மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது :

மஜித் மஜிதி எங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் என்றால், எங்கள் வேலையின் மீது கொஞ்சம் கூட ஐயம் கொள்ளத் தேவையில்லை என்று அர்த்தம். ஆனால், 1997ல் ஈரான் நாட்டிற்கேற்ப எடுக்கப்பட்ட களம் அது. அதை தமிழில் ரீமேக் செய்யும் போது சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.

முதலில் நாம் கதையை நேரான வழியில் சொல்ல முடியாது. மேலும், இப்போதுள்ள காலத்தில் தினக்கூலி வேலை செய்பவரின் வருமானம் கூட நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் ஆகிவிட்டது. அதனால் எளிதில் ஒரு ஷூவை வாங்கிட முடியும். ஆகையால், நான் இந்த படத்தை வயதுக்கு வந்த அண்ணன், தங்கை அவர்களின் கடந்த காலத்தை கூறும்படியாக 1997ல் நடக்கும் ஒரு கதையாகவே இதை அமைத்துள்ளேன்.

அவர்கள் தங்களின் ஊரை பற்றி, பள்ளி கூடத்தை பற்றி, வீட்டை பற்றி கதையை வாசித்து வர காட்சியில் அவர்களின் சிறுவயதையே காட்டப்பட்டுள்ளது. அதே போல், நம் நடைமுறையில் இருந்த ஒரு சில விஷயங்களை இணைத்துள்ளேன். சைக்கிள் வாங்குவதற்காக அப்பாவிற்கு தெரியாமல் அண்ணன் உண்டியலில் பணத்தை சேர்த்து வைத்திருப்பான். தங்கை ஷூ கேட்டதும் அதை வாங்கி கொடுக்க உண்டியலை உடைத்து அந்த பணத்தை எடுத்துச் செல்வான், ஆனால், அது பற்றாமல் போகும்.

அதே சமயம், உலகமயமாக்கல் காரணமாக அப்பாவிற்கு வேலையை இழக்கும் சூழல் நேரிடும். பிஎஃப் பணத்தை வைத்து ஷூ வாங்கலாம் என்று நினைப்பார்கள். கடன் கொடுத்தவன் அந்த பணத்தை வாங்கி சென்றுவிடுவான் என இது மாதிரியான சூழல்களை நான் இந்த படத்தில் வைத்துள்ளேன்.

மஜித் மஜிதி சார் இயக்கிய அந்த படத்தில் வறட்சியான ஒரு நிலப்பரப்பில் கதையை நகர்த்தி சென்றிருப்பார். ஆனால், ஷூ கண்டிப்பாக போட வேண்டும் என்ற சூழல் இருக்க வேண்டும் என்பதற்காக குளிர் பிரதேசமான கொடைக்கானல் பூம்பாறையில் கதை நடக்கும்படியாக அமைத்துள்ளேன். எனது பிள்ளைகளும் பத்மா ஸ்ரீ சேஷத்ரி பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள். சமயத்தில் அவர்கள் செருப்பு அணிந்து செல்வதும் உண்டு. ஆனால், கதையில் அப்படிப்பட்ட சூழல் இல்லாதது போல் காட்சியமைத்திருக்கிறேன்.

அப்பா அம்மா சிரமப்பட்டால் கூட பசங்களை கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால், அப்பா கதாபாத்திரம், படிப்பு மட்டுமே இந்த உலகத்தின் மாற்றத்திற்கு உதவும் என்று ஆணித்தனமாக நம்பும் ஒரு கதாபாத்திரம் அது.

கொடைக்கானல் அருகில் பூம்பாறை என்ற இடத்தில் தான் இந்த கதை நடக்கிறது. அந்த ஊர் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர் உருவானதாக ஒரு வரலாறு உள்ளது. குனும மன்னாடிகள் என ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த 16 பேர் இங்கு வந்து தங்கியுள்ளனர். அது அப்படியே நாளடைவில் உருவாகி 1600 வீடுகள் அங்குள்ளது. அந்த இடத்தை சுற்றி மலை இருக்கும், அந்த மலைக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் இந்த கிராமம் இருக்கும். அங்கு குழந்தைவேலப்பர் கோவில் என ஒரு கோவில் உள்ளது. அங்கு போகர் செய்த நவபாஷாண சிலை இருக்கிறது. முதல் சிலை பழனியிலும். இரண்டாவது சிலை பூம்பாறையிலும் உள்ளது.

