🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இடதுசாரி சிந்தனையாளரும் சர்வதேச அரசியல் அறிஞர்களில் ஒருவருமான எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர் தாரிக் அலி, பிரண்ட்லைன் ஜனவரி 14 இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகள், புவி அரசியல் நகர்வுகள், ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகள், அதற்கு எதிரான சோசலிச நாடுகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் அலசுகிறார்

“சோசலிசம் ஒருமுறை தோற்றது; முதலாளித்துவமோ ஒவ்வொரு முறையும் தோற்கிறது” என்று கூறும் தாரிக் அலியின் இந்த மிக விரிவான நேர்காணல் உலக அரசியலை புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது.

தி கார்டியன் ஏட்டின் மிக நீண்டகால கட்டுரையாளராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நியூ லெப்ட் ரெவ்யூ ஏட்டை நடத்தியும் வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இதழ்களுக்கு பங்களிப்பு செய்து வருகிறார்.

சந்திப்பு: ஜிப்சன் ஜான், ஜிதீஷ் பி.எம்.,

தமிழில்: தூத்துக்குடி ஆனந்தன் / தீக்கதிர்
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

20 வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நுழைந்த போது, தாலிபான்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவது, ஜனநாயகத்தை நிறுவுவது போன்றவற்றிற்கு உறுதியளித்தது.
2021க்குள் லட்சக்கணக்கான மக்கள், பெரும்பாலும் அப்பாவிகள், உயிரிழந்துள்ளனர்; அமெரிக்காவோ இதுவரை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்(லட்சம் கோடி) செலவழித்துள்ளது.
ஆனாலும், தலிபான்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.

இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தாரிக் அலி:
முதலில் நாம் ஆப்கனிஸ்தானில் பார்த்துக் கொண்டிருப்பது, உலகின் ஆகப்பெரிய மற்றும் ஒரே ஏகாதி பத்திய அதிகாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது இராணுவ ரீதியான தோல்வி மட்டுமல்ல. நாம் இதனை அழுத்த வேண்டும்.

ஆப்கனிஸ்தானில், அமெரிக்காவிற்கு அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தோல்வி என்பதை அறுதியிட்டு சொல்ல முடியும்.

மேலும் அது அமெரிக்கா, நேட்டோ மூலமாக ஐரோப்பாவுடன் கூட்டாக கொண்டுள்ள ஏகாதிபத்திய திட்டங்களுக்கான தோல்வி.

மற்றொரு உண்மை, தாரளாவாதிகளுக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சி யாக இருந்தது, ஏனெனில் அவர்களால் ஒரு போதும், ஏகாதி பத்தியம் சிதைவுறும் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூட முடியவில்லை.

இரண்டாவாதாக, ஆப்கானிஸ்தானில்
ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவது என தீர்மானித்த ஒரே சக்தி- நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களோ இல்லையோ-தலிபான்கள் மட்டுமே. அமைப்புரீதியான இடதுசாரியோ, அல்லது இடது சாரி அறிவுஜீவியோ இதனை நாங்கள் விரும்பவில்லை.

ஏனெனில் வெற்றியடைந்திருப்பது தலிபான்கள் என்றால், அது இடது அதிதீவிர திரிபாகும்.

இத்தகைய கருத்து கொண்டவர்களிடம் கீழ்கண்ட கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது, நீங்கள் அங்கிருந்தீர்களா?, நீங்கள் ஏன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆப்கனிஸ்தான் வீதிகளில் இறங்கி போராடவில்லை?

ஆப்கானின் சில நகரங்களில் பெண்கள் பயிற்சிக்காகவும், கல்விக்காகவும் சில அரசு சாரா அமைப்புகள்(என்.ஜி.ஓ) பணம் கொடுப்பதால், அந்த நாட்டில் அமைப்பு ரீதியாக மாற்றம் வந்து விடும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்பினீர்களா? அவ்வாறு நீங்கள் நம்பியிருந்தால், அது தவறு என்பது நிருபணமாகி யுள்ளது.

