தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும்.
சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து மருவி மருவி புதுச்சொல் ஆகியிருக்கும். அதன் முழுப்பொருள் புரியாமலேயே நாம் பேசிக்கொண்டிருப்போம்.
அப்படிப்பட்ட சொற்களில் ஒன்றுதான் பூச்சாண்டி.
பூசாண்டி என்றால் பேய் பூதம் வகையைச் சேர்ந்த ஒருவர் என்பதாக அது புழக்கத்திலிருக்கிறது.
உண்மை அதுவன்று.
மன்னர் காலத்தில் சைவ வைணவ போட்டிகள் ஏராளம். அப்படிப்பட்ட் சூழலில் ஆட்சிக்கு வந்த ஒரு வைணவத்தைப் பின்பற்றும் மன்னர், சைவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்.
குறிப்பாக சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்.
அதற்கு எதிராகக் களமிறங்கிய சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு உடல்முழுதும் திருநீறு பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப் பூசிக்கொண்ட ஆண்டிகள்தாம் மக்களால் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர்.
அரசாங்கம் அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்தியிருக்க்கிறது.
இக்கூற்ரை மையமாகக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதி அதைப் படமாகவும் ஆக்கியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த ஜே.கே.விக்கி.
தொல்பொருட்களைத் தேடித் தேடிச் சேகரிக்கும் ஒருவருக்கு பழங்கால நாணயம் ஒன்று கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு ஆவிகளோடு பேசும் விளையாட்டை அவரும் அவருடைய நண்பர்களும் விளையாடுகின்றனர்.
அதன்விளைவு ஒருவர் திடீர் மரணமடைகிறார். அத்னால் வெகுண்டெழும் நண்பர்கள் அதன் பூர்வீகத்தை அறிய உயிரைப்பணயம் வைத்துப் புறப்படுகின்றனர். அதன்பின் என்னவெல்லாம் ந்ட்க்கிறது? எனப்துதான் படம்.
நண்பர்களாக நடித்திருக்கும் தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், கணேசன் மனோகரன் ஆகியோர் நடிப்பது போலன்றி மிக இயல்பாகப் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.
ஆராய்ச்சி மாணவியாக முக்கிய வேடமேற்றிருக்கு ஹம்சினி பெருமாள் படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் முகமதுஅலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை நமக்குக் காட்டியிருக்கிறார்.
ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் திகில் ஏற்படுத்துகின்றன.
ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, பொறுப்புடன் நடித்திருக்கிறார். படத்தில் மதுரையைச் சேர்ந்தவராக வருகிறார்.படத்தில் அவர் பெயர் முருகன். அவற்றையும் திரைக்கதையில் சேர்த்து மலேசியாவையும் தமிழ்நாட்டையும் பண்பாட்டுக் கண்ணியில் இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.
கமல்ஹாசனுடைய தசாவதாரம் போல் பெரிய அளவில் செய்யக்கூடிய கதைக்கரு மற்றும் களத்தைக் கொண்ட படம்.
சின்னதாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்.
பயப்பட வைக்கும் பூச்சாண்டியல்ல பண்பாட்டுப் பாடம் நடத்தும் பூச்சாண்டி.