அந்த மக்கள் நாம் இங்கிருப்பதை விட பக்தியாக இருக்கின்றனர். குழந்தை வேலப்பர் சாமியை அவர்கள் வீட்டுக் குழந்தையாகவே நினைத்து வழிபடுகின்றனர். நானும் குழந்தைகள் படம் இது என்பதால் குழந்தை வேலப்பரையும் கதையின் உள்ளே அமைத்திருக்கிறேன். இப்போது சில செல்போன் டவர்கள் வந்துவிட்டது. அதை காட்சியிலிருந்து தவிர்க்க முயற்சி செய்திருக்கிறேன். மற்றும் குழந்தை வேலப்பர் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். நாங்கள் 9 நாட்கள் 5 கேமராவை வைத்து அதை படம் பிடித்துள்ளோம். இளையராஜா சார் அந்த திருவிழாவிற்கு அருமையான ஒரு குத்து பாட்டை அமைத்திருக்கிறார்.

மேலும், THE CHILDREN OF HEAVEN படத்தில் அந்த குழந்தைகள் ஷூ வை வாங்குவதோடு படத்தை முடித்திருப்பார். நான் அந்த குழந்தைகள் அவர்கள் ஓடிய ஓட்டத்தை எப்படி வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது வரை காட்டியுள்ளேன்.

மேலும், கதாநாயகன் எட்டிட் ஷூட் வரை வந்து கதையைமாற்றிவிடுவார்கள் என்று கேட்கின்றனர்..
என் படத்தின் எடிட் சூட்டில் ஆர்டிஸ்ட்கள் வரமாட்டார்கள். அது அவர்களின் வேலை கிடையாது. அப்படி அவர்களுக்கு ஸ்கிரிப்ட்டில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் அதை படப்பிடிப்பின் போதே சொல்லலாம். அது அப்போதே தேவைப்பட்டால் மாற்றப்படும். ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங் என அனைத்தையும் செய்ய வேண்டியது ஒரு இயக்குனரின் கடமை. அதற்குதான் சம்பளம் வாங்குகிறார்கள்.. அது தான் அவரின் வேலையும் கூட. அதை விட்டு விட்டு நடிகர்கள் கருத்து சொல்ல ஏதும் இல்லை. அந்த நடிகர் ஒரு இயக்குனராக இருந்தால் அவர் கண்டிப்பாக மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். இல்லையெனில், உலகின் தலைசிறந்த நடிகர் சொல்வதற்கு கூட நான் அனுமதிக்கமாட்டேன். உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறதே தவிர நடிகர்களின் படத்தை அல்ல. இயக்குனர் எடுக்கும் படமே சரியான படம். மற்றவர்கள் கதையை மாற்ற சொன்னால் அது தவறான படமாகிவிடும். அந்த தவறை நான் ஒரு போதும் அனுபதிக்க மாட்டேன். அதற்கு பதில் நான் தோட்ட வேலைகளையோ அல்லது முடி திருத்தம் செய்தோ சம்பாதிப்பேன்.

இந்த படத்தில் கூட அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்.. ஒரு வசனம் எனக்கு சரியாக படவில்லை.. அதற்கு பதிலாக இந்த வார்த்தை பயன் படுத்தலாமா? என படப்பிடிப்பின் போதே கேட்டார். அந்த வார்த்தையும் சரியாக இருந்தது என நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால், எடிட் சூட் வரை நான் நடிகர்களை அனுமதிப்பது இல்லை.

நான் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனமான ஆள் தான். எங்கள் வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு இரண்டு அக்கா உள்ளார்கள். சிறு வயதிலிருந்தே கீழ் வீட்டுக் காரன் அடித்துவிட்டான் என்று தான் என்னை கூறுவார்கள். ஆனால், நான் அன்பானவன் கூட. பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ.சி. சார் என அனைவரிடமும் வேலை பார்த்திருக்கிறேன். என்னுடைய வேலையை செய்ய யாரேனும் தடுத்தால் கோபப்படுவேன். ஒரு இயக்குனர் தலைவனாக இருக்க வேண்டும். அவரே சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வேலை செய்ய முடியும். இல்லையென்றால், யார் வேண்டுமாலும் படத்தில் தலையிடுவார்கள். ஸ்கிரிப்ட்டில் என்ன இருக்கிறதோ அதை எடுக்க வேண்டுமென்றால், அந்த இயக்குனர் சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை அப்படி தான் இருந்திருக்கிறேன். என்னுடைய எட்டாவது படம் இது. ஆனால், ரிலீஸ் ஆகும் ஐந்தாவது படம்.