யாருமே தலிபான்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பவில்லை. ஆனால், கடினமான உண்மை என்னவெனில் தலிபான்கள் வென்றனர் என்பதுதான்.

நேட்டோவும் அமெரிக்காவும், அவர்கள் ஆப்கானிஸ்தா னுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிய வில்லை.

அவர்கள் அந்த நாட்டில் 20 ஆண்டுகளாக ஒரு அரசு போன்ற அமைப்பை நடத்திக் கொண்டிருந்த னர், அந்த அமைப்பின் தன்மையைப் பற்றி கூற வேண்டு மெனில், அது நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிக மோசமான உதாரணங்களைக் கொண்டது.

அது இறுதியில் ஆக்கிரமிப்பை ஆதரித்து அதன் மூலம் ‘கல்லா கட்டும்’ ஒரு சிறு உயர் வர்க்கத்தினரை உருவாக்கியது.

இதில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை ‘ஆப்கனிஸ்தான் பேப்பர்ஸ்’ என்ற தரவுகளை பதிப்பித்த போது இது வெட்ட வெளிச்சமாகியது. அமெரிக்க தூதரகப் பேர்வழிகள், இராணுவ தளபதிகள், தத்து வார்த்த வாதிகள் ஆகியோரது இந்த யுத்தம் எந்தளவுக்கு பேரழிவாக மாறி வருகிறது என்பதை தெரிவித்தனர்.

அவர்களில் சிலர், நாம் ஏற்கனவே எதை சொல்லி வரு கிறோமோ அதையே தெரிவித்தனர், அதாவது ஹமீது கர்சாய் அரசு, இந்த காலம் முழுமையும் மேற்கத்திய ஊட கங்கள் கொண்டாடிய அரசு என்பது வேறொன்றுமில்லை, சில குறிப்பிட்ட ஊழல் அரசியல்வாதிகள் அங்கு நன்கு
கொள்ளையடிக்கிறார்கள் என்பதே!

தற்போது நீங்கள் வாஷிங்டன் பேப்பர்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வ அமெரிக்க மத்திய அரசின் அறிக்கை ஆகியவற்றை படித்தால், கர்சாய் அரசிடம் அதைத் தவிர(ஊழலைத்) வேறெதுவும் இல்லை அறியலாம். அவர் உருவாக்கியது எல்லாம் நாட்டின் சொத்தை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பலைத் தான்.

அன்றைய தினம் நமது விமர்சனங்கள் அனைத்தும் உண்மையென நிரூபணமாகியுள்ளது.

ஆப்கன் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தாலிபான்கள் முதலில் ஆட்சிக்கு வந்த போது பெண்கள் மீது அவர்களது அணுகுமுறை மிகவும் கடுமையாகவும், குரூரமாகவும் இருந்தது. பலருக்கு அதைப்போன்றே தற்போதும் நடக்குமோ என அச்சம் உள்ளது.

பெண்கள் விடுதலை என்பதும் அமெரிக்கா தலைமையிலான “யுத்தத்தின்” பிரகடனப்படுத்தப்பட்ட நேக்கமாக இருந்தது. இவைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

தாரிக் அலி:

ஆப்கனிஸ்தான் பற்றி எழுப்பப்படும் கேள்விகளில் ஒரு மிக முக்கிய கேள்வி, அது பெரிது படுத்தப்படுவது இன்று மட்டுமல்ல, அமெரிக்கா அந்த நாட்டினுள் நுழைந்த போதும், பெண்கள்(நிலை) குறித்து என்ன என்பதே.

அதற்கு நான் பதிலுக்கு கேட்பது, நீங்கள் அங்கு 20 ஆண்டுகள் இருந்திருந்தால், நீங்கள் ஆகப் பெரும்பான்மை ஆப்கனிஸ்தான் பெண்களின் நிலை மேம்பாடடைய நீங்கள் (மேற்கத்திய நாடுகள்) செய்ததென்ன?

