உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்னும் பிரசித்தி பெற்ற பழமொழியை தாதாக்கள் உலகத்துக்கு ஷிஃப்ட் செய்து ஒரு கதை செய்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது ஒரு குழு. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி நினைவு திரும்ப வைக்க முயல்கிறார். இதற்காக மும்பையிலிருந்து கோவா நோக்கி ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள்.
அதன்பின் என்ன நடந்தது? என்பதை பல பயங்கர ட்விஸ்டுகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் ரெண்டகம்.
ஒரு திரையரங்கில் சோளப்பொறி விற்றுக் கொண்டு அப்பாவி போல் அறிமுகமாகும் அரவிந்த்சாமி, அடுத்தடுத்த காட்சிகளில் வேகமெடுக்கிறார். ஜாக்கிஷெராப்பின் பிரமாண்ட அரண்மனைக்குள் அவர் நடத்தும் போர் மிரள வைக்கிறது.
குஞ்சக்கா போபனுக்கு நல்ல வேடம்.. ஈஷா ரெப்பாவுடனான காதல்காட்சிகள் ஆடுகளம் நரேனுடனான பாசக்காட்சிகள், அரவிந்த்சாமியுடனான பயணக்காட்சிகள் என எல்லா இடங்களிலும் நடிப்பில் வெற்றி பெறுகிறார். அழகான இளம்காதலரான அவருக்கும் அவருடைய நியாயமான ஆசைக்கும் அப்படி ஒரு சோகமுடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவே முடியவில்லை.
பெண்களை எக்காலத்திலும் நம்பிவிடவே கூடாது என்று ஈஷா ரெப்பாவின் வேடம் சொல்கிறது. அதைச் சரியாகச் செய்து மேலும் பயமூட்டுகிறார்.
கெளதம்ஷங்கரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பதற வைத்தாலும் காதல் மற்றும் பயணக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
அருள்ராஜ்கென்னடியின் பின்னணி இசை அளவாக அமைந்து திரைக்கதைக்கு உரம் சேர்த்திருக்கிறது.
கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார் எஸ்.சஞ்சீவ், இயக்கியிருக்கிறார் டி.பி.பெளினி.
தொடக்கத்தில் தொய்விருந்தாலும் இறுதியில் நடக்கும் திடீர்திருப்பம் நிமிர வைக்கிறது. நான் டேவிட் என்றால் கிச்சு யார்? என்று குஞ்சக்காபோபன் கேட்பதும் அதற்கு அரவிந்த்சாமி சொல்லும் பதிலும் ஆழமானவை. சிந்திக்க வேண்டியவை.
கிளைமாக்ஸ் காட்சிகளின் நிகழ்வுகளை சொல்லுவதென்பது படம் பார்ப்பவர்களின் சுவாரசிய அனுபவத்தைக் குறைத்துவிடும் என்பதால் அதை வெள்ளித்திரையில் கண்டுகளியுங்கள்.