ஆகா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் புதிய வெப் தொடர் ‘அன்யாஸ் டுடோரியல். தலைப்பைப் பார்த்தவுடன் ஸ்போகன் இங்கிலீஸ் மாதிரி ஏதோ கிளாஸ் எடுக்கிறார்களோ என நினைத்துவிட வேண்டாம். இது திகில் கிளப்பும் ஒரு ரணகள க்ரைம் த்ரில்லர் வகையறா.

ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கையாக இருந்தும் இருவருக்கும் ஒத்து வரவில்லை. அக்காவிடம் இருப்பதை விட ஒரு பேயிடம் இருந்து விட முடியும் என்ற கோபத்தில் நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.

ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலையில் அது மக்கள் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிய கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்றும் ஆகிவிட நிவேதாவின் தனிமை தன்னந்தனிமை ஆகிறது.

தன்னை பிஸியாக வைத்துக்கொள்ள நிவேதிதா சமூகவலைதளங்களை நாடுகிறார். அன்யா’ஸ் டுடோரியல் என இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கம் உருவாக்கி அதன் மூலம் தன்னை பின் தொடர்பவர்களுக்குப் பல விதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்கிறார்.

இந்நிலையில் அவர் தனித்திருக்கும் அந்த வீட்டில் ஏதோவொரு சக்தியின் நடமாட்டம் இருப்பதை உணர்கிறார். அடுத்தடுத்து அமானுஷ்ய விஷயங்கள் நடந்தாலும், பேய் பிசாசெல்லாம் கிடையவே கிடையாது என பயத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

ஆனாலும் அமானுஷ்யங்கள் தொடர்கிறது. கூடவே இன்ஸ்டாவுக்காக அவர் உருவாக்கிய பேய் பொம்மை ஒன்றுக்கும் உயிர் வர… இந்தப் பேய்க்கு அக்காவே தேவலை என்றாகிறது!

இவை எல்லாவற்றையும் தன் வீட்டிலிருந்து நிவேதிதாவின் போன் உரையாடல் மூலமும் லேப்டாப் கேமரா மூலமும் கவனித்துக் கொண்டிருக்கிற ரெஜினாவுக்கு, தனது தங்கையின் நிலைமை விபரீதமாவது புரிய தொடரின் முன்பாதி முற்றுப் பெறுகிறது…

அந்த விபரீதத்திலிருந்து நிவேதிதா தப்பித்தாரா? ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத சூழலில் தங்கைக்கு அக்கா எந்தவிதத்தில் உதவினார்? எனபவை எல்லாம் பீதி கலந்த மீதி…

பெண்களை முன்னிலைப்படுத்தி இந்த தொடரை இயக்கியிருப்பதும் ஒரு பெண்தான் என்பது சிறப்பு… அவர் பல்லவி கங்கிரெட்டி

அந்த நீலமான முகத்தில் பரவலாக பலவித முகபாவங்களைக் காட்டி தன் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ரெஜினா காசென்ட்ரா. அவரது ஆங்கில உச்சரிப்பும் அபாரம். தொடரின் பின்பாதியில் அதகளம் புரிகிறார் ரெஜினா.

நாகரிகத்தின் உச்சத்திலிருக்கிற பெண்ணாக நிவேதிதா சதீஷ். மனதில் பயம் தொற்றினாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கும் பாத்திரத்தில் நிவேதிதா. நவ நாகரிகப் பெண்ணாக வரும் அவரது நடிப்பும் துடிப்பும் தொடரை பிடிப்பு மிக்கதாக மாற்றுகிறது.

பாசத்தைப் பொழிவதில், சண்டையிட்டுக்கொள்வதில் உண்மையிலேயே அக்காவும், தங்கையுமோ என்று என்ன வைக்கிறார்கள் ரெஜினாவும் நிவேதிதாவும்.

இவர்களை தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் நடிகர்களின் பங்களிப்பும் சொல்லிக்கொள்ளும்படி நிறைவாகவே இருக்கிறது.

அமானுஷ்ய கதை என்பதால் இருட்டுக் காட்சிகள் அதிகம்; அதுவும் ஒரே வீட்டிலேயே சுற்றிச்சுழல்கிற கதைக்களத்தில் இருக்கிறது கேப்பில் கேமராவை எப்படி சுழற்றினால் சலிப்பு தட்டாது என உணர்ந்து உழைத்திருக்கிற ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்.

இதுபோன்ற வெப் சீரிஸ் களுக்கு அளவான பின்னணி இசை போதுமானது என்ற அளவில் இசை அமைப்பாளரும் அடக்கி வாசித்திருக்கிறார்.

மெதுவே நகரும் ஆரம்பக் காட்சிகள் தவிர்த்து கமர்ஷியலுக்காக காட்சிகளை நிரப்பாமல் வித்தியாசமாக திரைக்கதை அமைத்திருப்பது நல்ல முயற்சி!

ஆனால் முதல் பாதிக்குப்பின்னர் கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருப்பதை சொல்லியே ஆகா’வேண்டும். மொத்தத்தில் ஒருமுறை இந்த அன்யாஸ் டுடோரியலுக்குள் விசிட் அடிக்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.