புது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மாயன். தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழும் டத்தோ கணேஷ் தயாரித்துள்ளார்.

தமிழ் மண் வாசம் மாறாமல் “மாயன்” இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை வெளியீட்டு விழா.

இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய், கதாநாயகன் வினோத் மோகன், நடிகை ரஞ்சனி நாச்சியார், ஆர்.கே.சுரேஷ், நடிகர் சாய் தீனா, ஜாகுவார் தங்கம், இயக்குனர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது.

ஆர்.கே.சுரேஷ் பேசும்போது…

500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைத் தூக்கிப் பிடிக்க நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும். அஜித் பற்றிப்பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. சினிமாவில் இருந்துகொண்டே இங்கு இருப்பவர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி விமர்சிப்பது தவறு. இப்படம் வெற்றியடைந்தால் 1000 பேர் நன்மையடைவார்கள். இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமௌலி. இப்படத்தைப் பார்த்து விட்டு ராஜமௌலி பாராட்டியிருக்கிறார். பின்னணி இசையைப் பார்க்கும் போது இப்போதே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. கதாநாயகன் வினோத் மோகன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஜாகுவார் தங்கம் பேசும்போது…

மாயன் என்றால் என்ன என்று பார்க்கும்போது முதலில் தமிழன், பின்பு ஆங்கிலன் என்று நினைத்தேன். இப்படத்தின் டிரைலரைப் பார்த்து தமிழன் தான் என்று முடிவு செய்தேன். இப்படத்தில் தமிழ்நாட்டில் சுனாமி வந்து பின்பு உலகம் முழுக்க வருவதாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். உலகம் முழுக்கப் பரவி இருப்பது தமிழ் தான். மலேசியாவில் இருந்த வந்த தயாரிப்பாளர் தமிழ் மண்ணிற்கு வந்த பிறகுதான் வெற்றி என்றார். ஒரு நடிகர் வெற்றி பெறுவது தமிழ் மண்ணில் தான். நாயகன் வினோத்திடம் நாயகனுக்கான திறமையும், ஆன்மீகமும் இருக்கிறது. இத்துறையில் வெற்றியடைய வாழ்த்துகள். இசையமைப்பாளர் ஜோன்ஸ் இளையராஜாவாக வருவார். ஒளிப்பதிவாளர் வெளிநாட்டிற்குச் சென்று விடுவார் என்று நினைக்கிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள். நிச்சயம் நான் உங்களிடம் வருவேன். இப்படம் நிச்சயம் வெற்றியடையும்.

படத்தின் இயக்குநர் ராஜேஷ் பேசும்போது…

மாயன் படம் என்பதை விட நிகழ்வு என்று தான் கூறுவேன். ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தை எடுத்தோம். பின்னால் வரும் சந்ததிகளுக்கு இப்படம் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கும். இப்படத்தின் கதையை ஜோன்சிடம் இரவு கூறினேன். காலையில் இசையமைத்துக் காட்டினார். விரைவாகப் பணியாற்றக் கூடியவர். இனி அவரைப் பிடிக்க முடியாது. இப்படத்தில் பணியாற்றியவர்கள் சிலரால் இன்று பேச முடியவில்லை. ஆனால், அவர்களின் பணி பேசப்படுகிறது. சாய் தீனா பத்து தலை இராவணனாக நடித்திருக்கிறார். அவர் தலையை தட்டுவது வெளியில் சத்தம் கேட்கும். ஆனால், படம் பார்க்கும் போது உங்களுடைய திறமை வெளிப்படும். பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் வர முடியவில்லை. பிரியங்கா மோகனனுக்கு இது முதல் படம். இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன் பேசும்போது…

நான் தங்கியிருந்த அலுவலகம் அருகே 2 வருடம் அமைதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் யார் என்று என் உதவியாளர்களிடம் கேட்டேன். ஒரு சினிமா யூனிட் தான் என்று கூறினார். ஆனால், அமைதியாக பணியாற்றி இப்படி ஒரு படத்தைப் பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார்கள். பாகுபலி மாதிரி தமிழ்ப் படமும் பிரமாண்டத்தைச் சுமந்து பிற மொழிகளுக்குச் செல்ல வேண்டும். இப்படத்தைப் பார்த்த பிறகு அந்த நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் அனைவரும் நேர்த்தியாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜோன்ஸ் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். டைட்டானிக் படத்தை இசையில்லாமல் பார்த்தால் வெறும் கப்பல் மட்டும் தான் தெரியும். இசையோடு பார்க்கும்போது தான் காதல் தெரியும். இப்படக்குழுவினருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது என்றார்.

இறுதியாக, இப்படத்தின் இசைத் தட்டு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.