ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள நெல்சனை ரஜினி திரைக்கதையை சரிசெய்கிறேன் பேர்வழி என்று நோண்டி நொங்கெடுத்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அவர் படத்தை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், என்ற சுமாரான படத்தையும் விஜய் நடித்த வேஸ்ட் படமான பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இரைச்சல் மன்னன் அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை என்பதால் ரஜினியே ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். அமிதாப்பச்சனின் ’சீனி கம்’ படத்தின் கதையை மனதில் கொண்டு அதேபோல் ஒரு வேடத்தை உருவாக்கியிருக்கிறாராம். அதற்குள் ஒரு முன்கதை, அதில் பரபரப்பான காவல் அதிகாரி வேடம் ஒன்றை வைத்துக் கதை உருவாக்கினாராம்.
இந்தக்கதைக்கு திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் நெல்சன் அந்த வேலையில் ஈடுபட்டிருந்த நேரம் பீஸ்ட் படம் வெளியானது.
அப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றதுமே, ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்படுவார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின. அச்செய்தியை சன் நிறுவனம் மறுத்து வந்த நிலையில், வீண் பஞ்சாயத்துகள் வேண்டாம் என்று நெல்சன்னே படத்தை இயக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம் ரஜினி.
இந்நிலையில், இறுதி திரைக்கதை வடிவம் ஒன்றை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் நெல்சன். அதில் ரஜினிக்குத் திருப்தியில்லையாம்.இதனால் படவேலைகள் நகராமல் நின்றிருக்கிறது.
இப்போது அதற்குத் தீர்வு கண்டு படவேலைகள் தொடர்கின்றன என்கிறார்கள். ரஜினி எழுதியுள்ள கதைக்குத் திரைக்கதை அமைக்கும் வேலையை முழுமையாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒப்படைத்துவிட்டார்களாம். அவர் இப்போது திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறாராம். அந்தப் பணி நிறைவடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
கதை ரஜினி
திரைக்கதை வசனம் கே.எஸ்.ரவிக்குமார்
இயக்கம் நெல்சன். இப்படித்தான் பெயர்கள் வரப்போகின்றன என்கிறார்கள்.
இந்த ஓவர் குறுக்கீடுகளால் நொந்துபோயுள்ள நெல்சன் ஒரு கட்டத்தில் படத்தை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சன் டி.வி வட்டாரத்தில்.