பட்ஜெட் 2022 மக்கள் முன் இருக்கிறது. அது குறித்த விவாதங்கள் பரவலாக தேவைப்படுகின்றன. மக்க ளின் கவனம் இது போன்ற பொருளாதார முடிவுகள் மீது ஈர்க்கப்படாத வரை கடிவாளம் இல்லாத குதிரை போலவே மக்கள் விரோத முடிவுகள் அமலாகும்.  பட்ஜெட் என்பது அரசின் பொருளாதாரப் பாதையைப் பொருத்தே அமையும்.  அது மோசமாக இருந்தால் பட்ஜெட் மட்டும் நல்லதாக இருக்காது. இருந்தாலும் உடனடித் தேவை கள், முன்னுரிமைகள், படிப்பினைகள் ஆகியவற்றை கொஞ்ச மாவது உள்வாங்கி பட்ஜெட் ஏதாவது செய்திருக்கிறதா என்ற ஆய்வே இது. 

வளர்ச்சிக் கனவு பலிக்குமா?

பட்ஜெட் 2022உம், பொருளாதார ஆய்வறிக்கையும் கோவிட்டுக்கு முந்திய மொத்த உள்நாட்டு வளர்ச்சி அளவைத் தொட்டு விட்டோம் என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றன. இது கணக்குகளின் கண்ணாமூச்சி.  2021 – 22 இல் 9.2 சதவீத வளர்ச்சியை எட்டுவோம் என்பது திருத்திய மதிப்பீடு. இந்த வளர்ச்சி விகிதம் என்பது கடந்த ஆண்டு மொத்த உள் நாட்டு உற்பத்தியை விட எவ்வளவு அதிக வளர்ச்சியை நாடு எட்டி இருக்கிறது என்பதே. அரசின் புள்ளி விவ ரங்கள் சற்று மிகையாக அமையும் அனுபவங்கள் நமக்கு உண்டு. இருந்தாலும் 9.2 சதவீத வளர்ச்சி என்று அரசு சொல்கிற விவரங்களை வைத்து மட்டும் விவாதிப்போம்.  கடந்த ஆண்டு அதாவது 2020- 21 இல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (-) 7.3 சதவீதமாக சுருங்கிய ஆண்டாகும். அந்த பலவீனமான ஆண்டை அடிப்படையாக கொண்ட கணக்கில் தான் 9.2 சதவீதம் வருகிறது. பரிட்சையில் 5/100 மார்க் வாங்கிய வன் அடுத்த பரிட்சையில் 10/100 மார்க் வாங்கினால் 100 சதவீத அதிக மதிப்பெண் பெறுகிறான் என்ற கணக்கு போன்றது தான் இது. 

கடந்த ஆண்டை விட்டு விட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்த அதற்கு முந்தைய 2019- 20 ஐ அடிப்படை யாக கொண்டால் இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 1.22 சதவீதம் ஆகி விடும்.  இனி நடப்பு ஆண்டு அதாவது 2022-23 க்கான மதிப்பீட்டிற்கு வருவோம். 8 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரையிலான வளர்ச்சி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான்கு முன் நிபந்தனைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. 

நான்கு நிபந்தனைகள்

ஒன்று, கோவிட் பேரிடர் தணிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு. இதை உறுதி செய்கிற நிலையில் யாரும் இல்லை. ஒமைக்ரான் ஓரளவு பாதிப்பு குறைவானதாக இருந்திருக்கிறது. அடுத்த பரிணாம வகை வந்தால் எப்படி இருக்கும்? என்பது மருத்துவ உலகம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. 

இரண்டாவது, தடுப்பூசி இயக்கத்தை விரைவு செய்வது. ஏற்கெனவே அரசு சொன்ன காலக் கெடுக்கள் கடைப்பிடிக்கப் படவில்லை. ஏற்கெனவே போட்ட தடுப்பூசிகளின் தாக்கம் குறையலாம் என்பதால் பூஸ்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டப் பந்தயத்தில் ஏற்கெனவே பின்னால் ஓடுகிறவர் அந்த இடை வெளியை  சரி செய்து செய்து முன்னேறும் கூடுதல் முனைப்பு (Extra effort)  தேவைப்படுகிறது. அந்த நிலைமையில் நாடு உள்ளது. 

