வழக்கமாக காலையில் பத்திரிகையாளர் காட்சி போடுவதென்றால் சுமார் 10 மணிக்கு துவங்குவார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ ‘தி லெஜண்ட்’ படத்தை ஏழரை மணிக்கே போடப்போவதாக அறிவிப்பு. புத்தியுள்ளவன் அந்த ‘ஏழரையை’ ஒரு குறியீடு என்று அப்போதே புரிந்துகொண்டு சுதாரித்திருக்கவேண்டும். ஆனால் விதி யாரைவிட்டது?
அண்ணாச்சி சரவணார் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி மீதி என்று கலந்த கலவையாக திரையுலகில் வலம் வர ஆசைப்படுகிறார் போல. அங்ஙணமே ஒரு பாடாவதி கதையை தயார் செய்து நம்மை வாட்டி வதைத்து துவம்சம் செய்கிறார்கள் இரட்டையர்களான ஜேடி-ஜெர்ரி.
படம் பார்த்து ‘அனுபவித்தவன்’என்கிற வகையில் கதை என்ன என்று எழுதி உங்களை இம்சிக்கக்கூடாதுதான். ஆனால் யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அல்ப புத்தி உள்ளவர்கள் தானே நாம்?
’இந்தியாவில் இப்படி ஒரு லெஜண்டா?’ என்று உலகமே மூக்கில் கட்டை விரலை வைத்து வியக்கக்கூடிய ஒரு விஞ்ஞானி நம்ம அண்ணாச்சி. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நாட்டுப்பற்றால் நாறி நிற்பவர்…ஸாரி ஊறி நிற்பவர். அப்படியாகப்பட்டவரை பல நாடுகள் கபளீகரம் பண்ணத்துடிக்க அவரோ சொந்த கிராமமான பூஞ்சோலைக்குத்தான் என் சேவை என்று வந்து நிற்கிறார். அங்கு அவரருக்கு பிரபுதான் அண்ணன், விஜயகுமார்தான் அப்பா என்று காட்டுகிறபோது இன்னும் கெதக் என்கிறது.
ஊரில் அவரது அங்காளி பங்காளிகளில் சர்க்கரை வியாதிகளால் தவிக்க அவர்கள் மீது அக்கறை கொண்ட அண்ணாச்சி உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்படி ஒரு மருத்துவ ஆராய்ச்சியைத் துவங்குகிறார். அதைக் கேட்டு உலகத்திலுள்ள அத்தனை மருத்துவ மாஃபியாக்களும் கொதித்தெழுந்து அவரைக்கொல்லத்துடிக்கிறார்கள். அவர்களை அண்ணாச்சி எப்படி தள்ளுபடி விலையில் போட்டுத்தள்ளுகிறார்? இதுதான் கதை. நடுநடுவே அண்ணாச்சிக்கு உள்ளூரில் வாத்துமேய்க்கிற டீச்சருடன் லவ்ஸும் உண்டு. விவேக்குடன் சேர்ந்து காமெடி பண்ணுகிறார். டூயட் பாடுகிறார். குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். ஏழைகளின் கஷ்டத்தைப்பார்த்து கண்ணீர் விடுகிறார்.
இதே கதையை ரசிகர்களை கத்தியின்றி ரத்தமின்றி ஊமைக்குத்து குத்திய கதை என்று ஒரே வரியில் சுருக்கமாகக் கூட சொல்லியிருக்கலாம்.
படத்தின் பட்ஜெட் 63 கோடி என்கிறார்கள். அதனால் காட்சிகளில் பிரம்மாண்டத்துக்கு குறைச்சலில்லை. ஆனால்…ஆனால்…ஆனால் என்று நூத்திச்சொச்ச ஆனால்கள் கியூகட்டி நிற்கின்றன.
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகைகளுக்குப் போட வேண்டிய மேக் அப்பை அண்ணாச்சி ஒருவருக்கே போட்டு, அதாவது முகத்தில் பெயிண்ட் அடித்து நிறுத்தியிருக்கிறார்கள். நடிப்பா அப்படியென்றால் என்ன என்று கேட்கக்கூடிய மண்ணாங்கட்டி நடிப்பு. ஜவுளிக்கடைக்காரர் என்பதற்காக கடையிலுள்ள அத்தனை உடைகளையும் உடுத்திக்கொண்டு ஆடுவது அராஜகமான செயல்.
படத்தில் பிரபு,விஜயகுமார் துவங்கி முகம் தெரிந்த நட்சத்திரங்கள் ஏழெட்டு டஜன்களில் இருக்கிறார்கள். அண்ணாசியிடம் தாராளமாக, ஏராளமாக வாங்கிய சம்பளம் அவர்கள் அத்தனை பேரின் நடிப்பிலும் தாண்டவமாடுகிறது.
மனக்கஷ்டத்தில் இருப்பவர்கள், பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள், வாழ்க்கையை சோர்வாக உணர்பவர்கள், சுமாராக இருப்பவர்கள், நன்றாக இருப்பவர்கள்,குண்டாக இருப்பவர்கள், குள்ளமாக இருப்பவர்கள், பெண்கள்,பெரியவர்கள்,சிறியவர்கள், இளைஞர்கள், காதலர்கள், கள்ளக்காதலர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள் என்று அத்தனை ஜீவராசிகளும் இருக்கிற இடத்தில் அப்படியே பத்திரமாக இருந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் சொல்லமுடியும். ஆமென்.