கொல்கத்தாவில் இசைக் கச்சேரியில் பங்கேற்றிருந்த பிரபல பாடகர் கே.கே திடீரென உயிரழந்தார். அவருக்கு வயது 53.
தமிழில் அவர், காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே, அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தின் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடிய பல பாடல்களில் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவரது மறைவு குறித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘கே.கேவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பாடல்கள் மூலம் அவரை நினைவு கொள்வோம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.