வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத்தே இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 13 அன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார் 

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் விஜே.கோபிநாத் பேசும்போது,

ஜீவி முதல் பாகம் ரிலீசான அன்றே அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மறுநாளே எனக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலை வைத்துப் படம் இயக்குவதாக முடிவாகி கொரோனா காலகட்டம் காரணமாக அது தள்ளிப்போனது. அந்தச்சமயத்தில் தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்தி கொடுத்த உற்சாகம் காரணமாக உருவானதுதான் ஜீவி-2 படத்தின் கதை.

முதல் பாகத்திற்குக் கதை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த கதாசிரியர் பாபு தமிழ் தான் இயக்கும் படத்தின் வேலைகளில் பிசியாக இருந்ததால் இந்தக் கதையை நானே 2 நாட்களில் உருவாக்கினேன். இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து அரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன்பின் தான் எனக்கு மனம் நிறைவடைந்தது. இன்னும் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்று கூறினார். 

இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிடும் அதன் சிஇஓ சீகா பேசும்போது,

நேரடியாகப் படங்கள் ஓடிடியில் வெளியாவதை விட தியேட்டரில் வெளியானபின் இங்கு வந்தால் தான் எங்களுக்கு அது சக்சஸ். தமிழ் மக்களை உயர்வாகக் காட்டும் படங்களை வெளியிடுவது தான் எங்களது குறிக்கோள். விரைவில் எங்களது தளத்தில் ஒரு முக்கியமான பிரபலத்தை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றையும் துவங்க இருக்கிறோம். 

ஜீவி முதல் பாகத்திற்கு ஆஹாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அந்தவகையில் ஜீவி-2 நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவது எங்களுக்குப் பெருமை தான். 160 நாடுகளில் இந்தப் படத்தை பார்த்து இரசிக்க முடியும். சமீபத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படமும் எங்களுக்குக் கிடைத்தது ஒரு கௌரவம். இயக்குநர் சீனுராமசாமியைப் பொருத்தவரை எங்களது நிறுவனத்தின் தூதராகவே மாறிவிட்டார் எனச் சொல்லும் அளவிற்கு அவரது படத்தை புரமோட் செய்து வருகிறார். படத்தில் பங்குபெறும் அனைத்துக் கலைஞர்களும் இதுபோல தங்களது பட்ங்களை புரமோட் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் பேசும்போது,

ஜீவி-2 மாதிரியான படங்களுக்கு ஆஹா ஓடிடி தளம் சரியான பிளாட்பார்ம். இந்தப் படத்தின் இயக்குநர் விஜே கோபிநாத் ஒரு அறிவுஜீவி என்று சொல்லலாம். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் மனநிறைவாக இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது நல்ல படங்களைத் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் கெட்ட பழக்கம். இந்தப் பழக்கம் தொடர்ந்து அவரிடம் இருக்க வேண்டும். அதே போல ஆஹா ஓடிடி தளம் நாடகங்களையும் ஒளிபரப்ப முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாயகி அஸ்வினி பேசும்போது,

ஜீவி படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக அமைந்தது. நான் பணியாற்றிய படங்களிலேயே ஜீவி முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுக்கும் மிகச்சிறந்த தயாரிப்பாளர்கள் கிடைத்து விட்டனர். முதல் பாகத்தில் பாடல் காட்சி தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார்கள். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அந்தக் குறை தீர்ந்து விட்டது என்று கூறினார்.

நாயகன் வெற்றி பேசும்போது,

ஆந்திராவில் நான் செல்லுமிடங்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளம் மூலமாக தெலுங்கு மக்களைச் சென்றடைந்தது தான் காரணம். நிச்சயமாக இந்த நிறுவனத்தினர் இந்த இரண்டாம் பாகத்தையும் இன்னும் பிரமாதமாகக் கொண்டு சேர்ப்பார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு போன்ற பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்துவிட்டு, ஜீவி-2 போன்ற சிறிய படத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் கதை மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்கு என் நன்றி என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் தம்பிராமையா பேசும்போது,

பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும் ஆனால் ஜீவி-2 படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப்படம் உயரத்தைத் தொடுமா எனச் சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்குத் துயரத்தைத் தராது என்று தாராளமாகச் சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளேன்.அதனால் இனி நிறையப் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார்.

இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது,

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போல, தயாரிப்பாளர் ஆர்பி.சவுத்ரி போல முக்கியமான தயாரிப்பாளராக இருக்கிறார். அவரிடம் கதை அறிவும் நேர்மையான வணிகமும் இருக்கிறது. மாமனிதன் ரிலீஸ் சமயத்தில் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்து சிசேரியனாக மாற இருந்த அந்தப் படத்தைச் சுகப்பிரசவமாக வெளியிட உறுதுணையாக நின்றார். தியேட்டர் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிடையாது. காரணம் என்னுடைய மாமனிதன் படம் தியேட்டர்களில் வெளியாகி யாருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய சூழலில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானதன் மூலம் 160 நாடுகளில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. வெற்றியின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அவர் இருப்பார். பிரேம்ஜி பாடியுள்ள டயர்டா இருக்கு என்கிற பாடல் உற்சாகத்தை ஊட்டும் விதமாக இருக்கிறது. விமர்சகர்கள் எல்லாப் படத்துக்கும் ஒரே தராசு கொண்டு அளவிடக்கூடாது என்று பேசினார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,

முன்பெல்லாம் இயக்குநர்கள் தான் ஹீரோக்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது ஹீரோ என்று மாறிவிட்டது. ஹீரோ கைகாட்டுபவர் தான் இயக்குநர் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதேசமயம் நடிகர் வெற்றி விஜே கோபிநாத்தை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து, அவர் மீது வைத்த நம்பிக்கையைக் காட்டிவிட்டார். 

இன்று சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக் கூட ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இயக்குநர் கோபிநாத்துக்கு சுரேஷ் காமாட்சி கொடுத்த விளக்கம் எனக்கு சமாதானம் ஆகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் தியேட்டரில் வெளியாகி விட்டு பின்னர் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைப் பொருத்தவரை எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். எனது மகன் சாந்தனுவின் படத்திற்கு இராமநாதபுரம் படப்பிடிப்பின்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சுரேஷ் காமாட்சியை அணுகியபோது தன்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து மூன்று நாட்கள் கூடவே இருந்து அதைச் சரிசெய்து கொடுத்தார். இது போன்றவர்களை சினிமாவில் பார்ப்பது அரிது என்று கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

எனக்குப் பிடித்த கதைகளாகத்தான் தேர்ந்தெடுக்கிறேன் என்றாலும் எனக்கு மட்டும் பிடித்தால் போதாது.. இரசிகர்களுக்கும் பிடிக்கவேண்டும். சின்னப் படங்களுக்கு ஓபனிங் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. மாமனிதன் படம் கூட அப்படித்தான். அதேசமயம் ஓடிடியில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. வெற்றி நல்ல நடிகர். இப்படி இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கப் போகிறேன் என்றதும் அவரது தந்தை வெள்ளப்பாண்டி கதைக்கான எந்த உரிமையும் கோராமல் என்னிடம் தந்தார். எங்களது தயாரிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது போல, இந்த ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தியேட்டர் நெருக்கடிகள் காரணமாகத் தான் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதைக் குறைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம் என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, ஆஹா ஓடிடி தளத்தைத் தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களைப் பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன். அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூடத் தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தைச் சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டுப் படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனைத் தான் அறிமுகம் செய்திருக்கிறார்.

விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்குக் கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்குப் பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும். அந்த நாளும் வரத்தான் போகிறது

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.