தமிழ்சினிமாவில் இது அருள்நிதி சீஸன் போலிருக்கிறது. இரண்டே மாதங்களில் மூன்று படங்கள். ‘டி பிளாக்’,’தேஜாவு’படங்களைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது வந்திருக்கும் படம் டைரி. மூன்று படங்களுக்குமே புதுமுக இயக்குநர்களுடையவை.

’டைரி’ படத்தின் கதையை அந்தக் கதாபாத்திரங்கள் பயணிக்கிற பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதிவிடலாம் என்கிற அளவுக்கு அவ்வளவு சின்னது. பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைப் பேய்கள் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி.

காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான பார்வை நிதான நடை ஆகியனவற்றைக் காதல் நேரத்திலும் கடைபிடிக்கிறார். வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்து அதில் தானும் ஒரு பாத்திரம் என்று அறியும்போதும், கடைசிக்காட்சியில் அம்மா பாசத்தில் தணிகை அழும்நேரத்திலும் கண்களாலேயே அவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்திப் பாராட்டுப்பெறுகிறார் அருள்நிதி.

ஒரு குடும்பத்தில் ஒரு நடிகரைத்தான் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் தம்பி அருள்நிதிக்கு வழிவிட்டு அண்ணன் உதயநிதி அரசியல் பக்கம் ஒதுங்கினால் முன்னவர் சிறப்பான நடிகராய் வலம் வர வாய்ப்புகள் அதிகம்.

காவல்துறை உதவிஆய்வாளராக வரும் நாயகி பவித்ரா மாரிமுத்து நல்வரவு. எடுப்பும் மிடுக்குமாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.

காவலராக நடித்திருக்கும் சாம்ஸ், பேருந்துப்பயணியாக வருகிற ஷாரா ஆகிய இருவருக்கும் மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு. அதை உணர்ந்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் பொறுக்க முடியவில்லை.

ஊட்டி மலைப்பாதையில் நடக்கும் ஒரு பேருந்துப் பயணமே படத்தின் மையம். அப்பேருந்தில் வரும் சதீஷ்கண்ணன், ஜெயலட்சுமி தம்பதியர் அவர்களின் குழந்தைகளாக வரும் சிறுவன் ஜெய்ஸ்வந்த் சிறுமி பிரஜுனா சாரா, இளம்பெண் ஹரிணி, நக்கலைட்ஸ் தனம்,ரஞ்சனா நாச்சியார், கொலைகாரர்களாக வரும் சுரேந்தர் தாகூர், சூரஜ்பாப்ஸ், அகோன்,தணிகை,பவித்ரன், அப்பேருந்தின் ஓட்டுந்ராக வரும் புகழேந்தி நடத்துநராக வரும் மாதேஸ்வரன் காதல் இணையராக வரும் ருத்ரா, சோனியாசுரேஷ் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டும் வரும் கிஷோர், செந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் கவனம் ஈர்க்கத்தவறவில்லை.

படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவு. அதிகமான இரவுக்காட்சிகள், பேருந்துக்குள் சண்டைக்காட்சிகள் ஆகியனவற்றை அழகாகப் படம்பிடித்துப் பலம் சேர்த்திருக்கிறார் அரவிந்த் சிங்.

ரான் ஈதன் யோகனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் படத்தின் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.

ஒரு சிக்கலான கதையை புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் புது இயக்குநர் இன்னாசி பாண்டியன்.அதன் மையப்புள்ளி முற்றிலும் மூடநம்பிக்கை சார்ந்து இருப்பதும் பேய்களை வைத்து பயமுறுத்துவது என்கிற பழைய டெக்னிக்கும் கொஞ்சம் சொதப்பல்.

மற்றபடி, டைரி விறுவிறுப்பான திகில் கலந்த ஒருமுறை நிச்சயம் பார்க்கவேண்டிய படம்தான்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.