94ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான டாம் ஹேங்க்ஸ் நடித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’படத்தின் முறையாக உரிமை பெற்ற படத்தின் ரீமேக்கே இந்த லால் சிங் சத்தா’. போயும் போயும் ஒரு படத்தை 28 ஆண்டுகள் கழித்தா ரீமேக் செய்வார்கள் என்று கேட்கத்தோன்றும். ஆனால் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரிஜினல் காவியப்படத்துக்கு ரீமேக்கில் ஓரளவுக்காவது நியாயம் செய்திருக்கிறார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.
கதைக்கு வருவோம். எதையும் உடனே கிரகித்துக்கொள்ள முடியாதவர், மற்றவர்களைவிட புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர் என்று அறிமுகமாகும் அமீர்கான் ஒரு ரயில் பயணத்தின்போது, சக பயணிகள் பொருட்படுத்துகிறார்களா இல்லையா என்பதை கூட கணக்கில் கொள்ளாமல் தனது சுய புராணத்தை சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் கதைப்படி இராணுவத்தில் சேருகிறார், ஓட்டப்பந்தய வீரராக இருக்கிறார், இந்திய ஒன்றியமே திரும்பிப்பார்க்கும் வகையிலான தொடர் ஓட்டக்காரராக இருக்கிறார். திடீரென இந்தியாவின் நம்பர் ஒன் வியாபாரியாக இருக்கிறார். இவை எல்லாவற்றிலும் அமீர்கானின் பிரத்யேக நடிப்பு சிறப்பு.
அமீர்கானின் தோழி ரூபாவாக வரும் கரீனாகபூர் அட்டகாச தேர்வு. துடிப்பும் துள்ளலுமின்றி நிதான நடிப்பிலும் நின்று பேசியிருக்கிறார் கரீனாகபூர்.
இந்திய ஒன்றிய இராணுவத் தேர்வாளர்களைச் சந்தேகப்படும்படியான வேடத்தில் நாகசைதன்யா நடித்திருக்கிறார். கொடுத்த வேடத்தைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார்.
அமீர்கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனாசிங், அவரை ஊக்கப்படுத்துபவராக வரும் மானவ் விஜ் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவுக்கருவி பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி காஷ்மீர், தில்லி, இராமேஸ்வரம் உள்ளிட்ட இந்திய ஒன்றியம் முழுதும் பயணப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ப்ரீதம் இசையில் பாடல்கள் காட்சிகளோடு இணைந்திருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் மிரட்டுகிறார்.
ஹேமந்த் சர்க்காரின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.
இக்கதையின் இந்தியத் தழுவலை நடிகர் அதுல் குல்கர்னி எழுதியிருக்கிறார். லால்சிங்சத்தா எனும் அப்பாவி இளைஞனின் வாழ்வினூடே இந்திராகாந்தி படுகொலை,அதையொட்டி நடந்த சீக்கியர் படுகொலைகள், அத்வானியின் ரத யாத்திரை, வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரை அமலாக்கம், வாஜ்பாயி ஆட்சிக்காலம் மட்டுமின்றி போகிற போக்கில் மோடியையும் காட்டுகிறது படம்.
ஒரிஜினல் படத்தை நெருங்கவில்லை என்றாலும் நிச்சயம் மெச்சத்தகுந்த படம்தான்.