 

மூன்றாவது, அளிப்பு முனையில்  செய்யப்படும் சீர்திருத் தங்கள் (Supply side reforms). (உம்) வீட்டுக் கடன் வட்டி 6.6 சதவீதம் என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடு கட்ட ஆர்வமாக முன் வருவார்கள். கட்டுமானத் தொழில் வளர்ச்சி அடையும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள். ஆனால் மக்களின் வாங்கும் சக்தி உயராமல், கிராக்கி உருவாக்கம் அரங்கேறாமல் வெறும் வட்டிக் குறைப்பு மட்டும் தொழில் வளர்ச்சிக்கு புத்துயிர் தருமா! இதோ எல்.ஐ.சி வீட்டு வசதிக் கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொகந்தியின் வார்த்தைகள்.  _”பணத்திற்கு பஞ்சமில்லை. எது பிரச்சனை எனில் நுகர்வு அதிகரிக்காததே” ஆகவே கிராக்கி முனையில் ஒன்றும் செய்யாமல் அளிப்பு முனையில் மட்டும் “சீர்திருத்தங்கள்” செய்வதில் பயனில்லை. 

நான்காவது, நிதியாதாரங்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். இருக்கின்றன. ஆனால் அதற்கான சரியான பாதையில் அரசு நடை போடுகிறதா? இந்தக் கேள்வியே இந்த பட்ஜெட் பலூனை குத்திக் கிழிக்கிற ஊசியாக உள்ளது.  ஆகவே இந்த ஆண்டின் வளர்ச்சி மதிப்பீடு இத்தனை கேள்விகளுக்குள் சிக்கி நிற்கிறது.  இந்தச் சூழலில் வளர்ச்சி என்பது “பொதுத் துறையை ஒட்டுநராக கொண்டுதான் இருக்கும்” என்று பெரு ஊட கங்களே எழுதுகின்றன. பிப்ரவரி 4, 2022 இந்தியன் எக்ஸ் பிரஸ் நாளிதழில் ஜகாங்கீர் அசிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பே மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது. ஆனால் அரசோ அந்த ஓட்டுநரை வீட்டுக்கு அனுப்புவது பற்றியல்லவா யோசிக்கிறது?  இந்த வளர்ச்சிக் கணக்கெல்லாம் அறுதிப் பெரும்பான்மை மக்களின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது இல்லை என்பது தனிக் கதை. 

வீங்கிய முதுகுகள் பெருத்த வயிறுகள்

இந்த பட்ஜெட்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை ஏற்றத்தாழ்வுகள் குறைப்பு. ‘ஆக்ஸ் பாம்’ அறிக்கை வெளியிட்ட தகவல்கள் பலரையும் அதிர வைத்தன.  பொருளாதார அடுக்கின் முதல் 10 சதவீதம் பேர் கைகளில் 57 சதவீதம் தேசிய வருமானம் போய்ச் சேருகிறது; கீழ் மட்ட 50 சதவீதம் பேர் கைகளில் தேசிய வருமானத்தில் 13 சதவீதம் போய்ச் சேருகிறது; இன்னும் டாப் 10 சதவீதத்தை ஆராய்ந்தால் அதில் முதல் 1 சதவீதம் மட்டுமே 22 சதவீதம் தேசிய வருமா னத்தை அனுபவிக்கிறார்கள். இந்த தகவல்கள் இந்திய நாட்டின் செல்வ உருவாக்கத்தை யார் வளைக்கிறார்கள்; அதில் யார் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்துபவை.  கோவிட் பெருந்தொற்றின் சுமை அதிகமாக யாரால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்? பெரும் தொழிலதிபர்கள், சூப்பர் ரிச்… இவர்கள் தானே. ஆனால் சாதாரண மக்கள் முதுகுகள் வீங்கி யும், வசதி படைத்தவர்கள் வயிறு பெருத்தும் காட்சி அளிக்கின்ற னர். கோவிட் தொற்று துவங்கிய 2020 மார்ச் மாதம் 23 லட்சம் கோடிகளாக இருந்த 100 டாப் பணக்காரர்களின் செல்வம் இப்போது 56 லட்சம் கோடிகளை கடந்துள்ளது. என்ன பொருள்? துயரத்திலும் லாபம் பார்த்துள்ளார்கள் என்பதே. இதையே K வடிவ மீட்சி என்கிறார்கள். V வடிவம் என்றால் பரவலாக பயன்கள் கிடைக்க கூடியது என்று அர்த்தம். ஆனால் அது நிகழவில்லை. 

