திரைப்படங்களுக்கு இணையாக இணையத்தொடர்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற சூழலில், காதல்,கள்ளக்காதல் கல்யாணம், கற்பு ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்மத்தியதர வர்க்க இளைஞர்கள் இளைஞிகள் எப்படிப் பார்க்கிறார்கள்: என்பதை வெளிப்படுத்தி அதிர வைத்திருக்கிறது ஆஹா’ ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியிருக்கும் ’எமோஜி’ இணையத் தொடர்.
முதல்முறையாக, ஒருமுழுநீளத் தொடரின் முழுமையான நாயகனாகியிருக்கிறார் மகத்ராகவேந்திரா.எதிலும் ஓர் அலட்சியத்துடன் செயல்படக்கூடிய உயர்மத்தியதர வர்க்க இளைஞன் வேடத்தை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார் மகத். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார்.
பெண்களுடனான நட்பு, காதல், பிரிவு ஆகிய எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய வேடம். நிதானமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.வசன உச்சரிப்புகளில் அவரது குருநாதர் சிம்புவை அப்படியே அட்டக்காப்பி அடித்திருக்கிறார். அய்யா இண்டஸ்ட்ரிக்கு ஒரு சிம்பு போதுமே.
இரண்டு நாயகிகளில் முதன்மையாக இருக்கும் தேவிகாசதீஷ் அருமை. அவருடைய நடனமும் வில்லாய் வளையும் உடலும் நடிப்புக்கு மெருகு சேர்த்திருக்கிறது. அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஆண் நண்பனை மறைக்கும் காட்சி, மகத்தின் மீது காதல் கொள்ளும் காட்சி ஆகிய இளமை துள்ளும் காட்சிகளில் அசத்தும் அவர் அதே அளவுக்குப் , பிரிந்து செல்லும் கடைசிக்காட்சியில் உருக வைத்திருக்கிறார்.
இன்னொரு நாயகி மானசா செளத்ரி, என்னால் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது ஆனா காதலிக்கலாம் ஜாலியா இருக்கலாம் என அசால்ட்டாகச் சொல்லி அதுபோலவே செய்தும் காட்டுகிறார். இன்றைய இளம்பெண்கள் எவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு அவருடைய பாத்திரம் எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆனாலும் மகத்தின் திருமணநேரத்தில் அவருக்குள் எட்டிப்பார்க்கும் கண்ணீர்த்துளி மரபின் தொடர்ச்சி.
மகத்தின் நண்பராக வரும் வி.ஜே.ஆஷிக் அவ்வப்போது ராப் பாடல் பாடி கவனம் ஈர்க்கிறார். ஆனால் அவருக்கு நடிப்புதான் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோரின் வாழ்க்கையும் இறுதியில் ஆடுகளம் நரேன் பேசும் வசனங்களும் மிகவும் முக்கியமானவை.
ஜலந்தவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுகமாக இருக்கின்றன. இரண்டு நாயகிகளையும் அங்கம் அங்கமாகப் படம்பிடித்து இளைஞர்களுக்கு அள்ளி வழங்குகிறார்.
சனத்பரத்வாஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பாடல்வரிகள் தற்போதைய இளம்தலைமுறைக்குத் தேவையானவை.பின்னணி இசை தொடரின் வேகத்துக்கு உதவியிருக்கிறது.
வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணங்கள் செய்து கொண்டிருந்த இளைஞர்களும் யுவதிகளும் இப்போது வீட்டுக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்குகிறார்கள் என்பது உட்பட பல அதிர்ச்சிகளை முந்தைய தலைமுறைக்குத் தரும் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சென் எஸ்.ரங்கசாமி.
நாம் நமது என்று சிந்திக்காமல் நான் எனது என்று சிந்திக்கும் இந்தத் தலைமுறையை அவர்கள் போக்கிலேயே போய் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
படமாக வந்திருந்தால் ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் பல காட்சிகள் கத்தரிக்கும் பலியாகியிருக்கும். இப்போது வயது வந்தோருக்கான தொடர் எனும் அறிவிப்போடு ஒளிபரப்பாகும் இத்தொடர் இளைஞர்களை ஈர்க்கும் காதல் மற்றும் காமக்காட்சிகளுடன் சிந்திக்கவும் வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது சற்றே ஆறுதலான சமாச்சாரம். ‘எமோஜி’பாத்து எஞ்சாய் பண்ணலாம்ஜி.