இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா.
சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க வைக்கிறார். அவருடைய பரிதாபமான பார்வை ஒன்றே போதும் அவருடைய நடிப்பின் சிறப்பைச் சொல்ல.
அவருடைய மகனாக படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் புகழ் நல்வரவு. விசைத்தறித் தொழிலாளியாக அவர் வரும்போதே இரசிகர்களுக்கு நெருக்கமாகிவிடுகிறார். ஒருகட்டத்தில் குடும்பத் தொழிலான இஸ்திரி போடும் வேலையை வேண்டாவெறுப்பாகச் செய்யுமிடத்திலும் ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்திலும் எனக்கு நடிக்கவும் வருமென்று காட்டியிருக்கிறார்.
நாயகியுடனான காதல்காட்சிகளிலும் பொருத்தமாக நடித்துப் புகழ்பெறுகிறார் புகழ்.
நாயகி ஜெசிகாபவுல். இந்தப்படத்துக்கேற்ற அழகி. காதலனுடனான காட்சிகளில் எதார்த்தமாக இருப்பது அவருடைய பலம். அவர்கள் காதல் பிரிவு கொடுமை. நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
சிறப்புத் தோற்றத்தில் வந்து நம்பிக்கையூட்டும் நாசர்,ஆதிக்கசாதி மனோபாவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உட்பட எல்லா நடிகர்களும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
சேதுமுருகவேல் அங்காகரகன் ஒளிப்பதிவில், விசைத்தறிக்கூடங்கள் உட்பட எல்லாக்காட்சிகளும் இயல்பாக அமைந்திருக்கின்றன். நீதிமன்றக் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
சி.லோகேஷ்வரன் இசையில் பாடல்கள் தாழ்வில்லை. பின்னணி இசையும் அளவு.
கிராமத்தில் நிலவும் சாதீயப் போக்கு நீதிமன்றங்களில் நிகழும் ஆணவப்போக்கு ஆகியனவற்றால் எளியமனிதர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை எவ்வித அலங்காரமுமின்றிப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மகிவர்மன்.சி.எஸ்.