அன்றைய தினம் நடிகர் ஆதி கூட என்னை பார்த்தால் சிறிது பயமாக இருக்கிறது என்றார். அதே போல், இந்த படத்தின் படப்பிடிப்பின் போதும் 3 நாட்கள் மிகவும் கடினப்பட்டேன். குழந்தைகளும் என்னைப் பார்த்து பயந்தார்கள். பிறகு ஒளிப்பதிவாளர் நல்ல அனுபவமுடையவர். 80 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். அவர் தான், குழந்தைகளிடம் சிறிது அன்பாக சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் என கூற, நானும் என்னை மாற்றிக் கொண்டு கொடைக்கானல் சாக்லேட், நட்ஸ் அனைத்தையும் வாங்கி கொடுத்து ஒரு 65 நாட்கள் நானும் குழந்தையாகவே மாறிவிட்டேன். இந்த படத்தின் மூலம் நானே மாறியது போல் உணர்வு உள்ளது. இத்தனை நாட்கள் கோபமாக சொல்லும் போது செவி கொடுக்க யாரும் இல்லை. அன்பாக சொன்னால் அனைவரும் கேட்டுக் கொள்கிறார்கள் என்பதால் நான் இனிமேல் அன்பாக தான் அனைத்து விஷயங்களையும் சொல்ல போகிறேன்.

மேலும், ஒரு படம் இயக்கி கொண்டிருக்கும் போது அடுத்த படம் இது தான் என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால், என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றது. கங்காரு படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி வந்துவிட்டது. பலரும் இது மாதிரி இயக்குங்கள் என்று அட்வான்ஸ் கொடுத்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குள் பண மதிப்பு நீக்கம் (demonitisation) வந்து விட்டது. அதில் நிறைய பஞ்சாயத்தும் நடந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் (Children of Heaven) இப்படத்தை என் பிள்ளைகளோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் என்னுடைய அக்கா ஊரில் இருந்து வந்திருந்தார்கள். அவரும் இந்த படத்தை பார்த்து விட்டு இது மாதிரி உருக்கமான படத்தை எடுக்க மாட்டியா என்று கேட்டார். அப்போது தான் கண்டிப்பாக எடுக்கிறேன் என்று கூறினேன். உடனே மஜித் மஜிதி சாருக்கு மெயில் அனுப்பினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து இந்தியாவின் உரிமம் இந்தியாவில் தான் இருக்கிறது என்று பதில் வந்தது. யார் என்று விசாரித்த போது பர்ஃபெக்ட் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தின் உரிமத்தை வாங்கி இயக்குனர் பிரியதர்ஷனை வைத்து பம்பம்போலே என்ற பெயரில் ஹிந்தி மொழியில் 16 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார்கள்.

ஆனால், நான் பிரியதர்ஷனுக்கு தான் தொடர்பு கொண்டேன். அவர் அந்த நிறுவனத்திடம் பேசி இயக்குனர் சாமியிடம் கொடுங்கள் நன்றாக பண்ணுவார் என்று கூறினார். அதன்படி, தமிழில் மறு உருவாக்கம், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி -யுடன் உரிமம் வாங்கி இருக்கிறேன். இப்போதைக்கு ஓடிடி பற்றி எண்ணம் இல்லை. ஓடிடி-யை பொறுத்தவரை பிரபலங்கள் இருந்தால் வாங்கி கொள்வார்கள். இல்லையென்றால், திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றால் தான் வாங்குவார்கள். மேலும், இதே படத்தை 2D நிறுவனம் வெளியிடுகிறது என்றால் யோசிக்காமல் வாங்குவார்கள். ஏனென்றால், என்ன சொல்கிறார்கள் என்பதை தாண்டி யார் சொல்கிறார்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. இது உங்களுக்கும் தெரிந்த ஒன்று தான். இல்லையென்றால், மிகச் சிறந்த கதை, இடம், இசை, குழுந்தைகளுக்கான உணர்வுப்பூர்வமான உருக்கமான அனைவரும் பார்த்து அழக் கூடிய ஒரு படத்தை வெளியிட சிரமப்பட்டு பிவிஆர் மூலமாக நாங்கள் தானே வெளியிடுகிறோம்.

உதயநிதி ஸ்டாலினை சந்திக்க முடியுமா? என்று சொல்லுங்கள். செண்பக மூர்த்தி அவர்களை பார்த்தோம். ஆனால், அவர் மேல் உள்ள ஆட்களிடம் கொண்டு போக வேண்டும். பெரிய திமிங்கலம் இருக்கும் போது நான் சென்னாகுன்னி மாதிரி, என்னை எப்படி கண்டு கொள்வார்கள். மேலும், இப்படத்தை பெரிய பெரிய ஆட்கள் நிறைய பேர் பார்த்தார்கள்.

இப்படத்தை 120 முதல் 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

மே 6ஆம் தேதி பிவிஆர் மூலமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வெளியாகிறது.

அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds