குதிரை குப்புற விழுந்ததோடு நில்லாமல் குழியும் பறித்த கதையாக லிங்குசாமியின் ‘வாரியர்’படம் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே அட்டர்ஃப்ளாப் ஆகி, கொஞ்சநஞ்சம் இருந்த நாயக ராமின் மார்க்கெட்டையும் அதலபாதாளத்துக்கு தள்ளிவிட்டது. இந்த வாரியர் படத்தின் பரிதாப வசூலைப் பார்த்து ஆந்திராவில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களுக்கு பூட்டும் போட்டுவிட்டார்கள்.
ஆனால் லிங்குசாமியும் அவரது சகாக்களும் படம் ஹிட் என்று தங்கள் அலுவலகத்தில் கேக் வெட்டிக்கொண்டாடினார்களே? அது ‘உள்ள அழுகுறேன்…வெளிய சிரிக்கிறேன்…. கதைதான் என்பது ஊருக்கெல்லாம் தெரியுமே…
இந்த பரிதாப டிராமா ஒரு புறமிருக்க தன்னை நெருக்கிக்கொண்டிருக்கும் கடன்காரர்களிடம்,…இந்தியில அமீர்கான் கூப்பிடுறாக, தெலுங்குல அல்லு அர்ஜூன் கூப்பிடுறாக,.. அவ்வளவு ஏன் ‘அஞ்சான் பார்ட் 2’ எடுக்கலாம்னு நம்ம சூர்யாவே அடம்பிடிக்குறாக என்று சகட்டுமேனிக்கு அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறாராம் லிங்கு.
மற்றவர்கள் மறுப்புச் சொல்லாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்க, ‘அஞ்சான் 2’ தகவலைக் கேட்டு சூர்யா தரப்புக்கும் அவரது ரசிகர் வட்டாரத்துக்கும் நெஞ்சுவலியே வந்துவிட்டதாம். ‘அவரு நெடுஞ்சான் கிடையா விழுந்து கிடந்தாலும் அடுத்த அஞ்சாறு ஜென்மத்துக்கு லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் தரமாட்டார் என்று தண்டோரா போட்டுக்கொண்டிருக்கிறது சூர்யா தரப்பு.