இந்த காதலையும் ஜாதியையும் வைத்து பஞ்சாயத்து பண்ணுகிற கதைகள் காலகாலமாய் கைகோர்த்து வந்துகொண்டேயிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ‘நதி’.
ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும், அரசியல்வாதி குடும்பத்துப் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் கொஞ்சம் பழைய கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி.
நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் வேண்டும்.
நாயகி ஆனந்தி படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார். காதலில் விழும் காட்சிகள், கடைசியில் காட்டும் உறுதி ஆகியன அவருக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த்துக்கு நல்லவேடம். அவரும் அதைப் பொறுப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியின் அப்பா இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் உயர்சாதித் திமிர் மற்றும் அரசியல்வாதிகளின் அழிச்சாட்டியத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் நரித்தனமான வேலைகள் செய்யும் அரசியல்வாதி கேரக்டரில் கரு பழனியப்பன் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்கள் தத்ரூபமாக இருக்கின்றன. திபுநினன்தாமஸ் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.
ஆனாலும் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்