நிஜ சம்பவங்களை விட சில சமயம் கற்பனைக் கதைகள் செம விறுவிறுப்பைக் கொண்டவை. அந்த வகையறா மலையாளப்படம்தான் இந்த ‘மகா வீர்யர்’.

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, இயக்குநர் லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக், மேஜர் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மக்களாட்சியைக் காக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான நீதிமன்றக் கூண்டில், மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்த மன்னர் அமைச்சர் ஆகியோரை ஏற்றி விசாரணை நடத்தும் ஒரு விநோதமான பரிட்சார்த்த முயற்சிதான் இப்படம்.

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் இக்காட்சிகள் திரையில் வரும்போது பார்க்கவே பரவசமாக இருக்கின்றன.

படம் முழுக்க நீதிமன்ற அறைக்குள்ளேயே நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் வயிற்றைப் புண்ணாக்குகின்றன. அதிலும் மனைவிக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்கும் 24 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களாகக் கொடுப்பதும் அதன்பின் வரும் காட்சிகளும் சிரிப்போ சிரிப்பு.

நிவின்பாலி, சாமியாராக வருகிறார். சாந்தமான முகத்துடன் அவர் செய்யும் சாகசங்கள் அருமை. அவர் மீதான வழக்கில் அவர் வைக்கும் வாதங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. இரண்டாம்பாதியில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தாலும் கதையின் திருப்புமுனைக் காட்சி அவரால் நடக்கிறது.

பரபரப்பாய்ப் படங்கள் செய்துகொண்டிருக்கும் நாயகன் ஒருவர் இப்படி ஒரு வேடத்தை ஒப்புக்கொண்டு நடித்திருப்பது வியப்பு. இத்தனைக்கும் இந்தப்படத்தைத் தயாரித்திருப்பதும் அவரே என்பது கூடுதல் வியப்பு.

மன்னராக நடித்திருக்கும் லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள்.

அபலைப்பெண்ணாக வந்து அனைவரையும் கவர்கிறார் ஷான்விஸ்ரீவத்சவா. அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும்போதும் அனுதாபத்தைப் பெறுகிறார்.பெண்களின் உள்ளத்தையும் உறுதியையும் அழகாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான எம்.முகுந்தனின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நாட்டில் நடக்கும் பல்வேறு அட்டூழியங்களைத் தோலுரிப்பது தெரியாமலேயே தோலுரிக்கிறது.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இக்கதையைத் தேர்ந்தெடுத்துப் படமாக்கிய இயக்குநர் அப்ரித் ஷைனி பாராட்டுக்குரியவர்.

நீதித்துறையின் இன்னொரு விசித்திர முகத்தை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இந்த மகா வீர்யர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.