மதவெறியர்களுக்கு எதிரான மிகத் துணிச்சலாக மலையாளத்தில் வெளியான ‘டிரான்ஸ்’படத்தின் தமிழ் வடிவமே இந்த நிலை மறந்தவன்’.

வெள்ளையர்கள் போய் எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் இங்கு குறைந்தபாடில்லை. அவர்களின் மக்கள் சேவைகள் தொடர்கின்றன. மக்கள் சேவை என்கிற ஏகப்பட்ட அக்கப்போர்களும் நடந்தேறுகின்றன.

நல்லது இருக்குமிடத்தில் அல்லதும் இணைந்தே இருப்பதுதானே பொதுவிதி. அதுபோல் அம்மதத்திலும் குணக்கேடர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஃப்ராடுகளை தோலுரித்து அம்பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் நிலைமறந்தவன்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஃபகத்பாசில், தன் அசுர நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார். போலி பாதிரியாராக அப்படியே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகியாக அவர் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார், சில காட்சிகளில் வந்தாலும் குறும்புத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை ஈர்க்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம்மேனன், செம்பன் வினோத் ஆகியோர் பெர்ஃபெக்ட் செலக்‌ஷன்.

சில காட்சிகளில் வரும் விநாயகன், மதங்களை நம்பி மாயும் மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி அதிர வைக்கிறார்.

அமல்நீரத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தின் கதையுடன் உலகம் முழுக்கப் பயணித்திருக்கிறது ஒளிப்பதிவுக்கருவி. நிஜமாக நடக்கும் மதக்கூட்டங்களைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம் ஆகியோரின் இசையும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம், மதங்கள் மீது அளவு கடந்து நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை உணர்த்தியிருக்கிறார்.

இயக்குநர் அன்வர் ரஷீத், கிறித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த இஸ்லாமியரான ஃபகத்பாசிலைப் பயன்படுத்தி கதையில் அவரை ஓர் இந்துமதத்தினராகக் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் சர்ச்சையாக்காமல் விட்டவர்கள் நிச்சயமாகப் புண்ணியவான்கள்தான்.

மத நம்பிக்கையற்றவர்கள் பார்த்து கொண்டாடவேண்டிய படம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.