரும் மதச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் நீதியும் வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாம் கோருவது தவறாகுமா?
கலவரம் செய்தே கட்சி வளர்த்தவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மதச் சிறுபான்மையினருக்கு என்று இந்நாட்டில் சட்டம் எதுவும் இல்லை. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14% இருக்கும் மதச்சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஒரு சட்டம்கூட இல்லை என்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியதாகும். இத்தனை ஆண்டுகள் தொடர் வன்முறை நிகழ்த்தப்பட்டிருந்தாலும் ஒன்றிய அளவில் ஒரு சட்டத்தை இயற்ற முடியாமல் போய்விட்டது . இந்நிலையில் மாநில அளவில் அத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கு எந்த தடையும் இல்லை.
பசு வதை தடுப்புச் சட்டம், கட்டாய மத மாற்றத் தடை சட்டம் என தான் ஆளும் மாநிலங்களில் எல்லாம் தனது நிகழ்ச்சிநிரலை செயல்படுத்துகின்றது பாசக. ஆனால், பாசக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மதச்சார்பின்மைக்காக நிற்கும் கட்சிகள் மத வன்முறைத் தடுப்புச் சட்டம் இயற்ற முற்படாதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசகவுக்கு தக்க பதிலடி தரும் வகையில் மத வன்முறைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என உரத்துச் சொல்வோம். அது தமிழ்நாட்டில் இருந்து தொடங்கட்டும்.
“வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூற்றுப் போலக் கெடும்”
வன்முறை நிகழும் இன்னொரு நாளுக்காக காத்திராமல் மத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை இப்போதே இயற்றச் சொல்வோம். பாசிஸ்டுகளுக்கு எதிரான கேடயமாக இச்சட்டத்தைக் கோருவோம். ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரண்டு வாரீர்.
ஆர்ப்பாட்டம்
08.02.2022, செவ்வாய், மாலை 3.30, வள்ளுவர்கோட்டம், சென்னை.
தமிழ்நாடு அரசே!
மதக் கலவரத்தை தூண்டிவரும் பா.ச.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்!
தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றிடு!
ஒருங்கிணைப்பு
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃ இந்தியா, மக்கள் அதிகாரம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி
தொடர்புக்கு: 9941931499, 994175964, 98406 51344, 7358482113, 90258 70613, 94433 06110