ஏற்றத் தாழ்வுகள் குறைய வேண்டுமெனில் பொது சுகாதா ரம், கல்வி, சமூக வீட்டு வசதி, குழந்தை நலன் ஆகியவற்றுக்காக கூடுதல் செலவினம் அரசால் செய்யப்பட வேண்டும். இது சாதாரண மக்கள் சந்தைக்குள் செல்ல வாங்கும் சக்தியை உரு வாக்கும். அங்க்டாட் (UNCTAD – United Nation Council for  Trade and Development) மதிப்பீட்டின் படி அரசு இந்த துறை களில் தலையிட்டால் 29 சதவீதம் அதிக பணம் மக்கள் கைகளில் புழங்க வழி பிறக்கும் என்பதே. ஆனால் இந்த பட்ஜெட் என்ன செய்திருக்கிறது? ஒவ்வொன்றாக பார்க்கலாம்.  சுகாதாரத்திற்கு ரூ.86200 ஒதுக்கீடு. கடந்த ஆண்டு திருத்திய மதிப்பீடு 86000 கோடி. என்ன பொருள்? உயர்வே இல்லை என்பதுதானே. தேசிய சுகாதார முகமைக்கு 7 சதவீத நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு என்கிறார்கள். பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் 10 சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். என்ன பொருள்? உண்மை மதிப்பில் ஒதுக்கீடு சரிந்துள்ளது என்பதுதானே.  கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக இருக்கும் என புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டது. ஆனால் இப்போதோ ஒதுக்கீடு 2 சதவீதத்திற்கும் கீழே. 6 சதவீதம் நோக்கி சின்ன நகர்வு கூட இல்லை. ஆசிரியர் மற்றும் வயது வந்தோர் கல்வி ஒதுக்கீட்டில் 250 கோடியாக இருந்தது. இப்போது 127 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

சமூக வீட்டு வசதிக்கான  ஒதுக்கீடுகளும் மிக மிகக் குறைவு

குழந்தை நலம் பற்றிய பட்ஜெட் அணுகுமுறை என்ன? மதிய  உணவுத் திட்டமான பி.எம் போசன் திட்டம் கடந்த ஆண்டு நிறைய நாட்கள் செயல்பட முடியாத நிலை இருந்தது. ஆனால் திருத்திய மதிப்பீடாக கடந்த ஆண்டு செலவாக உள்ள ரூ.10234 கோடிகளை ஒட்டியே இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி குறித்த மதிப்பீடு மட்டும் கோவிட் பாதிப்பு இல்லாவிட்டால் என்ற அனுமானத்தில் செய்யப்படும்; ஆனால் குழந்தைகளுக்கான உணவு எனும் போது கோவிட் பாதிப்பு இருந்த ஆண்டின் செலவினம் எடுத்துக் கொள்ளப் படும் என்றால் என்ன லாஜிக்!  “அங்க்டாட்” அறிவுரைகள் எல்லாம் அரசின் காதுகளில் ஏறவில்லை. கைகளும் அதை நோக்கி அசையவில்லை. எப்படி மக்கள் கைகளில் பணம் புழங்கும்? எப்படி ஏற்றத்தாழ்வுகள் குறையும்? 

நுகர்வுக்கு தேவை, ஆசை மட்டுமல்ல

நுகர்வு வீழ்ச்சி, பொருளாதார மீட்சியை தொடர்ந்து மறித்து வரும் வேளையில் பட்ஜெட் 2022 அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்ந்து இருக்கிறதா? தீர்வுகளை தேடினால், நாடினால் தானே நகர முடியும். அதற்கான முயற்சிகள் உணர்வுப் பூர்வ மாக இல்லை. இல்ல நுகர்வும் (Household Consumption) வீழ்ந்து இருக்கிறது. அரசாங்க நுகர்வும் (Government Consumption) குறைந்து இருக்கிறது.  ஊரடங்கு காலம், ஊரடங்கு நீங்கிய பின்பும் சகஜ நிலை முழுவதும் திரும்பாதது பெரும்பான்மை மக்களின் வருமா னத்தை பாதித்து நுகர்வையும் பாதித்து இருக்கிறது. ஆட்டோ, கட்டுமானம், சுமைப் பணியாளர், கார் டிரைவர்கள், பிளம்பர், எலெக்ட்ரீசியன், வீட்டு வேலை பணியாளர் போன்றவர்கள் படாத பாடுபட்டிருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய செலவுகளுக்கே இவர்கள் கடன் வாங்க வேண்டிய நிலை. அதற்கு பிறகு ஓரளவு மீட்சி ஏற்பட்டாலும் வாங்கிய கடனை திரும்பக் கட்ட வேண்டி இருப்பதால் அவர்கள் நுகர்வை சுருக்க வேண்டி யுள்ளது. 

