கேள்வி: அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து இருக்கிறாரே!
பதில்:
ஐந்து நிகழ்ச்சிகள் நினைவுத் திரையில் ஓடுகின்றன.
ஒன்று .
ஒரு முறை நாணய விகடன் இதழில் அமெரிக்காவில் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வருகிற ஒருவர் பேட்டி கொடுத்து இருந்தார். அவர் தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர். அவர் அப் பேட்டியில், சத்துணவு திட்டம் மட்டும் இருந்திருக்கா விட்டால் என்னால் படித்திருக்கவே முடியாது, இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.
இரண்டு
ஒரு முறை மதுரை திடீர் நகர் அருகில் குடியிருந்த சாதாரண மக்களை வில்லாபுரம் பகுதிக்கு தற்காலிகமாக இடம் பெயரச் செய்திருந்தனர். அவர்கள் எல்லாம் துப்புரவு தொழிலாளர்கள். அன்றைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன் அவர்களுடன் சென்று இருந்தேன். குறைந்த பட்ச வசதிகள் இல்லாமல் அந்த மக்கள் இடப் பெயர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதை குமுறல் உடன் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக் கூடம் அவ்வளவு தூரத்தில் உள்ளது. காலையில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். எப்படி குழந்தைகளுக்கு காலை உணவு தந்து பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புவோம் என்று ஒரு தாய் கேட்டார்.
மூன்று
பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை ஒன்று. தெலுங்கானா கிராமம் ஒன்றில், அவரிடம் கோடை வெயில் காலத்திலும் பள்ளிக் கூடங்கள் திறந்து இருக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர். சாய்நாத் அதிர்ச்சியோடு குழந்தைகள் வெயிலில் சுருண்டு விடாதா என்கிறார். அதற்கு அந்த பெண்கள், பள்ளிக் கூடம் விடுமுறை என்றால் மதிய உணவு கிடையாது. எங்கள் பிள்ளைகள் எப்படி சாப்பிடும்? பசியால் உயிர் போகட்டுமா? என்று திருப்பிக் கேட்டார்கள்.
நான்கு
சென்னை வெள்ளத்தின் போது விருகம்பாக்கம் அருகில் ஒரு மாநகராட்சி பள்ளியில் இடிந்து போன சத்துணவுக் கூடத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கட்டித் தந்தோம். அப்போது எஸ்.எப்.ஐ முன்னாள் தலைவர் ஜி.செல்வா அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். 10 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகளை நாங்கள் அதிகாலையில் நடத்துகிறோம். ஏழைக் குழந்தைகள் பசியோடு வருகின்றன. சில நேரம் மயங்கி விழுந்து விடுவார்கள். ஆகவே நாங்கள் எங்கள் பணத்திலோ அல்லது யாராவது நன்கொடை தந்தாலோ அதில் இருந்து குழந்தைகளுக்கு ரொட்டி, பிஸ்கட், டீ வாங்கித் தருவோம் என்றார். அது போன்ற உதவிகளை செல்வாவும் அப்பள்ளிக்கு செய்து தந்து வந்தார்.
ஐந்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வணிக இதழ் பேட்டியில் கூறி இருந்தார். எல்லாவற்றிலும் தனியார் மயம் என்பதை ஏற்க மாட்டேன். அரசுப் பள்ளிகள் இல்லாதிருந்தால் என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்திய நிதி அமைச்சராக வந்திருக்க மாட்டேன் என்று 2001 இல் கூறி இருந்தார்
உயர் நடுத்தர வர்க்கத்திற்கு இந்த உலகம் தெரியாது. இலவசம் என்று முகம் சுளிக்கிறார்கள். இது வெட்டிச் செலவு போல நினைக்கிறார்கள். உண்மையில் இது முதலீடு என்பது அவர்களுக்கு புரிவதில்லை. இடை நிற்றலை பெருமளவு குறைக்கும். நிறைய திறமை மிக்க மனித வளம் சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் கிடைக்கும்.
காமராஜ் காலத்தில் துவங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவு திட்டமாக வளர்ந்து இப்போது திருமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காலைச் சிற்றுண்டி என மேம்பட்டுள்ளது.
அரசுக்கு ஒரு வேண்டுகோள். அரசே நேரடியாக நடத்துவதற்கு போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும்; அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்; உரிய ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்பதே.
க.சுவாமிநாதன். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்
#######################
செவ்வானம்