நான் நிச்சயமாக பெண்களின் உரிமைகளை பாதுகாக்க முற்படுபவன்தான். காபூலிலோ அல்லது வேறு நகரங்களிலோ உள்ள சிறு பெண்கள் குழுக்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் ஆப்கானிஸ்தான் முழுமைக்குமாக பேசுகிறேன். (ஆப்கானிஸ்தானில்) பாதி பெண்கள் 25 வய திற்கும் குறைவானவர்கள். அவர்களுக்காக நீங்கள் செய்தது என்ன?

இப்பொழுது நீங்கள் தலிபான்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள் என புகார் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது அவர்களின் நிலையை மாற்றினீர்களா? இதற்கான விடை “இல்லை” என்பதே.

ஆரம்பத்தில் அவர்கள்(மேற்கத்திய நாடுகள்) அந்த யுத்தத்தை ஒரு புறத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதே போல பெண்கள் விடுதலைக்கானதாகவும் பிரச்சாரம் செய்தனர். அதையே டோனி பிளேரும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷூம் உலகிற்கு தெரிவித்தனர்.

ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதென்ன? நீங்கள் எத்தனை பெண்களை படிக்க வைத்தீர்கள்? எத்தனை பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டன.? பெண்களுக் காக ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் எத்தனை உருவாக்கப்பட்டன? இவற்றிற்காக விடை ஒன்று, இல்லை; அல்லது மிக சொற்பம்.

நான் அத்தோடு மற்றொரு விவரத்தையும் சேர்க்க விரும்புகிறேன். நான் சில பெண் செயல்பாட்டாளர்களோடு பேசியபோது அவர்கள் தெரிவித்த கருத்து, பெண்களின் நிலை மேற்கத்திய ஆக்கிரமிப்பின் போது உண்மையில் மிகவும் மோசமானது என தெரிவித்தனர்.

மேலும், மேலும் அதிக பெண்கள் பாலியல் தொழிலுக்குள் இரகசியமாக இழுக்கப்பட்டனர் என தெரிவிக்கின்றனர். உலகின் பிற பகுதிகளிலிருந்தும்கூட பாலியல் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.

யூகோஸ்லாவியா நாட்டின் மீது யுத்தம் நடைபெற்ற போது விபச்சார விடுதிகள் உரு வாக்கப்பட்டது போல இங்கும் உருவாக்கப்பட்டது. இது ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை பற்றி தெரிவிப்பது என்ன?

என்னைப் பொறுத்தவரை, மிகப்பெரிய மாற்றம், பாலியல் தொழிலில் ஈடுபட ஊக்கமளிக்கப்பட்டது, விபச்சார விடுதிகள் தனியார் மற்றும் பொதுத்துறையில் கட்டப் பட்டது.

பெண்களைப் பொறுத்தவரை தலிபான்களின் அணுகுமுறை மிக மிக பிற்போக்குத்தனமானது. ஆனால், அவர்கள் ஆட்சியின் போது பாலியல் வன்புணர்ச்சி மிக வும் குறைந்திருந்தது, காரணம், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் ஒன்று கொல்லப்பட்டனர் அல்லது கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர்.

இந்த பிரச்சனை குறித்து இத்தகைய அணுகுமுறையை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

எப்படியிருப்பினும், மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இப்போது 20 ஆண்டு களுக்குப் பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதென்ன?

இந்த பிராந்தியத்தில் உள்ள இதர நாடுகளில் பெண் களின் நிலைமையைவிட ஆப்கனிஸ்தான் பெண்களின் நிலைமை மிகவும் மோசமா?

நான் சொல்லவிரும்புவது, கிட்டதட்ட ஒரே நிலைமைதான். வடிவத்தில் அவை வேறு பட்டிருக்கலாம். பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சொல்லக்கூடிய நாடுகளில்கூட புள்ளிவிவரங்கள் தெரி விப்பதென்ன?

அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏழைப் பெண் குழந்தைகளின் கல்வி நிலை என்ன? என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய வித்தி யாசம் இல்ல என்றுதான் சொல்வேன்

. (ஆப்கனிஸ்தா னில்) யார் கல்வி பெறுகிறார்கள்? ஆப்கனிஸ்தானின் நகரங்களில்தான், அடிப்படையில் நகர்ப்புற பெண்களே படித்த பெண்களில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அது நல்லது. ஆனால், அது மட்டுமே பிரச்னைக்கு விடை யாகிவிடாது.

தலிபான்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எது உதவியது, அதிலும் அவர்கள் எதிர்த்து போரிட்டது உலகின் மிகப்பெரிய இராணுவத்தை என்கின்ற நிலைமையில்?

தாரிக் அலி:

ஆப்கனில் அமெரிக்கா மாற்று அரசியல், இராணுவ மற்றும் அரசு அமைப்பை உருவாக்குவதில் முழு முற்றாக தோற்றுப் போனதின் விளைவாகவே அது நிகழ்ந்தது.

3 லட்சம் துருப்புகளைக் கொண்ட கைப் பொம்மை இராணுவம் நொறுங்கிப் போனது. அவர்களில் சிலர் அகதிகளாக மாறிவிட்டனர். சிலர் தலிபான்களை எதிர்த்து போரிட மறுத்துவிட்டனர். சிலர் தாலிபான்களுடன் இணைந்து தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்ட னர்.

காவல்துறையும் காணாமல் போய்விட்டது.

காவல்துறையில் நான்கில் ஒரு பகுதியினர் போதை மருந்துகள் மூலம் பணம் சம்பாதிப்பதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். மற்றொரு நான்கில் ஒருவர், அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், தாலிபான்களின் சார்பில் படை களில் ஊடுருவியவர்கள்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்த போது, அவர்களை தாலிபான்கள் இராணுவ ரீதியாக எதிர்க்க வேண்டாம் என முடிவெடுத்த னர். அவர்கள் தங்கள் தலைகளை மொட்டையடித்து, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி களுக்கும் சென்று ஒளிந்து கொண்டனர். ஆப்கன் மக்கள் ஆக்கிரமிப்பின் உண்மை தன்மையை உணரத் தொடங்கிய போது, அவர்கள் மீண்டும் துடிப்புடன் செயல்பட ஆரம்பித்த னர்.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் நாட்டினில் முற்போக்கு இயக்கத்திலிருந்தும் எவ்வித எதிர்ப்பும் இல்லை.

ஆப்கானிஸ்தானின் மிகவும் முற்போக்கான அமைப்புகளான, பிடிபிஏ (பீப்பிள்ஸ் டெமக்கிரட்டிக் பார்ட்டி ஆஃப் ஆப்கனிஸ்தான்) உறுப்பினர்களே அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்தனர் என்பதை சொல்ல ஒருவர் வெட்கப்பட வேண்டும். ஆகவே, அவர்கள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்தனர்.

ஏதாவது ஒரு முற்போக்கான அமைப்பாவது நாட்டின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியிருந்தால், நிலைமை தற்போது இப்போதிருப்பதை விட சற்று சமன்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை.

வடக்கு கூட்டணி(நார்தன் அல்லையன்ஸ்) அமெரிக்காவுடன் முழுவதுமாக ஒத்துழைத்தது.

ஆக்கிரமிப்பு வடக்கு கூட்டணியையே முழுமையாக நம்பியிருந்த நிலையில், தற்போது, பெண்களுக்கு உதவும் நிர்வாக அமைப்பு என அதனை எங்ஙனம் முன் நிறுத்துவது?

ஆப்கானின் பெண் விடுதலைப் போராளி ஒருவர், அவர் நாட்டைவிட்டு தப்பியிருந்த போது தனிப்பட்ட முறையில் தெரிவித்தது, “எங்களுக்கு முன்பு மூன்று எதிரிகள்; ஆக்கிரமிப்பு இராணுவம், வடக்கு கூட்டணி மற்றும் தலிபான்கள். தற்போது ஒரே எதிரி (தலிபான்கள் மட்டும்)”.

