சமீபகாலமாக வில்லன் வேடத்தில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகக் களம் இறங்கியிருக்கும் படம். சக மனிதர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அவர்களைக் காப்பாற்றவேண்டியது நமது கடமை என்கிற எம்.ஜி.ஆர். ஃபார்முலா கதை.
கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷிகா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வேலை இழப்பு. அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரர் வேலைக்குச் செல்கிறார்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்குத் தெரியவருகிறது. அதேநேரம், ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிறார். நடக்கவியலாது, பேசவியலாது எனும் நிலை. அந்நிலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லும் படமே கடமையைச் செய்.
எஸ்.ஜே.சூர்யா எப்படி இந்தப் படத்தை ஒப்புக்கொண்டார் என்பதற்கு விடை படத்தில் இருக்கிறது.குடும்பத்தை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்று துடிக்கும் நடுத்தர வர்க்க இளைஞனாகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளியாகவும் நடிப்பில் கவருகிறார். இடைவேளைக் காட்சியில் அவர் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காட்சி சிறப்பு.
கவர்ச்சிகாட்டி ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த யாஷிகா ஆனந்த்துக்குக் கதாநாயகி வேடம். அதற்கு நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார். கட்டிப்போட்டிருக்கும் நிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் இயக்கும் காட்சியே அதற்கு சாட்சி.
நான்கடவுள் ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன், சேசு உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ராஜசிம்மன் அடியாள் வேடத்தோடு தலைநிற்காமல் ஆட்டிக்கொண்டிருப்பது நன்று. சார்லஸ் வினோத்தின் வில்லத்தனமும் உண்டு.
வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு கதைக்குப் பலம் சேர்க்கிறது. அருண்ராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.எஸ்.ஜே.சூர்யாவின் மனத்தவிப்பை பின்னணி இசை வெளிப்படுத்துகிறது.
படத்தொகுப்பு செய்திருக்கும் ஸ்ரீகாந்த், முதல்பாதியில் கொஞ்ச நேரம் இரண்டாம்பாதியில் கொஞ்சநேரம் வெட்டியிருக்கலாம். பல காட்சிகள் நம்மை சோதிக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் வெங்கட்ராகவன்,கட்டுமானத் துறையில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கதையை எழுதி ஒரு வித்தியாசமான வேடத்தை உருவாக்கி அதற்குப் பொருத்தமாக எஸ்.ஜே.சூர்யாவைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதிவெற்றி பெறுகிறார். மீதி வெற்றியை பார்வையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.