நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தை துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

‘ தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களையும் அவரே நேரடியாக தேர்வு செய்திருக்கிறார்.

அமேசான் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் வலைதள தொடர் ஒன்றிலும் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘மும்பைகார்’ எனும் ஹிந்தி படத்தில் நடித்தவருமான நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நடிப்பில் தேசிய விருது பெற்று, அனைத்து கதாபாத்திரங்களிலும் தம்மை பொருத்திக்கொள்ளும் நடிகரான சிம்ஹா முழு ஆக்ஷனுடன் பிருந்தா மாஸ்டருடன் கரம் கோர்க்கிறார்.

மேலும் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்தி, பல கதாபாத்திரங்களில் நடித்து, நம்மை கவர்ந்த நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் ‘ராட்சசன்’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி, நம்மை கவர்ந்த நடிகர் முனீஸ்காந்த், ‘தக்ஸ்’ கூட்டத்தில் ஒருவராக களம் இறங்குகிறார்.

இவர்களைத் தவிர இன்னும் ஏராளமான மண்ணின் மைந்தர்களை ‘தக்ஸ்’ கூட்டத்தில் பிருந்தா மாஸ்டர் அறிமுகப்படுத்துகிறார். மேலும் நடிகர் அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ‘ தக்ஸ் ‘ படத்தில் மூன்று பிரபலமான முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்புஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.