கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’ அதாவது பாட்டி.இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படம் பாசக்கதையாக இருக்கும் என்று பார்த்தால் பயப்படும் பேய்க் கதையாக இருக்கிறது.
பல கிலோமீட்டர்களுக்கு வேரு எந்த வீடும் இல்லாத அடர்ந்த காட்டுக்கு நடுவே மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீடு.
அந்த வீட்டில் படத்தில் வழக்கறிஞராக இருக்கும் விமலாராமனும் அவருடைய இரண்டாம் வகுப்பு படிக்கிற பெண் ஆகிய இருவர் மட்டும் இருக்கிறார்கள். வேலைக்கு ஒரு பெண் கூட இருக்கிறார். அவரும் மாலையில் வீட்டுக்குப் போய்விடுவார்.
அந்த இரண்டாம் வகுப்புப் பெண்ணுக்கு வீட்டிலும் பாடம் நடத்த ஓர் ஆசிரியை வேண்டுமென நினைக்கிறார் விமலாராமன்.
ஆசிரியையாக வருகிறார் சோனியா அகர்வால். அவர் வந்தபின்பு பல சிக்கல்கள். அவை என்னென்ன? அவற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை பயமும் பதட்டமுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சோனியா அகர்வால் விதவிதமாக உடையணிந்து அழகாக வலம்வருகிறார். அந்த வீட்டில் இறந்துபோன விமலாராமனின் அம்மாவின் ஆவி இருக்கிறது என்று தெரிந்ததும் பயப்படுகிறார். எதிர்பாராத சோதனை வரும் நேரத்தில் அதிரடி காட்டுகிறார்.
வழக்கறிஞர் வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார் விமலாராமன். எதிராளிகளிடம் அவர் காட்டும் துணிவு எல்லோருக்குமான எடுத்துக்காட்டு.
இரண்டாம் வகுப்பு படிக்கும்,பிடிவாத குணம் கொண்ட பெண் நிக்கி வேடத்தில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பார்த்திபன் மகளை நினைவூட்டுகிறார். வெகு சிறப்பான நடிப்பு.
பாட்டியாக வரும் சர்மிளா இதுவரை காணாத ஒன்றுக்கும் உதவாத பேயாக நடித்திருக்கிறார். வேடத்துக்கான ஒப்பனை பொருந்தவில்லை. பாட்டி ஏன் இளமை ததும்ப வருகிறார் என்பதற்கான விளக்கம் படத்தில் இல்லை.
ஒரேவீட்டுக்குள் மொத்தப்படமும் நடக்கிறது. ஆனால் சலிப்பு ஏற்படுத்தாத காட்சியமைப்புகளைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி. பறவைப்பார்வையில் அந்த வீட்டைக் காட்டுவது அழகு.
இசையமைத்திருக்கும் சங்கர் ஷர்மா, கதைக்கேற்ப இசைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சிஜின்லால் எஸ்.எஸ். ஒரேவீட்டுக்குள் நடப்பதுபோல் மொத்தத் திரைக்கதையையும் எழுதியிருப்பது துணிவு. அதைப் போரடிக்காமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். பேய்க்கதைகளில் இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. யாருமே எதிர்பார்க்காத கிளைமேக்ஸ். ஒரு ஆவி வீட்டுக்குள் இருக்க பதட்டமான சூழ்நிலையில் அந்த ஆவி உள்ளே வந்து வில்லன் நிலை துவம்சம் செய்யும் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆவிக்கும் சட்ட திட்டங்கள் வைத்து அதனால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்ற வரையறைக்குள் வைத்து அதன் கைகளை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர்.
விமலா ராமனின் கணவர் மற்றும் சோனியா அகர்வாலின் கணவர் கேரக்டர்கள் பற்றி படம் முழுக்க ஒன்றும் சொல்லாதது ஏன்..? குற்ற வழக்கில் ஆஜராகும் வக்கீலான விமலா ராமன் பெண்கள் மட்டுமே தங்கி இருக்கும் அப்படி ஒரு தன்னந்தனி வீட்டில் எதற்காக வசிக்க வேண்டும்..? அந்த வீட்டில் லோக்கல் திருடர்கள் புகுந்தால் கூட அவர்களால் எதிர்க்க முடியாது என்பதுதான் உண்மை.
இதைப் போன்ற சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவில் தொழில்நுட்ப குறைவில்லாமல் அழகான பாத்திரங்களுடன் ஒரு திரில்லர் படத்தை பார்த்த திருப்தி ஏற்படுவது நிஜம்
இறுதிக்காட்சி எதிர்பாராதது என்பது படத்தின் பலம். கிராண்ட்மா ஓகேதான்மா.