மூன்று மணிநேரப்படங்கள் பார்ப்பதற்கே பெரும் சோதனையாக இருக்கின்ற வேளையில் அமேஸான் நிறுவனத்தினர் இரு தினங்களுக்கு முன்பு ஆறு மணிநேரம் தொடர்ந்து பார்க்கும்படி ‘சுழல்’தொடரை பிரத்யேகமக திரையிட்டார்கள். துவக்கத்தில் ஆறு மணி நேரமா என்று சற்று மலைப்பாக இருந்தாலும் கடைசி வரை விறுவிறுப்பான ஒரு கதையைச் சொல்லி நம்மை கட்டிப்போட்டுவிட்டார்கள் புஷ்கர் காயத்ரி ஜோடி.
சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். இந்த பாலியல் அத்துமீற்லை ஒட்டி பல்வேறு கிளைக்கதைகளும் உண்டு.
பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ்.
திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று விசாரணை நடக்கிறது. அதன் முடிவு என்ன? என்பதுதான் தொடர்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல்பாதியில் அதிகம் வாய்ப்பு இல்லையென்றாலும் இறுதியில் உயர்ந்து நிற்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, காலமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும்படியான வேடத்தில் நடித்திருக்கிறார். வெடுக்கும் மிடுக்குமாக அசத்துகிறார்.
தொடரின் நாயகன் கதிருக்கு உதவி ஆய்வாளர் வேடம். அதற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். திருமணம் நிச்சயமான பின் அவருடைய காதல் வெளிப்படுவதும் அதை நாசூக்காக மணப்பெண்ணிடம் கடத்துவதும் நன்று.
தொழிற்சங்கத்தலைவராக நடித்திருக்கும் பார்த்திபன் அதற்கேற்ற கெத்துடன் வலம்வருகிறார். மகளை நினைத்துக் கலங்குமிடத்தில் நம்மையும் கலங்கவைக்கிறார்.
இளங்கோகுமரவேல், பிரேம்குமார், ஹரீஷ் உத்தமன்,பிரெட்ரிக்ஜான் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் தொடரில் இருக்கிறார்கள். அனைவரும் அவரவருடைய வேலைகளைச் சரியாகச் செய்து தொடர் போரடிக்காமல் செல்ல உதவுகிறார்கள்.
இயக்குநர் சந்தானபாரதி அசத்தியிருக்கிறார். அவருடைய வேடமும் அதை அவர் கையாண்டிருக்கும் விதமும் சிறப்பு.
சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை தொடருக்குப் பலம்.
முகேஸ்வரனின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் அழகு கண்களுக்கு விருந்து.
எட்டு அத்தியாயங்களாக ஒளிபரப்பாகும் இத்தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை பிரம்மாவும் அடுத்த நான்கு அத்தியாயங்களை அனுசரணும் இயக்கியிருக்கிறார்கள்.
இத்தொடரை எழுதியதோடு படைப்பாக்க இயக்குநர்களாக புஷ்கர் காயத்ரி இணையர் மிரட்டியிருக்கிறார்கள். ‘விக்ரம் வேதா’வுக்கு அப்புறம் எங்கே இவர்களைக் காணோம் என்று தேடியவர்களுக்கு இந்தத் தொடர் மூலம் பதில் தந்திருக்கிறார்கள்.
சமுதாயத்துக்குத் தேவையான ஒரு தகவலை உரக்கச் சொல்லும் நோக்கத்தில் ஒரு துப்பறியும் திரைக்கதையை அமைத்து அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை திருவிழாவைப் பின்புலமாக வைத்திருக்கிறார்கள்.
அரக்கனை அழிக்கும் அம்மன், பாவாடைராயன், சதுக்க சாமி என மயானக்கொள்ளை விழாவின் பாத்திரங்களை படத்தின் கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்கவாதியை கோடூர மனம் படைத்த குற்றவாளியாகக் காட்டியிருப்பதன் மூலமும், என்னதான் இங்குவந்து தொழில் செய்து பல பேருக்கு வாழ்க்கை கொடுத்தாலும் வெளியில் போனா நீ சேட்டுதான் என்கிற வசனம் மூலமும் புஷ்கர் காயத்ரி சொல்ல வருவதென்ன?
ஒரு மெல்லிய மையப்புள்ளியை வைத்துக்கொண்டு ஆறு மணிநேரத்துக்கு ஒரு தொய்வில்லாத தொடரைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். சுமார் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் ஆகி ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் இப்படம் தமிழில் எடுக்கப்பட்டைருப்பது என்பது நிச்சயம் நமக்குப் பெருமையான விசயம்தான்.