மேற்கத்திய நாடுகள் தங்களின் முழுமையான மற்றும் கேவலமான தோல்வியை மறைக்க, “தலிபான்கள் பெண்களுக்கு செய்வதைப் பாருங்கள்” என்று கிளப்பிவிடும் ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் ஓட்டத்தை ஒவ்வொருவரும் தடை செய்ய வேண்டும். இவர்கள் தங்களது நலன்கள் ஏதாவது ஒரு வழியில் அதனோடு பயனடையாவிட்டால், பெண் விடுதலை என்ற கேள்வியைப் பற்றியே கவலைப்படாத பேர்வழிகள். அவர்கள் உண்மையிலேயே பெண்கள் பிரச்னை பற்றி அக்கறை கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் பெண்கள் பிரச்சனையை வெறும் ஆப்கன் பிரச்னையாக மட்டும் பார்க்க மாட்டார்கள், மாறாக, இந்த பிராந்தியம் முழு வதும் பாதிக்கும் பிரச்னை என பார்ப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

தாரிக் அலி:

நான் சொல்ல நினைப்பது, அமெரிக்க தோற்கடிக்கப்பட்டிருக்கும் போது, அது வியட்நாமாக இருக்கலாம், ஆப்கனிஸ்தானாக இருக்கலாம், அந்த நாட்டை அமெரிக்கா தண்டிக்கும்.

வியட்நாமிற்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. அவர்களின் சுற்றுச் சூழல் முழு மையாக இராசாயன ஆயுதங்களால் அழிக்கப்பட்டது. நாஃபாம் குண்டுகள் குடிமக்களுக்கு எதிராக பயன் படுத்தப்பட்டது. நான் வியட்நாமில் இருந்த போது, நாஃபாம் குண்டுகளால் குழந்தைகளின் பின்புறம் எரிக்கப் பட்டிருந்ததை, முகங்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டு உரு மாற்றம் அடைந்திருந்ததை பார்த்தேன்.

இப்போது அவர்கள் ஆப்கானிஸ்தானில் என்ன செய்வார்கள்? நாம் அவர்களின் 20 ஆண்டு ஆக்கிரமிப்பின் முகமூடி கழன்ற பின் கடினமான யதார்த்தத்தை பார்க்க வேண்டும்.

உண்மை யென்னவெனில் அந்த நாட்டில் எந்தவொரு பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை, விதிவிலக்கு மேல்தட்டு வர்க்கத்தினர், மற்றும் மேற்கத்திய நாடுகளோடு ஒட்டி உறவாடியவர்கள்.

மேற்கத்திய நாடுகள், ஆப்கானிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது, அனைத்து உதவிகளையும் நிறுத்திவிடுவதாக மிரட்டிக் கொண்டி ருக்கின்றன.

இவை அந்த நாட்டிற்கு எதிரான பூதாகரமான குற்றமாகும்.

ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களுக்காக நாம் மேற்கத்திய நாடுகளிடம் சொல்ல வேண்டியது என்ன வெனில், பொருளாதாரத் தடைகளை விதிக்காதீர்கள் என்பதே. பொருளாதாரத் தடை மற்றும் சர்வதேச உதவி களை தடை செய்வது, எந்த அரசியல் தலைமையின் மீதும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, அது உண்மையில் மக்களுக்கான தண்டனையே.

சில நேரங்களில் அமெரிக்கர்கள் அதனை வேண்டுமென்றே செய்கிறார்கள், உதாரணத்திற்கு இராக் நாட்டின் மீதான தடை விதித்தன் விளைவாக அந்த தடைக் காலத்தில்
5 லட்சம் குழந்தைகள் இறந்து போயின.

அந்த இறப்பு கள் இராக்கில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறு வதற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய தடைகளுக்கு பின்னால் உள்ள வாதங்கள், நாம் ஒரு நாட்டின் மீது தடை விதித்தால், அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுவர், அதன் காரணமாக அரசுக்கு எதிராக கலகம் ஏற்பட்டு அந்த அரசு கவிழும் என்பதாகும்.

ஆனால் நடைமுறையில் துன்பத்தை அனுபவிக்கும் மக்கள், தங்களின் துயருக்கு காரணமான அந்த தடை களை விதித்த அரசுகள் மேலேயே கோபம் கொள்கின்ற னர்.

