கள்ளன் திரைப்படம் பார்த்துவிட்டு இப்போதுதான் இல்லம் வந்தேன். குற்றங்களின் சூழலை, குற்றவாளிகளின் மனநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்த படம்.
ஒவ்வொரு குற்றமும் இன்னொரு குற்றத்தைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. சங்கிலித் தொடர் போல குற்றங்கள் விரிவதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்திரா தங்கராஜ். ஏறத்தாழ கதை மாந்தர்கள் அனைவருமே சிறைப் பறவைகள். அவர்களின் தர்க்கங்கள், நியாயங்கள் விநோதமானவை. யாரையும் நியாயப்படுத்தாமல் கதைக்கு வெளியே நின்று கதையைச் சொல்லி இருப்பதுதான் இயக்குனரின் திறமை. சடுதியில் மாறுகிற அவர்களின் சுயநல தராசுகள் பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்த விறுவிறுப்பு படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை நீடிக்கிறது.
முக்கியமாக சொல்ல வேண்டியது கதாபாத்திர தேர்வு. அத்தனை பேருமே கதையை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். கரு பழனியப்பன் எல்லோருடனும் ஒருவராக கலந்து இயல்பாக நடித்திருக்கிறார். படத்தில் இரண்டு பெண் பாத்திரங்கள். குணங்களின் இரண்டு துருவங்கள். பேராசைக் கொண்ட ஒரு பெண். ஒருவகையில் அது பேராசை கூட அல்ல… அந்தப் பெண்ணின் மொழியும் பாவனையும் தமிழ் திரையுலகுக்கு புது வரவு.
புதிய பிரதேசங்களில், புதிய கதைக்களம். இயற்கையான சூழ்நிலைகளே ஒளிப்பதிவுக்கு உடந்தையாக நிற்கின்றன.
எல்லாவற்றுக்கும் சேர்த்து சந்திராவுக்கு ஒரு பூங்கொத்து.
முகநூலில் எழுத்தாளர் தமிழ்மகன்