வேலையின்மை ஒரு முக்கிய காரணம். அரசாங்கம் உண்மையை பேச மறுக்கிறது. சி.எம்.ஐ.இ (CMIE) தரும் தகவல்படி வேலை தேடும் வயதில் வேலையின்றி இருப்பவர் கள் 5.3 கோடி பேர். அவர்களில் 3.7 கோடி பேர் முனைப்பாக வேலை தேடுபவர்கள். இது தவிர பல கோடி வேலை இழப்பு கள். 60 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழிலகங்கள் மூடப்பட்டுள் ளன.  இவர்களின் பிரச்சனை ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதா?  பட்ஜெட் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளது. அதாவது ஆண்டிற்கு 12 லட்சம். ( 2014 இல் ஆண்டிற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்று சொன்னார்களே, என்ன ஆச்சு என்றெல்லாம் ஞாபகமாக கேட்கக் கூடாது. மக்களின் மறதியே ஆட்சியாளர்களின் பலம்). 12 லட்சம் வேலை வாய்ப்புகள் என்பதை நாம் நம்பினால் கூட ஒவ்வோர் ஆண்டிலும் 47.5 லட்சம் கோடி பேர் வேலைச் சந்தைக்குள் நுழைபவர்கள் என்பதோடு ஒப்பிட்டால் அதன் போதாமை தெரியும். ( தகவல்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரம், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 06.02.2022).

 

அரசு வேலை வாய்ப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. 2013 -14 இல் ஒன்றிய அரசு பணியாளர்கள் 33 லட்சம். 8 ஆண்டுகள் கழித்து இந்த எண்ணிக்கை 31 லட்சம்தான்.  வேலையின்மை பற்றிப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சில ஆண்டுகளுக்கு முன்பாக சொன்னார். “ நீங்கள் சொல்கிற அளவுக்கு வேலையின்மை இருந்தால் சமூகப் பதற்றம் வந்திருக்காதா? நாடு அமைதியாகத்தானே இருக்கிறது”. மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு படி மேலே போய் “இந்திய இளைஞர்கள் வேலை கேட்பவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை அளிப்பவர்களாக மாறி விட்டனர்” என்றார். ஆனால் அருண் ஜெட்லி சொன்னது இன்று அரங்கேறு கிறது. பீகார் ரயில்வே பணி நியமனத் தேர்வை ஒட்டி வெடித்த கலவரம். ரயில்கள் எரிக்கப்பட்டன. காரணம் என்ன? 3628 காலியிடங்கள் – விண்ணப்பித்தவர்கள் 1.25 கோடி பேர். இளை ஞர்களின் ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

நுகர்வை அதிகரிக்க மாதம் ரூ.7500 ஐ கோவிட் கால நிவார ணம் வேண்டுமென்ற உடனடி நிவாரண கோரிக்கையை அரசு புறம் தள்ளியுள்ளது. சாதாரண மக்கள் கைகளில் புழங்கும் பணத் திற்கு உள்ள “பெருக்கல் விளைவு”(Multiplier Effect) அது வெறும் இலவசம் என்ற கருத்தை உடைத்து விடும். சாமானிய மக்கள் கைகளில் போனால் அது குறைந்த பட்சம் 4 மடங்கு பெருக்கல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பல பொருளாதார நிபுணர்களின் கணக்கு. அது இந்த பட்ஜெட்டில் நடந்தேறவில்லை.  ஆதாரத் தொழில் வளர்ச்சி பற்றி அதிகமாக பேசியுள்ளது. அதற்கு ஏழு தொழில்களை அது அடையாளமும் கண்டுள்ளது. 82 சதவீத அதிக ஒதுக்கீடு என்ற அறிவிப்பு பார்க்க பெரிதாக தெரி கிறது. அதற்கான திட்டங்கள் என்னென்ன? நீண்ட கால முதலீடு களுக்கு ஊற்றாக உள்ள எல்.ஐ.சி யின் பங்கு விற்பனை பேசப் படுவது முரண் இல்லையா! தனியார், அந்நிய முதலீடுகள் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நம்பகமான வழிகள் இல்லை என்பதே கடந்த கால அனுபவம். உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் (PLIS) பற்றி சி.எம்.ஐ.இ மேலாண்மை இயக்குநர் விமர்சனம் “அது ஒரு ஜோக்” என்பதே. ஒட்டு மொத்த தொழில்களும் அரசின் கவனத்தைப் பெற வேண்டிய நிலையில் குறிப்பிட்ட தொழில்கள் மட்டும் ஊக்கம் பெறுவது தீர்வுகளை தராது என்பது அவரின் கருத்து. 