மக்களுக்கு யார் இதற்கெல்லாம் காரணம் என்பதை நன்கறிவர். இத்தகைய தடைகள் அரபு உலகத்தில் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

இது வெனிசுலாவிலும் பலனளிக்கவில்லை. இது ஆப்கானிஸ்தானிலும் பலனளிக்காது. ஆனால் மக்களின் வாழ்க்கையை மிக மோசமான நிலைக்கு தள்ளும்.

கடந்த 20 வருடங்களில் தலிபான்கள் மாறியுள்ளனரா இல்லையா என்பது வேறு விவாதத்திற்கான பிரச்னை.

ஆப்கனிஸ்தானில் கடந்த 20 வருடங்களில் வளர்ந்த தலைமுறை, பல்வேறு செய்திநிறுவனத்தின் செய்திகளை தங்கள் செல்போன்களில் அல்லது கம்ப்யூட்டர்களி லிருந்து நுகர்ந்து வளர்ந்த தலைமுறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அர்த்தம், இதற்கு முன் இருந்ததைவிட மக்கள் பொதுவாக நன்கு விவரம் தெரிந்தவர்களாக உள்ளார்கள்.

ஆப்கனிஸ்தானின் மக்கட்தொகையில் மிகப் பெரிய சதவீதம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்; மிகச்சிலர் மட்டுமே மீண்டும் உள்நாட்டு யுத்தம் வருவதை விரும்புகிறார்கள்.

தலிபான்கள் அதிகாரத்திற்கு வருவதன் விளைவாக இந்த பிராந்தியத்தின் புவி-அரசியல் தளங்களில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன?

தாரிக் அலி:

முதலில் ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருப்பதின் புவி அரசியல் தன்மை குறித்த கேள்வி களுக்கு நாம் சொல்ல முடிவதெல்லாம், நாம் வேறுபட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதே!

இன்றைய தினம் உல கின் இரண்டாவது மிகப் பெரிய சக்தியாகத் திகழ்வது ஐரோப்பாவோ அல்லது ஐரோப்பிய யூனியனோ இல்லை.

அது சீனா.

சீனா ஆசியாவில் உள்ளது. சீனாவின் சந்தைப் பொருளாதாரம் மலைக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது.

சீனா தனது எல்லையாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை கொண்டுள்ளது என்ற உண்மை, வரும் சில ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தின் புவிஅரசியல் மாற்றங்களில் பெரும் பங்களிப்பை செய்ய இருக்கிறது என்பது யதார்த்தம்.

மேலும், தலிபான் தலைவர்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவேதான், தலிபான்களின் முதல் வெளிநாட்டு தூதுக்குழு சவூதி அரேபியாவிற்கு செல்லவில்லை, மாறாக, சீனாவிற்கு சென்று, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரையும் இதர அதிகாரிகளையும் சந்தித்தது.

அவர்கள் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் தலையிடுவதில்லையென வலுவான வாக்குறுதியை அளித்துள்ளனர். சீனர்கள் இந்த பேச்சுவார்த்தை குறித்து மிகவும் திருப்தி கொண்டுள்ளனர்.

இரண்டாவது விஷயம் தலிபான்கள் ஈரான் குறித்த தங்களின் உறவுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். ஈரானுடனான அதன் உறவு மிக மோசமாக இல்லை.

இதற்கு மிகப் பெரிய காரணமாக இருப்பது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா சமூகங்களுக்கு எதிராக சன்னி அடிப்படை வாதம் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 6 அல்லது 7 வருடங்களாக ஈரானிய தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன, அதன் விளைவாக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இரண்டு பக்கங்களிலும் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன. ஈரானியர்களும் புதிய ஆட்சியாளர்களை ஆட்டம் காணவைக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்திற்கு ஈரானியர்களிடம் எந்த ஊக்கமும் கிடைக்காது.

