இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’சிங்கிள் ஷாட் படத்தை வம்பிழுக்கும் வகையில் இதுதான் உண்மையான சிங்கிள் ஷாட் மூவி என்ற அறிவிப்புடன் வந்திருக்கும் படம்.
ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார்.
அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரி கிஷோர் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் டிராமா.
ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன.
சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் பொருத்தம். காவல்துறை உயரதிகாரிகளுக்கு உதாரணமாக அவரை வைத்துக் கொள்ளலாம்.
ஒரு காவல்நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்கிற பல ஆபத்தான புதியமுயற்சிகளைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா..அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.
சில காட்சிகள் சில சமயங்களில் மெதுவாகவும் சோதிக்கும் விதத்தில் இருந்தாலும் நடுநடுவே காதல், காமம், காவல்துறையிலேயே இருந்தாலும் பெண்களின் நிலை, திருநங்கைகளின் துடிப்பு ஆகியனவற்றைக் காட்டி சமன் செய்திருக்கிறார்கள்.
இறுதியில் சார்லி கொலை மற்றும் அதற்கான காரணம் வெளிப்படும்போது அதில் அடங்கியுள்ள நீட் தேர்வு குறித்த கருத்து அதிர வைக்கிறது.
வழக்கமாக டிராமாவை சினிமா ஆக்குவார்கள்…இந்த சினிமா ஒரு டிராமா.