பேய்கள் என்பன பொய்கள் என்று தெரிந்திருப்பதால் அவற்றை வைத்து இஷ்டத்துக்கு கதைகள் பண்ணி மக்களை கஷ்டத்துக்கு ஆளாக்கும் வேலைகளை நீண்டகாலமாகவே செய்து வருகிறார்கள் நமது தமிழ் சினிமா இயக்குநர்கள். இதோ இன்னொரு பேய்த்தனமான படம்.
வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள்.
அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்த ஊர்ப் பேய்களோ ‘நீங்க அப்பிடியெல்லாம் தப்பிச்சுப் போக முடியாது. வாங்க செத்துச் செத்து விளையாடலாம்’என்று மறுபடியும் மறுபடியும் ஊருக்குள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். இறுதியில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் ‘காட்டேரி’.
இயல்பிலேயே அசட்டுத்தனமா அல்லது கதைக்காக அப்படி நடிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாமல் நம்மை கன்ஃபியூஸ் பண்ணுகிறார் நாயகன் வைபவ்.
கவர்ச்சி பொம்மைகளான சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகிய இருவரும் பேய்களைப் பார்த்து ஆளுக்குக் கொஞ்சநேரம் பயப்பட்டு நம்மையும் பயமுறுத்த முயல்கிறார்கள்.
கருணாகரன், ரவிமரியா ஆகியோரை வைத்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அவர்களும் அதற்காகப் பாடுபட்டு நம்மையும் பாடாய்ப்படுத்துகிறார்கள்
மாத்தம்மா எனும் பாத்திரத்தில் வருகிற வரலட்சுமிசரத்குமார், நான் அழகா இருக்கேனா? எனக் கேட்கும்போதே பயப்பட வைக்கிறார். அவர் தொடர்பான அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திகில் கிளப்புகின்றன.
காவல்துறை ஆய்வாளராக வருகிற ஜான்விஜய், தன் வழக்கமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புகளைத் தவறாமல் செய்திருக்கிறார். பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும் அங்கு ஆபத்துகளும் ஒருங்கே படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
பேய்ப்படங்களுக்குப் பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்தப் பொறுப்பை பிசாசுத்தனமான வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.
பேய்க்கதைப் படங்களில் ப்ளாஷ்பேக் கதையில் மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள்.அவர்கள் ஏதோவொரு காரணத்தினால் இறந்துபோய் நடப்புக் கதையில் பேயாக வருவார்கள்.
இந்தப்படத்தில், சொல்லப்படுகிற முன்கதையில் கிணறுவெட்டப்போய் அதில் காட்டேரி வந்து மூட்டை மூட்டையாகத் தங்கக்கட்டிகள் மற்றும் நகைகள் கொடுக்கிறது என்று எழுதியிருக்கிறார் இயக்குநர் டீகே. பேய்க்கதைகளில் லாஜிக் பார்க்கவேண்டியதில்லைதான். ஆனால் அதற்காக கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ரீல் விடுவதை என்ன சொல்ல?
பேய்க்கதைப் பிரியர்கள் மட்டும் போய் இதைப் பார்க்கலாம்.