‘நந்தா’.’பிதாமகன்’களுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணைந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் துவங்கி சுமார் இரு தினங்களுக்கு முன்பு பேக் அப் ஆனது. இந்த பேக் அப் செய்தியை சாதரணமாகப் போட்டால் கிளுகிளுப்பு போதாதே என்று நினைத்து, சிலர் படப்பிடிப்பில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே அடிதடி. இருவருக்குமே ரத்தச் சிராய்ப்புகள் ஆன நிலையில் படப்பிடிப்பு ரத்து என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள்.
இச்செய்தி இணையவட்டாரங்களில் பரபரப்பாகிவிட ‘பார்றா பாலா பழைய புத்தியை மாத்திக்கவே இல்ல…இன்னைய நிலமைக்கு அவருக்கு சூர்யா வாய்ப்பு தந்ததே பெரிய விஷயம். எப்பவுமே சேதுவா இருந்தா எப்படி வயசான அப்புறமாவது சாதுவா மாறவேண்டாமா?’ என்று கமெண்ட் அடித்து வந்தனர்.
இந்த நிலையில் அச்செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று மறுத்துள்ள படத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்,” செய்திகளில் வந்தது போலில்லாமல் படப்பிடிப்பு மிகவும் நல்ல படியான புரிதலுணர்வுடன் தான் நடைபெற்றது. முதல் ஷெட்யூல் திட்டமிட்டபடி 34 நாட்களில் முடிவு பெற்றபிறகே பேக் அப் ஆனது. அடுத்த ஷெட்யூல் ஜூன் மாதம் கோவாவில் தொடர இருக்கிறது” என்கிறார்.