பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை!
‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில முறை பிரசாத் ஸ்டுடியோவிலும், ஒரே ஒரு முறை அவரது வீட்டிலும் சந்தித்துள்ளேன்.
அயராத உழைப்பும், விடா முயற்சியும், இசையின் மீதான காதலும் அவரை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டன! அவர் ஒரு பெரிய விருட்சமாக கிளை விரித்து நிற்கிறார்! ஆனால், வேர்களை புறம்தள்ளி வெறுக்கப் பார்க்கிறார்!
சுமார் பத்தாண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரச்சார அண்ணன் பாவலருடன் இசைக்குழுவாக அவர் இயங்கிய காலமும், அதன் பின் எட்டாண்டுகள் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக பசி, பட்டினியோடு திரிந்த காலமும் அவருக்கு நல்ல பட்டறிவையும், பக்குவத்தையும் தந்திருக்க வேண்டும். ஆனால், வெற்றியின் உச்சமும், செல்வக் குவியலின் திரட்சியும் அவருக்குள் ஆணவத்தை உருவாக்கிவிட்டன!
அவர் ஆதி சங்கரரையும், ரமணரையும் வணங்குகிறார்!
அருட்பெருஞ் ஜோதி வள்ளலாரை பெரிதாக பொருட்படுத்தமாட்டார்!
தமிழிசையைத் திருடி கர்நாடக இசைக்கு மாற்றிய தியாகய்யரைத் தான் விதந்தோதுவார்!
உண்மையான சுயம்புவான தமிழ் இசை மாமேதை ஆபிரகாம் பண்டிதரை பொருட்படுத்தமாட்டார்!
இசைக்கு உயிர் தருவதில் தமிழுக்கும், கவிதைக்கும் உள்ள பங்களிப்பை முற்றாக நிராகரிப்பார்!
பலரது கூட்டுப் பங்களிப்பில் தான் பாடலின் வெற்றி சாத்தியமாகிறது என்றால், ஏற்க மாட்டார்!
”சகலமும் நானே, சர்வமும் நானே..”என்பதை விடாப்பிடியாக கொண்டிருப்பவர்!
வெற்றி பெற்றவன் சொல்வதெல்லாவற்றையுமே வேதவாக்காக ஏற்கிறது இந்த சமூகம்!
இசைக் கடவுள், இசைக் கடல், இசை தெய்வம், ராகதேவன், இசை ஞானி..என்று உணர்வு ரீதியாக மக்கள் அவரை உச்சத்தில் வைத்துவிட்டனர். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக அவரே இவற்றை எல்லாம் நம்புவது தான் சோகம்! இதனால் தனக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ, தன்னுடைய பிறப்புக்கு முன்னும் பெரும் இசை மேதைகள் இருந்துள்ளனர், தனக்கு பின்னும் தன்னை விஞ்சக் கூடியவர்கள் வந்து கொண்டுள்ளனர் என்பதை உணர மறுக்கிறார்.
இளையராஜா எனும் ராஜையா பண்ணைபுரத்தில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை அதட்டியும், மிரட்டியும் வேலை வாங்கிய கங்காணியான எம்.ஆர்.ராமசாமியின் மகன் என்பதையும், அந்த ராமசாமியின் நான்காவது மனைவிக்கு பிறந்தவர் என்பதையும், மூன்றாவது மனைவிக்கு பிறந்த பாவலர் வரதராஜனிடம் ஆரம்பகால இசையை கற்றவர் என்பதையும் மாற்றிவிட முடியாது. சமகால வரலாறு என்பதால் அதில் புனைவை புகுத்தி, அவர் பிறக்கும் போதே வானில் உள்ள தேவர்கள் வாழ்த்தி இசை மழை பொழிந்தனர் எனக் கூறிவிடமுடியாது.
1950 களிலும், 1960 களிலும் பாவலர் வரதராஜன் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்த தோழர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். பாவலர் ஒரு உண்மையான போராளி! தன் கலைத் திறமையை பாட்டாளிவர்க்க எழுச்சிக்கும், விழிப்புணர்விற்கும் பயன்படுத்தியவர். ” நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒப்பற்ற கலைஞன்” என்பதை அவர் பகிரங்கமாகவே பெருமையோடு கட்சி மேடைகளில் சொல்வார்.
தோழர் அ.பத்மநாபன் சில சம்பவங்களை சொன்னார். ஒரு முறை மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் கட்சி கூட்டம் நடந்தது. பாவலர் வரதராஜனின் இசை கச்சேரியைத் தொடர்ந்து பேச வந்த தோழர்.ஈ.எம்.எஸ். நம்பூதரிபார்ட் சொன்னார். ”இதோ இங்கே நம்மை இசைவெள்ளத்தில் மூழ்கடித்தாரே இவர் தான் கேரளத்தில் நம் கம்யூனிஸ்ட் அரசை காப்பாற்றியவர். இடுக்கியில் நடந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பிழைக்கும் என்ற சமயத்தில் முதல்வரோ, அமைசர்களோ போய் பவர் பிரயோகத்தை காட்டக் கூடாது என்ற நிலையில் பட்டிதொட்டி எங்கும் பாவலரைத் தான் இசைப் பிரச்சாரத்திற்கு அனுப்பினோம். அவர் தான் வெற்றியை ஈட்டித் தந்தார். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த எளிய தோழர் ஒருவரால் தான் நமது மந்திரி சபையே பிழைத்தது” என்று சொல்லி பெருமைப்படுத்தினார்.
