சில சிறிய பட்ஜெட் படங்கள் திடீரென பேரதிர்ச்சி அளிக்கும் படமாக களமிறங்கி ரசிகர்களை திகைப்பில்,அதிர்ச்சியில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ஆதார்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி,’திருநாள்’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமாரின் மூன்றாவது படைப்பு.
எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார்.
கட்டிடத் தொழிலாளியான கருணாஸும் அவரது மனைவி ரித்விகாவும். வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த ஓரிருநாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் காணாமல் போகிறார். அவருடன் துணைக்கு வந்த இனியாவும் காணாமல் போகிறார்.
பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு மனைவியைத் தேடி அலைகிறார் கருணாஸ். கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் நெஞ்சைப் பதற வைக்கும் திரைக்கதை.
கையில் குழந்தையுடன் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே நம்மைத் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார் கருணாஸ். ஏழைக் கட்டிடத் தொழிலாளி போலவே மாறி நிற்கும் கருணாஸ் கடைசிவரை கலங்க வைத்துக்கொண்டேயிருக்கிறார்.. இத்திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கருணாஸை கருப்பு நாகேஷ் என்று இயக்குநர் பாராட்டியதாக ஞாபகம். அந்த பாராட்டுதலுக்கு தான் 100 சதவிகிதம் பொருத்தமானவன் என்று நிரூபித்திருக்கிறார் கருணாஸ்.
கருணாஸின் மனைவி ரித்விகாவுக்குப் பெரிதாக வேலையில்லை.
திருட்டுத் தொழில் செய்பவராக நடித்திருக்கும் இனியாவுக்கு இந்தப்படம் பெரும்பலம். ஆக்ரோசம் அன்பு ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி தான் ஒரு திறமையான நடிகை என்று பெயர் வாங்குகிறார்.
தலைமைக்காவலராக நடித்திருக்கும் அருண்பாண்டியன், படம் நெடுக வருகிறார்.. அநேகமாக இவருக்கு இப்படியெல்லாம் நடிக்க வரும் என்று நிரூபித்திருக்கும் முதல் படம் இதுதான் என்று அடித்துச்சொல்லலாம். மற்றும் காவல்துறை ஆய்வாளராக வரும் பாகுபலி பிரபாகர், உதவி ஆணையராக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் அதிகாரத் தோரணையை அமைதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இனியாவின் சகோதரராக வரும் திலீபன், ஆட்டோ ஓட்டுநர்கள் மேல் தப்பான எண்ணம் உருவாக்கும் அளவுக்குச் சரியாக நடித்திருக்கிறார்.
மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவினால் பெரும்பாலான இரவுக்காட்சிகளும் இண்டு இடுக்குகளீல் படமாக்கப்பட்ட காட்சிகளும் அந்த நேரத்து உணர்வுகளை பார்க்கிறவர்களுக்குக் கொடுக்கின்றன.
ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் தாலாட்டுப்பாடல் தனித்து ஒலிக்கிறது. பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.
ஒரு இரும்பின் கவுரவத்தைக் காப்பதற்காக மனித உயிரைத் துச்சமாக மதிக்கும் அதிகார வர்க்கத்தின் ம்ண்டையைப் பளார் என்று பதம் பார்த்திருக்கும் படம்தான் இந்த ‘ஆதார்’.தமிழில் நல்ல படங்கள் வருவதில்லையே என்று ஆதங்கப்படுவோர் அவசியம் பார்க்கவேண்டிய படம் ஆதார். பல விருதுகளை வெல்லப்போகும் படமும் கூட.