’பசங்க’முதல் ‘கடைக்குட்டி சிங்கம்’ வரை தனது தரமான படைப்புகளால் தனித்து நிற்கிற இயக்குநர் பாண்டிராஜின் சற்றே மசாலா கலந்த சமூகப் படம் தான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’. பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கல் குறித்து ஏற்கனவே பல படங்கள் பாடம் நடத்திய நிலையில் தன் பங்குக்கு உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.
இரத்தம் தெறிக்கத் தெறிக்க, ’கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப் புகுந்து விளையாடியிருக்கிறார். அட்டகாசமான அறிமுகம் அம்மாவிடம் குழைவு அப்பாவிடம் பணிவு காதலியிடம் கனிவு எதிரிகளிடம் துணிவு என எல்லாவகை உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்கிறார் சூர்யா.
நாயகியாக பிரியங்காமோகன். உடலைக்கடந்து பெண் வரவேண்டும் என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக அவர் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் ஒரு சின்னப்புன்னகையில் கவர்கிற பிரியங்காமோகன், அந்த வீடியோ பாத்தியா? முழு வீடியோ அனுப்பு என்கிறவர்களைப் பற்றிப் பேசும் காட்சியில் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். அழகில் மட்டுமல்ல நான் நடிப்பிலும் அசத்துவேன் என்று பல காட்சிகளில் நிரூபிக்கிறார்.
சூர்யாவின் அப்பாவாக சத்யராஜ் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், உறவினர்களாக இளவரசு, தேவதர்ஷிணி, எம்.எஸ்.பாஸ்கர், வேல இராம்மூர்த்தி ஆகியோர் பாத்திரமறிந்து ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார்கள். மகளுக்கு திடீர்கல்யாணம் அதையொட்டி இளவரசு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றன.
சூரி, இராமர், தங்கதுரை, புகழ் ஆகியோர் தங்கள் பங்குக்கு நம்மை அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார்கள்.வினய்யின் பாத்திரம் கொடூரமானது, அதில் நன்றாக நடித்து நம்மைக் கொலைவெறிக்கு ஆளாக்குகிறார்.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குப் பலம். டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் பின்னணியில்தான் இருக்கிறார்.
பெண்கள் தங்கள் உடல்களைக் கடந்து பெண்கள் வரவேண்டும் என்பதோடு பெண்ணுடல் சம்பந்தப்பட்ட காணொலிகள் வெளியாகும் போதெல்லாம் அவற்றை இந்தச் சமுதாயம் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் வசனங்களில் மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்துவிட்டார் இயக்குநர் பாண்டிராஜ். மனைவிக்குச் சூர்யா சொல்லும் ஆறுதல்கள் ஒரு பெண்ணுக்கானது மட்டுமன்று ஒட்டுமொத்தப் பெண்களுக்குமானது.
மசாலாப்பட பிரியர்களையும் சேர்த்து கவரக்கூடியவன் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.