திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா தான் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேரில் வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று மருத்துவமனையில் அவரை சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து ‘பாரதிராஜாவுக்கு தன்னைச் சந்திக்க வருபவர்களை நன்றாக அடையாளம் தெரிகிறது என்று ஒரு பீதியைக் கிளப்பியதை ஒட்டியே இந்த அறிக்கை வெளியாகி இருப்பதாக தெரிகிறது.
27.08.2022
என் இனிய தமிழ் மக்களே,
வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.
உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.
அன்புடன்,
பாரதிராஜா