அரசு தலையீடு, அரசு முதலீடுகள் இல்லாமல், அதிகரிக்கா மல் வேலை உருவாக்கம் நடக்காது; நுகர்வும் அதிகரிக்காது. “அரசின் தொழில், தொழில் நடத்துவது அல்ல” என்ற நவீன தாராளமய அணுகுமுறையை விட்டு வழுவாமல் இருப்பதில் தான் அரசின் அக்கறை இருந்திருக்கிறது.  நுகர்வுக்கு தேவை, ஆசை மட்டும் போதாது; வாங்கும் சக்தி வேண்டும். அதற்கு தேவையான நிவாரணம் – வருமானம் – வேலை மூன்றுக்கும் இந்த பட்ஜெட் நியாயம் செய்யவில்லை. 

அரசின் விசுவாசம்

அரசு முதலீடுகள் அதிகரிப்பது எனும் போது அதற்கு நிதிப் பற்றாக்குறை பற்றிய நவீன தாராளமய அணுகுமுறை குறுக்கே நிற்கிறது.  கடந்த ஆண்டு அனுபவம் என்ன?முதல் காலாண்டில் (Q1) அரசு செலவினம் உறை நிலையில் வைக்கப்பட்டது. இரண்டாம் காலாண்டில் பட்ஜெட் தொகையில் 20 சதவீதம் என்கிற உச்ச வரம்புக்கு உட்பட்டே செலவழிக்க வேண்டும் என்ற வரையறை விதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கான ஜி.எஸ். டி நிலுவை இழுத்தடிக்கப்பட்டது. மாநிலங்களுக்கான வளப் பகிர்வும் குறைந்து வருகிறது. எப்படி அரசு முதலீடுகள் அதிகரிக்கும்?  மொத்த பட்ஜெட் செலவினத்தின் திருத்திய மதிப்பீட்டை விட  இந்த பட்ஜெட்டில் ரூ. 1,74, 909 கோடி அதிகரித்துள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது முன்னேற்றமாகத் தெரியும். சில நேரம் தொகையை சொல்வார்கள். சில நேரம் சதவீதத்தை சொல்வார்கள். வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். நாம் பட்ஜெட்டை ஆய்வு செய்யும் போது இந்த மாய வலைக்குள் விழுந்து விடக் கூடாது. இந்த பட்ஜெட் தொகையை சதவீதமாக ஆய்வு செய்தால் உண்மை தெரியும். 2020 -21 இல் மொத்த ஜி.டி.பி யில் 17.8 சதவீதமாக இருந்த மொத்த செலவினம் 2022 -23 இல் 15.3 சதவீதமாக சரிந்து இருக்கிறது.

அரசு அறிவித்த திட்டங்கள் கூட அது எழுப்புகிற ஆரவா ரத்திற்கும் அமலாக்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் நீர்த்துப் போய் விடுகிறது. குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு கோவிட் காலத் திற்கு 2 வட்டி மானியம் அளிக்கிற “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” திட்டத்திற்கு அரசு பணம் தராததால் வங்கிகள் கூடுதல் வட்டி கேட்டு நோட்டிசுகளை அனுப்பியுள்ளன. இது ஒரு உதாரணம்.  அரசின் நவீன தாராளமய விசுவாசம் அதை விடவில்லை. ஆகையால் அரசு முதலீடு அதிகரிப்பு என்கிற உடனடி தேவை இந்த பட்ஜெட்டிலும் உணர்வுப் பூர்வமாக நிறைவேற்றப்பட வில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சி பற்றிய அறிவிப்புகளும் கடந்த கால அனுபவத்தால் சந்தேகத்தின் நிழல் படர்ந்ததாகவே இருக்கின்றன. 

வரி திரட்டல் சாட்டை யார் மீது?

