இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் (Lotus Pictures) உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கொலை.
பாலாஜி கே.குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகாசிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன், இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன், படத்தொகுப்பு செல்வா ஆர்.கே, கலை இயக்கம் கே.ஆறுச்சாமி, விஎஃப்எக்ஸ் மேற்பார்வை ரமேஷ் ஆச்சார்யா, ஒலி வடிவமைப்பு விஜய் ரத்தினம், மறுபதிவு கலவை ஏ.எம்.ரஹ்மத்துல்லா, ஆடை வடிவமைப்பு ஷிமோனா ஸ்டாலின், சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ, நடன இயக்கம் சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா ஆகியோர்.
கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப்.பி, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர், ஆர்விஎஸ்.அசோக் குமார் ஆகிய அறுவர் தயாரிப்பாளர்கள்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 12 அன்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..
இந்தப் படம் உருவாக முழுக் காரணம் விஜய் ஆண்டனி சார் தான். இயக்குநர் பாலாஜி மிகவும் திறமையான நபர், அவருக்குப் பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணிபுரிந்தது பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் இந்தத் திரைப்படத்தை நேர்த்தியாகச் செதுக்கியுள்ளார். படத்தின் முடிவு எப்படி வரும் என்பதை இரகசியமாய் வைத்து, சிறப்பாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பாராட்டப்படும். இந்தப் படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு டிரிபுயூட்டாக இருக்கும். படக்குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.
ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நான் பணிபுரிந்தது எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தை கொரோனா காலத்தில் நம்பிக்கை வைத்துத் துவங்கினார்கள். இந்தப் படத்தின் கதை புது மாதிரியாக இருக்கும். முதல்முறை பார்க்கும் போது ஒருவிதமாகவும், இரண்டாவது முறை பார்க்கும் போது வேறு அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடன் பயணித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் உதவியாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது..,
இந்த ஸ்கிரிப்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.இயக்குநர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்குத் திரைப்படங்கள் தான் எல்லாமே. இந்தப் படத்தின் இசையில் ஒரு புதுவித ஒலியை இசையை கொடுக்க முயற்சித்து இருக்கிறோம். இந்தப் படத்தின் ரீ ரெக்கார்டிங்க் 6 மாத காலம் எடுத்துகொண்டது. தயாரிப்பாளரின் உதவியில்லாமல், இந்தப் படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி என்றார்.
நாயகி மீனாட்சி சௌத்ரி பேசியதாவது..,
இந்தப் படம் ஒரு பெரிய பயணம், இந்தப் படம் எனது முதல் தமிழ்ப்படம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததே எனக்குப் பெரிய மகிழ்ச்சியான விசயம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
நாயகி ரித்திகா சிங் பேசியதாவது..,
இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாகப் போய்விட்டேன். கதையின் முடிவை தெரிந்துகொள்ள நானும் விரும்பினேன். இந்தப் படத்தில் பலர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர், அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றார்.
இயக்குநர் பாலாஜி குமார் பேசியதாவது..,
இந்தத் தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். இந்தப் படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும் தான். இந்தக் கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள் மூழ்கிவிட்டார். அவருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர் ஒப்புக்கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளர் சித்தார்த்திற்கு நன்றி கூற வேண்டும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தான் இந்தப் படம் இவ்வளவு தூரம் உருவாகக் காரணம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் பலம். அவர்கள் இந்தப் படம் நன்றாய் வருவதற்கு கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் உழைத்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்தப் படம் சிறப்பாக வந்திருக்காது.அனைவரும் இரசிக்கும்படியான இரண்டாவது தடவை பார்க்கும் படியான படைப்பாக இது இருக்கும் என்றார்.
இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது..,
இந்தப் படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்கள். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது….
இயக்குநர் பாலாஜி, சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞர். அவர் சினிமாவை படிப்பாகக் கற்றுக்கொண்டவர்.கொலை மனிதர்களுடன் எப்போதும் நெருக்கமான ஒன்று. இந்தப் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை இரசிக்கும் படி இருக்கிறது. படக்குழுவிற்கு எனது நன்றிகள் என்றார்.
தயாரிப்பாளர் கமல் போரா பேசியதாவது..
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் ஒரு வருட காலம் நடந்தது. நானும் இயக்குநரும் பெரிய விவாதத்திற்கு பிறகு, நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் நன்றி என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
இந்தப் படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விசயம். இந்தப் படம் இயக்குநர் பாலாஜியின் கனவு. நான் உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்தப் படம் உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்தப் படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக, இந்தப் படத்தின் இசையமைப்பாளர் உடைய பணி எனக்கு உலகத்தரமாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளர் இந்தப் படத்தின் கதையைப் புரிந்து, அதைத் தொகுத்துள்ளார். இந்தப் படத்தில் சிஜி கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியைச் செய்துள்ளார். அது பேசப்படும். ரித்திகா, மீனாட்சியுடன் பணிபுரிந்தது பெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.