மூன்றாவதாக, தலிபான்கள் நாட்டை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஈரானியர்களிடமிருந்து எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு சாத்தியமே இல்லை. ஈரானியர்களைப் போல தேர்தலை அனுமதிப்பது, அதில் உண்மையான வேட்பாளர்கள் போட்டியிடுவது, போலி வேட்பாளர்கள் இல்லை, போன்றதொரு ஈரானிய மாதிரியைப் போன்று ஒரு அமைப்பை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்படுத்தலாம்.

அடுத்த ஒரு வருடத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நிச்சயத்தன்மையுடன் பேசுவதற்கு இன்னும் சற்று காலம் பிடிக்கும்.

பாகிஸ்தானுடன் தாலிபான்களின் உறவு மிக மிக நெருக்கமாக இருக்கிறது. மிக நெருக்கம் என்றால், மக்கள் கற்பனை செய்வது போன்று மிகவும் நட்புரீதியான உறவு கிடையாது.

சந்தேகத்திற்கே இடமில்லாமல், பாகிஸ்தான் இராணுவம்தான் கடந்த 20 ஆண்டுகளாக தாலிபான்களுக்கு உதவியுள்ளது. அதுவேகூட தன்னளவில் சுவாரஸ்யமானது.

பாகிஸ்தான் மிக நீண்ட காலமாக அமெரிக்காவின் கூட்டாளி நாடாகும். ஆனால், மறுபுறத்தில், அந்த நாடு தலிபான்களுக்கு உதவிகளும் தந்திரவியூகங்களும் அமைத்து கொடுத்துள்ளது.

ஆப்கனிஸ்தான் இனி பயங்கரவாதம் உற்பத்தியாகும் நாடாக மாறுமா? இஸ்லாமிக் ஸ்டேட்(ஐஎஸ்ஐஎஸ்) மற்றும் இதர பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

தாரிக் அலி:

ஐ.எஸ் அமைப்பு ஏற்கனவே ஆப்கனிஸ்தானுக்கு சென்று அங்கு அவர்களின் தளங்கள் அமைத்து விட்டது. அவர்கள் தலிபான்களுக்கு ஆதரவாக இல்லை. உண்மையில் அவர்கள் தலிபான்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்,

அதற்கு அவர்கள் தெரிவிக்கும் காரணம் தலிபான்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்பதாகும்.

ஐஎஸ் வரலாற்றில், அரபு உலகத்திலும், ஆப்கானிஸ்தானிலும், அவர்கள் எப்போதுமே ஏகாதிபத்தியத்தையோ அல்லது அதன் கூட்டாளிகளையோ குறிவைத்ததில்லை. அவர்கள் இதர முஸ்லீம் குழுக்களையும், கிருத்துவர்களையும் குறிவைத்துக் கொண்டிருக்கின்ற னர்.

ஆப்கானிஸ்தானின் உள்ளே அவர்கள் பெரும்பாலும், தலிபான்களை குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிவிக்கப்பட்டது, தலிபான்கள், ஐஎஸ் தலைவர் ஓமர் கொரசானியை பிடித்து, அவரை மிகவும் கொடூரமான முறையில் கொன்றுவிட்டனர்.

கொரசானியை பிடித்ததற்கும், அவரை கொலை செய்ததிற்கும் பழிவாங்கும் வகையிலேயே இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் தொடுத்தது, அதில்தான் முதல்முறையாக அமெரிக்கர் கொல்லப்பட்டனர். நான் நினைப்பதெல்லாம், தலிபான்கள் ஐஎஸ் அமைப்பினரை சமாளிக்க வேண்டும்.

ஐஎஸ் அமைப்பினர் எந்த வகையி லாவது எதிர்சக்தியாக உருவெடுத்தால், அது மிகப் பெரிய அவலமாக மாறிவிடும்.

அவர்களின் பலம் ஆப்கனிஸ்தா னின் பஷ்டூன் பகுதியில் உள்ளது. அவர்கள் பரவுவார்கள், அவர்கள் சந்தர்ப்பவாத தொடர்புகளை உருவாக்குவார்கள்.

அப்படி நடந்தால் அது ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்து விடும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.