நிதியமைச்சர் “புதிய வரிகள் இந்த முறை இல்லை” என்ற தலைப்பு செய்தியை பார்த்தவுடன் ஏழை எளிய நடுத்தர மக்கள் ஆசுவாச பெருமூச்சு விட்டனர். வரி என்றாலே அந்த சாட்டை தங்களின் முதுகுகளுக்கு மட்டுமே என்று மக்கள் நினைப்பது அவர்களின் பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் அரசுக்கு வரி போடுகிற அரசியல் அதிகாரம் உள்ளது. குடும்ப பட்ஜெட் போல வருமானம் வரையறுக்கப்பட் டது அல்ல தேசத்தின் பட்ஜெட். அரசு நினைத்தால் வருமானம் திரட்ட நிறைய வழிகள் உண்டு. கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகள், வாரிசுரிமை வரி, சூப்பர் ரிச் வரிகள்… இப்படி உயர்த்த லாம். போடலாம். ஆனால் இதைச் செய்ய அரசியல் உறுதி வேண்டும். அமெரிக்காவில் கூட கார்ப்பரேட் வரிகள் உயர்த்து வது பற்றி ஜனாதிபதி ஜோ பிடேன் பேசுகிறார்.  கார்ப்பரேட் வரி முறைமையில் உள்ள ஓட்டைகளை அடைப் பதற்கும் அரசு தயாராக இல்லை. 2020 -21 இல் 55000 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் குழுமம் கட்டிய வரிகள் (Effective taxes) 3 சதவீதம் மட்டுமே. 

ஆனால் பெட்ரோல், டீசல் வரிகளின் மூலம் மட்டும் 3 ஆண்டு களில் 8 லட்சம் கோடியை அரசு திரட்டி உள்ளது. ஆயுள் காப்பீடு, உடல் நல காப்பீடு மீது ஜி.எஸ்.டி வரிகள் போடக் கூடாது என அத்துறையின் நீண்ட அனுபவம் மிக்க முன்னாள் மேலாண்மை இயக்குநர் நிலேஷ் சாத்தே, எல்.ஐ.சி சேர்மன் எம்.ஆர்.குமார் ஆகியோர் பேசியும் அது தொடர்கிறது.  பண வீக்கம் அதிகரித்தால் விலை கூடி அதன் மீதான வரியும் கூடுகிறது. ஆகையால் விலைவாசி உயர்வை அரசாங்கங்கள் ரசிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. திருப்பூர், ஈரோடு ஜவுளித் தொழில்கள் நூல் விலை உயர்வால் திண்டாடுகின்றன. இப்படி இடு பொருள் உயர்வால் தொழில்கள் தவிக்கும் போது அர சுக்கோ அந்த விலை உயர்விலும் வரி வருமானம் கிடைக்கிறது.  இதனால்தான் இவ்வளவு நெருக்கடியிலும் வருவாய் இன வரவுகள் (Revenue Receipts) அதிகரித்துள்ளன. ஒன்று கார்ப்பரேட் லாபம் குவியோ குவி என்று அதிகரித்ததால் கார்ப்ப ரேட் வரி வசூல் கூடியுள்ளது. இன்னொரு முக்கிய காரணம், மக்களை வறுத்தெடுத்துள்ள பெட்ரோல் டீசல் வரிகள். விலை உயர்வால் மக்கள் சுமக்கும் கூடுதல் வரிகள். 

 

கிரிப்டோ கரன்சி மீது வரி போடப்பட்டுள்ளது. கிரிப்டோ என்பது பெரும் சூதாட்ட வடிவமாக மாறி வருவது தனிக் கதை. உலக நிதி நெருக்கடியின் போது பிறந்த வடிவம் இது. 13 ஆண்டு களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2009 இல் 1000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கிரிப்டோ மதிப்பு  இன்று 72 கோடி என்றால் பாருங் கள். நிழல் பொருளாதாரம் உண்மைப் பொருளாதாரத்தின் மீது அடர்ந்து படரத் துவங்குவதன் அறிகுறி அல்லவா. இப்போதே சாதாரண மக்கள் ஏமாந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. ரிசர்வ் வங்கி இதை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததாக செய்திகள் வந்தன. நிதி ஒழுங்கையே சீரழித்து விடும் என்பது ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை. ஆனால் அரசு அது சாத்தியம் அல்ல; அந்த கட்டத்தை கிரிப்டோ கடந்து விட்டது என்ற நிலை யை எடுத்துள்ளதாகவும் செய்திகள். இந்த பட்ஜெட் மூலம் “மெய் நிகர் டிஜிட்டல் சொத்து” ஆக கிரிப்டோவை அங்கீகரித்து விட்டது. இதன் விளைவுகள் என்ன என்பது ஆய்வுக்கு உரியது. 

