தமிழகத்தின் அத்தனை நாளிதழ்களிலும் நடிகை நயன்தாராவுக்கும் அவருடன் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக லிவிங் டுகெதராக வாழ்ந்த விக்கி என்கிற விக்னேஷ் சிவனுக்கும் நடந்த திருமணம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்கிறது. இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் ரூ 25 கோடிக்கு ஒளிபரப்பு உரிமை வாங்கியிருப்பதாக தகவல்கள் நடனமாடுகின்றன. இன்னொரு பக்கம் இவர்களது திருமண நிகழ்வை ஒட்டி தமிழகம் முழுக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் செய்திகள்.
படிப்பவர்களை ‘அடடே’ சொல்ல வைக்கும் இந்தச் செய்தி குறித்து பிரபல தயாரிப்பாளர் கஸாலி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி…இத்திருமணத்தை ஒட்டி அரங்கேற்றப்பட்டிருக்கும் முக்கிய மோசடிகளில் ஒன்றை அம்பலப்படுத்தியிருப்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது…
அவரது பதிவு இதோ….
நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணத்திற்கும், விருதுநகர் மாவட்டம் ஏ.புதுப்பட்டி கிராமத்திற்கும் என்ன சம்பந்தம்?
————————-——-
விருதுநகர் மாவட்டத்தில் ராம்கோ சிமிண்ட் ஆலைக்கருகில் இருக்கும் கிராமம் ஏ. புதுப்பட்டி.
இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் நெருங்கிய உறவுகளாக பல தலைமுறைகளாக வாழ்கிறவர்கள்.
நான் பிறந்து, வளர்ந்த ஊர் என்பதால் ஊர்ப்பாசம் எப்போதும் அதிகம்.
இங்கிருக்கும் இஸ்லாமியர்களில் பலர் சென்னை, கோயமுத்தூர், மதுரை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா என்று பல நகரங்களிலும், பல நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
வருடத்திற்கு ஒருமுறை அனைவரும் ஊருக்கு வந்து ஒன்றுகூடி சந்திக்கும் நிகழ்ச்சியானது பெரிய திருவிழா போல நடைபெறும்.
இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியால் என்ன நன்மை?
பல வருடங்களாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாத சொந்தங்கள் சந்தித்து உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் நிகழும்,
புதிய திருமண பந்தங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்,
கல்வி கற்க முடியாமல் கஷ்டத்திலிருப்பவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்,
மொத்தத்தில் பெரிய அளவு மன நிறைவு உண்டாகும்.
ஆறு வருடத்திற்கு முன்பு ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. நல்ல முகம்மது அவர்களின் தலைமையில் ஃபசூல் ஹக், சிவகாசி கிஷ்கிந்தா ஜாகிர், காரைக்குடி KMC டாக்டர் சலீம், கோயமுத்தூர் மிலிட்டரி ஹாஜா உள்ளிட்ட பலரின் கடின உழைப்பில் ஆரம்பமானது இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி!
கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டது.
எனவே, இந்த ஜூன் மாதம் 4 & 5 -ஆம் தேதிகளில் நடைபெற்ற சந்திப்புத் திருவிழாவிற்கு நிறையப் பேர் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.
பல லட்சம் செலவில் இனிதே நடந்தேறியது.
சரி… இந்த விழாவிற்கும், நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்?
நேற்று (09.06.2022) நடைபெற்ற அவர்களது திருமணத்திற்காக தமிழ்நாடு முழுவதும் வயதானவர்கள், ஆதரவற்றோர், அநாதைகள் என ஒரு லட்சம் பேருக்குமேல் இலவச உணவு வழங்கினார்கள் என்பது செய்தி. அது உண்மையா அல்லது வெறும் செய்தியா என்று தெரியவில்லை. காரணம், அன்னதானம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடங்களிலிருந்து ஒரு ஃபோட்டோ வீடியோ கூடவா கிடைத்திருக்காது?
எங்கள் ஊர் சந்திப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட உணவுப் பந்தி வீடியோவை ‘சன் நியூஸ்’ செய்திப் பிரிவு நைஸாகச் செருகி செய்தி வெளியிட்டுள்ளது.
எங்கள் ஊர் தலைவர்கள் பெரிய அளவு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஏ. புதுப்பட்டி கிராமத்து மக்கள் ஆதரவற்றோர்களா? அநாதைகளா? நயன்தாராவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா? என்று!
சன்நியூஸ் செய்தி எடிட்டரின் அலட்சியமா? அல்லது யார் நம்மைக் கேட்பது என்ற தெனாவெட்டா? எதையும் கிராஸ்செக் செய்யாமல் கையில் கிடைத்த கிளிப்பிங்ஸை கண்ட செய்திகளுடன் இணைப்பது தவறில்லையா?
சன் டீவி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் தயாராவதாகத் தகவல்.
செய்திப் பிரிவின் அலட்சியத்திற்கு ஒரு அளவு வேண்டாமா?
என்ன பதில் வருகிறதென்று காத்திருக்கிறோம்!
– கஸாலி