சில காலமாகவே எதையாவது வித்தியாசமாகச் செய்தே தீருவேன் என்று அடம்பிடித்து படம் எடுக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அடுத்த அருவாமனைதான் இந்த ‘இரவின் விழல்’.
துரதிர்ஷடம் துரத்தும் ஒருவனின் கதை…பெண்களால் வஞ்சிக்கப்படும் ஒருவனின் கதை. கந்து வட்டிப்பார்ட்டிகளால் கதை கந்தலானவனின் கதை. பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகள் மட்டுமன்றி பார்த்திபன் போன்ற அப்பாவி ஆண்குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரே ஷாட்டில் ஏழெட்டு நாட்டுகளை எடுத்திருக்கும் படம்.
படத்தில் வரும் பார்த்திபனின் சிறுவயதுக் காட்சிகள் பதறவைக்கின்றன என்றால் அவர் வளர்ந்த பிறகு வரும் காட்சிகள் நம்மைக் குதறி வைக்கின்றன.
அவர் வாழ்க்கையில் வருகிற பிரியங்காரூத், பிரிகிடாசாகா, வரலட்சுமிசரத்குமார், மூன்று பெண்கள் அவருடைய நிலையை மாற்றுகிறார்கள். ஆனால் மனம் அப்படியேதான் இருக்கிறது. மூவருமே பார்த்திபனுக்கு இணையாக நடித்திருக்கிறார்கள்.
சாமியாராக நடித்திருக்கும் ரோபோசங்கர் உள்ளிட்ட பிற நடிகர்களும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் படத்தின் கதை வெளிப்படுத்தும் உணர்வுகளை இசையால் மெருகேற்றியிருக்கிறார். அவரே தேடி இசையமைத்திருக்கும் சித்தர் பாடலான
பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
பாடல் மட்டுமே படத்தின் சிறு ஆறுதல்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனுக்கு ஏராளமான வேலைகள். அவற்றைச் சிரத்தையுடன் செய்து படத்தைப் போரடிக்காமல் நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார். விஜய்முருகனின் கலைஇயக்கம் சிறப்பு. எந்தக்குறையும் தெரியாமல் எல்லா இடங்களையும் நகலெடுத்திருக்கிறார்.
முதன்முறையாக தாளிலேயே அதாவது எழுதும்போதே படத்தொகுப்பு செய்திருக்கிறார் பார்த்திபன். இதை எல்லா இயக்குநர்களும் கடைபிடித்தால் தோல்விப்படமே இருக்காது என்பது உறுதி. ஆனால் தாளில் எழுதுகிற சமாச்சாரம் ‘இரவின் நிழல்’ போல் இல்லாமல் கொஞ்சம் தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது நல்லது.
படங்களில் இடம்பெறும் சில கெட்ட வார்த்தைகள், இளம் வயதில் பார்த்திபன் இன்னொரு ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, பிரிகிடாவை முக்கால் நிர்வாணமாகக் காட்டியது, மற்றும் இப்படி ஒரு படம் எடுத்தது போன்ற காரணங்களுக்காக பார்த்திபனை அட்லீஸ்ட் ஒரு வாரம் புழல் சிறையில் அடைத்தாலும் தப்பில்லை என்று சொல்கிற அளவுக்கு அவ்வளவு தப்புத்தப்பான சமாச்சாரங்கள். காரணம் வித்தியாசமாக எதையாவது செய்தே தீருவது என்கிற அதிபயங்கர விபரீத ஆசை.
இந்த வித்தியாச முயற்சி வியாதியிலிருந்து வெளியேறி ஒரு நார்மல் மனிதனாக அடுத்த படம் இயக்கும்படி பாதம் பணிந்து கேட்கிறோம்.