நீண்ட கால மூலதன லாபம் (Long term Capital gains -LTCG) மீதான வரி வரம்பு 15 சதவீதம் என பட்டியல் இடப்படாத நிறுவனப் பங்குகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் இருந்த இரண்டு வரி அடுக்குகள் 25 சதவீதம், 37 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள், என்.ஆர்.ஐ க்கள் இந்த அறிவிப்பை  கொண்டாடியுள்ளார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது இதற்கு மேல் சுமையை ஏற்ற இடம் இல்லை. பிரதமரின் இலவச கேஸ் ஸ்டவ்களை வாங்கி யவர்களில் 99 சதவீதம் பேர் புது சிலிண்டர்  வாங்கவில்லை என உத்தரகண்ட் ஆய்வு ஒன்று கூறுகிறது. கார்ப்பரேட் வரி களை அதிகரிக்கிற அரசியல் உறுதி இல்லை.  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனம் இது. இரண்டு முறைதான் பட்ஜெட் ஏழை என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளது. “இதுவரை தேசம் கேட்டிராத  முதலாளித்துவ பட்ஜெட் உரை” (Most Capitalist speech ever) என்று விமர்சித் துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் அதை மறுக்க முனையவில்லை. “இது எங்களுக்கு தரப்படும் சான்றி தழ்” என்று கூறி உள்ளார். கார்ப்பரேட் பக்கம் நிற்பதில் எந்த கூச்சமும் இந்த அரசுக்கு இல்லை என்பதை இந்த பதில் நிரூபிக்கிறது.  சாட்டை ஒரு பக்கம் சுழலும் போது இரத்த ருசி பார்க்கிறது. இன் னொரு பக்கம் பூக்களை தூவுகிறது. ரசிக்க முடியாத நிஜ “மாஜிக்.” 

உறுதி மொழியைக் காப்பாற்றுமா அரசு?

விவசாயிகள் போராட்டம் அரசை இறங்கி வர வைத்தது. பிரதமர் மன்னிப்புக் கூட கேட்டார். “குறைந்த பட்ச ஆதார விலை” பற்றி பரிசீலிக்க ஒரு குழு போடப்படும் என்று கூட அரசு ஏற்றுக் கொண்டது. தேர்தலுக்காக இறங்கிய அரசு உண்மையில் மனம் இரங்கவில்லை என்பதையே இந்த பட்ஜெட் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.  குறைந்த பட்ச ஆதார விலையாக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் படி C 2 + 50 சதவீதம் தர வேண்டும். அதாவது பயிர் செலவுகள் + குடும்ப உழைப்பின் மதிப்பு + இட்ட முதலீடு மீதான லாப வட்டி + 50  சதவீதம் என்று அர்த்தம். இதுவே விவ சாயிகள் கோரிக்கை.  ஆனால் இந்த பட்ஜெட் முன்னோக்கி செல்லவில்லை. ரிவர்ஸ் கியர் போட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம், கொள் முதல் செலவுகளுக்கான ஒதுக்கீட்டில் 28 சதவீதத்தை வெட்டி யுள்ளது. உரமானிய ஒதுக்கீடு 25 சதவீதத்தை குறைத்துள்ளது. பி.எம் கிசான் திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.6000 தருவதற்கு 75000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டு இருப்பதோ 68000 கோடி.  கிராமப்புற விவசாயத் தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச நிவாரணம் தரக் கூடிய “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான” ஒதுக்கீடு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 25000 கோடி குறைவு. கிராம மக்கள் மீது குரூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

எறிகிற கல்களில் இன்னொரு கல்

பொதுத் துறை பங்கு விற்பனைக்கு பல காரணங்கள் முன் காலங்களில் சொல்லப்பட்டாலும் இப்போது “அரசின் பட்ஜெட் தேவைகளுக்காகவே” என்ற உண்மையை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கின்றனர். மாற்று வழிகள் உண்டு. ஆனால் அவற்றை கையாள மனமில்லை. பங்கு விற்பனை, தனியார்மயம், கேந்திர விற்பனை, பணமாக்கல் ஆகிய எல்லாமே அரசின் வருவாய் திரட்டல் தோல்வி அடைந்ததன் வெளிப்பாடே.  ஆனால் பொதுத் துறை பங்கு விற்பனை என்பதன் நோக்கம் இன்னும் ஆழமானது. தனியார் கைவசம் பொருளாதாரத்தின் கடிவாளத்தை முழுதாக கொண்டு வருவதே ஆகும். அது பட்ஜெட் எல்லைகளையும் கடந்த விவாதம் என்றாலும் இந்த பட்ஜெட்டும் அதற்கான பங்களிப்பை செய்துள்ளது. 