இளையராஜாவுமே நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.எம்.அலிக்கு ஆதரவாக கச்சேரி செய்ய வந்த போது, தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்ததால் தனக்கு ஏற்ப்பட்ட இன்னல்கள் குறித்து பேசினார். ‘கம்யூனிஸ்ட் மேடைகளே தங்களுக்கு கெளரவத்தை பெற்று தந்ததையும், வாழ்வாதாரமாக இருப்பதையும்’ கூறி நெகிழ்ந்தார்.
ஆனால், அதே இளையராஜா ஒரு மேடையில் எழுத்தாளர் சு.சமுத்திரம் நானும், இளையராஜாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை சொன்ன போது, ”நான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவனல்ல” என பட்டென மறுத்து கோபமாகப் பேசினார்! உடனே சு.சமுத்திரம் இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டு, ‘அதை நீ ஏன் மறுக்க வேண்டும்’ என்ற தன்மையில் பேசிய நிகழ்வையும் ஜீவபாரதி பதிவு செய்துள்ளார். இதே போல பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் இளையராஜாவின் பெருமைகள் குறித்து எழுதிய நூலில் இளையராஜா ‘தலித்’ என்பதை பெருமையுன் குறிப்பிட்டதால், அந்த நூலுக்கே நீதிமன்றத்தில் தடை பெற்றார்.
இதன் மூலம் இமாலய வெற்றியை குவித்த போதிலும், இன்றைய நிலையில் இளையராஜா தான் பிறந்த சாதியை தாழ்வாக கருதி மறைக்கிறார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அதை மறைக்கத் துடித்தது அவரது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான்! இதன் மூலம் அந்த சமூகத்தில் பிறந்த லட்சோப லட்சம் எளிய மனிதர்களுக்கு இயல்பாக அவர் குறித்து ஏற்படும் பெருமிதத்தையும், தன் நம்பிக்கையையும் அவர் சீர்குலைக்கிறார். ஏனென்றால், அவர் இசை தெய்வமாகவல்லவா இருக்கிறார்!
பணம், அதிகாரம், புகழ் இந்த மூன்றிலும் கட்டுக் கடங்காத ஆர்வமும், ஆசையும் உள்ளவர் தான் இளையராஜா! இதை அவரோடு தொடர்புள்ள யாருமே மறுக்க முடியாத உண்மை. தன்னிடம் பேசுபவர்கள் தங்களை பவ்யமாக வைத்துக் கொண்டு ஒடுங்கிய நிலையில் பேச வேண்டும். தன் காலைத் தொட்டு வணங்கி பேசுபவர்களுக்கு தான் ‘ஸ்பெஷல் அட்டென்ஷன்’ தருவார்! காசு விவகாரத்தில் படுகறாராக இருப்பார்! மது, மாது, கறுப்பு பணம் இந்த மூன்றையும் விலக்க முடியாதவர் என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது! ஆனால், தீடீரென முற்றும் துறந்த மாமுனிவர் போன்ற தோரணைகளை அவர் வெளிப்படுத்துவார். அவரது இந்த போலித் தனங்களுக்கு உலகம் புளகாங்கிதப்பட வேண்டும் எனவும் நினைப்பார்!
இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், அவர் சகவாசமெல்லாம் உயர்சாதியினரோடு தான்! அவர்களோடு ஒன்றாக அறியப்படுவதில் அவர் பெருமிதம் கொள்கிறார். அவர்களால் கொண்டாடப்படுவதற்கே அதிக கவனம் காட்டுகிறார். அதற்கேற்பவே தன் வாழ்க்கை முறைகளை கட்டமைத்துக் கொண்டுள்ளார். இவை குறித்தெல்லாம் அவர் தம்பி கங்கை அமரன் பல சம்பவங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். ஆனால், சினிமா துறையில் அந்த சமூக இயக்குனர்களோடு அவர் மோதியதால் அவரது உச்சத்தை முறியடித்தவர்களும் அவர்கள் தான்!
பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைக்க வேண்டும். திருவையாறு தியாகய்யர் ஆராதனைக்கு அழைக்க வேண்டும். இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் அவரது நிறைவேறாத ஆசைகள்!
அவருக்கு கிடைத்த மேஸ்ட்ரோ பட்டத்தைவிட, அவருக்கு இது நாள் வரை கிடைத்த அனைத்து பட்டங்களையும் விட, அவர் ஒரே ஒரு விஷயத்தில் அங்கீகாரம் பெற்றுவிட்டாரென்றால், தன் ஜென்ம சாபல்யம் தீர்ந்ததாகக் கருதுவார்! ஆனால், அது தான் அவருக்கு கிடைப்பேனா…, என மாயமானாக அவரை வாட்டி எடுக்கிறது.
அது, ”நீங்க தாங்க உண்மையான பிராமணன்” என உரியவர்கள் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்ற அவரது உள்ளக் கிடக்கை தான்!
நன்றி – சாவித்திரி கண்ணன். அறம் இணைய இதழ்.