கடந்த ஆண்டு பொதுத்துறை பங்கு விற்பனை இலக்கு 1.75 லட்சம் கோடி. ஆனால் இதுவரை வந்திருப்பது 12029 கோடி தான். காரணம் பொது இன்சூரன்ஸ், வங்கி தனியார்மய முன் மொழிவுகள் கடும் எதிர்ப்பை சந்தித்ததுவாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட முன் மொழிவு மக்களின் கவனத்தை ஆதரவைப் பெறக் கூடியதாக இருக்காது என்று அரசு நினைத்தாலும் வரிசை யான முடிவுகளின் குவி விளைவு “கார்ப்பரேட் ஆதரவு” இமேஜை சட்டமன்ற தேர்தல் நேரம் உருவாக்கி விட வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். விவசாயிகள் போராட்டத்தின் தாக்கமாக வும் இணைந்து இருக்கலாம். திருத்திய மதிப்பீடு தற்போது 78000 கோடி. பங்கு விற்பனை இலக்கிற்கு மிகக் குறைவாக வரு வாய் இருப்பதால் எல்.ஐ.சி பங்கு விற்பனையை விட்டால் நிதி திரட்டலுக்கு  வேறு வழியில்லை என்று அரசு நினைக்கிறது. ஆகவே பட்ஜெட்டில் எல்.ஐ.சி பங்கு விற்பனை குறித்த நகர்வு களை அரசு பகிர்ந்து கொண்டு தனது முனைப்பை வெளிப் படுத்தியுள்ளது. 

 

கோவிட் காலத்து அனுபவங்களைக் கூட இந்திய ஆட்சியா ளர்கள் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் ஏப்ரலுக்கு பிறகு மினி ரத்னா – நவ ரத்னா –  மகாரத்னாக்கள் எல்லாமே துரத்தப்படலாம். அடுத்த ஆண்டுக்கு 65000 கோடி இலக்கு. அடுத்த ஆண்டு ஏன் இலக்கு குறைகிறது என்று கேட்டால் “நிதி கணக்கியல்” (Fiscal Math) நெறிகளை கணக்கில் கொண்டுள்ளோம் என்று வரு வாய் செயலாளர் கூறியுள்ளார். அப்படியெனில் போன ஆண்டு நெறிகளை பற்றி கவலைப்பட வில்லையா? இவர்களுக்கு என்ன நெறி? நவீன தாராளமயத்தின் “நெறி” தார்மீக நெறியாக எப்படி இருக்க முடியும்? இவை எல்லாம் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். 

மொத்தத்தில் பட்ஜெட் ஒரு விஷச் சுழலில் இந்திய மக்களை சிக்க வைக்கிறது. நுகர்வு வீழ்ச்சி – உற்பத்தித் தேக்கம் – வாங்கும் சக்தி மீது தொடர்ந்த அடிகள், வரிகள் – நுகர்வு வீழ்ச்சி – உற்பத்தித் தேக்கம் என… அரசின் “தீர்வே” மேலும் நோயை தீவிரம் ஆக்குகிறது.  ஆகவே அரசு முதலீடு, மக்களின் வாங்கும் சக்தி உயர்வு, வருவாய் திரட்டலில் வசதி படைத்தவர்கள் மீது வரி, விவசாயி கள் – சிறு தொழில்கள் – நகர்ப்புற உழைப்பாளி மக்கள் ஆகி யோர் நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றை மக்கள் மத்தி யில் முன் வைக்க வேண்டும்.  இந்த மாற்றுப்பாதையை விரும்பவில்லை. அவர்கள் எறிகிற கல்களில் இன்னொரு கல்லாகவே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

–நன்றி. தீக்கதிர் இதழ்.

கட்டுரையாளர், க.சுவாமிநாதன். தென்னிந்திய எல்ஐசி  ஊழியர்கள் சங்கத் தலைவர்.

img

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.